Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு பின் என்ன நடக்கலாம்?

Advertiesment
அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு பின் என்ன நடக்கலாம்?
, வெள்ளி, 18 அக்டோபர் 2019 (21:33 IST)
ஜூபர் அகமத்
 
இரண்டு கால்பந்து மைதானங்களின் அளவிலான நிலம் தொடர்பான சர்ச்சை இந்தியாவின் வரலாற்றில் நீண்டகால சர்ச்சையாக இருந்து வருகிறது. ஆனால் அது சாதாரண நிலம் அல்ல.
அயோத்தியில் 2.77 ஏக்கர் அளவுள்ள அந்த நிலம் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆழமான நம்பிக்கை சார்ந்த இடமாக அமைந்துள்ளது.
 
பல ஆண்டுகளாக இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையில் தீர்ப்பு கூறுவதற்கான நேரம் நெருங்கிவிட்டதைப் போலத் தெரிகிறது.
 
இதுகுறித்த வழக்கை, உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக 45 நாட்கள் விசாரித்து கடந்த புதன்கிழமை விசாரணையை நிறைவு செய்துள்ளது. நாட்டில் அரசியல் சூழ்நிலை பரபரப்பாக மாறியுள்ளது.
 
நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், மாநில அரசு அயோத்தியில் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
 
இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று இதில் தொடர்புடைய மூன்று தரப்பினருமே நம்புகின்றனர்.
 
சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் ராமர் ஆலயம் கட்டப் போவதாக பல இந்து அமைப்புகள் வாக்குறுதி அளித்துள்ளன. கட்டப்படவுள்ள கோவிலில் நிறுவுவதற்காக சிற்பங்களைச் செதுக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
 
 
ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பளிக்கும்
 
மூன்று தரப்பினரின் விவாதங்களின் அடிப்படையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல்சாசன அமர்வு, தீர்ப்பு அளிக்கவுள்ளது.
 
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1949 ஆம் ஆண்டில் இருந்து நீடித்து வரும் ராமர் கோவில் - பாபர் மசூதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இந்தத் தீர்ப்பு அமையக்கூடும்.
 
அரசியல் ரீதியாக மிகவும் உணர்வலைகளை எழுப்பக்கூடியதாக இருக்கும் இந்தச் சர்ச்சையில் மூன்று தரப்பினருக்கு ஈடுபாடு உள்ளது. இரண்டு தரப்பினர் இந்து அமைப்புகளாகவும், மூன்றாவது தரப்பு முஸ்லிம் தரப்பாகவும் உள்ளது.
 
நிர்மோஹி அக்காரா என்ற இந்து அமைப்பு 1959ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முஸ்லிம்கள் தரப்பில் சன்னி வக்பு வாரியம் 1961ல் வழக்கு தொடர்ந்தது. ராம் லீலா விரஜ்மன் என்ற இந்து அமைப்பு 1989ல் நீதிமன்றத்தை நாடியது.
 
மூன்று தரப்பினருமே 2.77 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
 
அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010ல் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், அந்த நிலத்தை மூன்று தரப்பினருக்கும் பிரித்துக் கொடுத்தது. ராமர் பிறந்ததாக ராம் லல்லா விர்ஜமன் அமைப்பு குறிப்பிடும் பகுதி அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டது. இந்த இடம் ஏற்கெனவே பாபர் மசூதி இருந்த இடமாகும்.
 
சர்ச்சைக்குரிய பகுதியின் உள்பகுதியாக இது உள்ளது. வெளிப்பகுதி நிர்மோஹா அக்காராவுக்கும், அதற்கும் வெளியில் உள்ள பகுதி சன்னி வக்பு வாரியத்துக்கும் அளிக்கப்பட்டது.
 
தோல்வியடைந்த சமரச முயற்சி
 
ஆனால், மனுதாரர்கள் மூவருமே அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
உச்சநீதிமன்றத்தில் 2011 ஆம் ஆண்டில் விசாரணை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் பல ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு, சில தினங்களுக்கு முன்பு விசாரணை தொடங்கி 40 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அக்டோபர் 16 ஆம் தேதி விசாரணை நிறைவு பெற்றது.
 
ஆனால் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சமரச தீர்வுக்கான கமிட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
 
சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டது என்று மூன்று தரப்பினரும் கூறுகின்றனர். இப்போது இரண்டாவது சுற்று சமரச முயற்சி குறித்த அறிக்கையை அந்தக் கமிட்டி சமர்ப்பித்துள்ளது. ஆனால், அறிக்கையில் உள்ள விஷயங்கள் பற்றி தெளிவான தகவல் எதுவும் இல்லை. சமரச முயற்சி குறித்த தகவல்களை வெளியிடும் அனுமதியை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
 
இப்போது தீர்ப்புக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று மூன்று தரப்பினரும் நம்புகின்றனர்.
 
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சில சிறிய மாறுதல்களுடன் ஏற்கப்படலாம் என சிலர் நம்புகின்றனர். நீதித் துறை செயல்பாடுகளில் இதுபோன்ற யூகங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று, தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 
இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் என்ன நடக்கும்?
 
இவ்வாறு நடந்தால், ராமர் கோயில் கட்டும் வாய்ப்பு இரண்டு இந்து அமைப்புகளில், அதாவது ராம் லல்லா மற்றும் நிர்மோஹி அகாரா அமைப்புகளில் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி நீடிக்கும்.
 
அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் இந்து அமைப்புகளுக்குள் ஒருமித்த கருத்து உள்ளபோதிலும், கோயிலை யார் கட்டுவது என்பதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.
 
வழக்கில் தங்களுக்கு வெற்றி கிடைத்தால், கோயிலை தாங்கள் தான் கட்டுவோம் என்று நிர்மோஹி அக்காரா அமைப்பின் நிர்வாகி கார்த்திக் சோப்ரா கூறுகிறார்.
 
``பழைய தீர்ப்பு செல்லும் என ஏற்கப்பட்டால் இந்து சமுதாயத்தினர் மற்றும் அதன் சாதுக்கள் மற்றும் துறவிகளின் உதவியுடன் பிரமாண்டமான ராமர் கோவிலை நாங்கள் கட்டுவோம்'' என்று அவர் கூறியுள்ளார்.
 
விசுவ இந்து பரிஷத் மற்றொரு இந்து அமைப்பான ராம் லல்லா அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறது. ராம் ஜன்மபூமி நியாஸ் சார்பில் கோவில் கட்டப்படும் என அதன் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான சம்பத் ராய் கூறியுள்ளார்.
 
விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாம்பாட் ராய்
 
ராமர் கோவிலைக் கட்டுவதற்கான செயல்பாடுகளை விரைவுபடுத்தவும், கோவிலை பராமரிக்கவும் அறக்கட்டளையாக ராம ஜன்மபூமி நியாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.
 
ஆறு கோடி இந்துக்களிடம் இருந்து நியாஸ் அமைப்பு நன்கொடைகள் வசூலித்து, ராமர் கோவில் கட்டுவதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளையும் செய்துள்ளது என்று சம்பத் ராய் கூறுகிறார்.
 
``கட்டுமானத்துக்கான சுமார் 60 சதவீத பொருட்கள் தயாராக உள்ளன. ராமர் கோவிலைக் கட்டுவதற்கு நாங்கள் முழு அளவில் தயாராக இருக்கிறோம்'' என்கிறார் அவர்.
 
ஆனால் கோயில் நிர்வாகப் பொறுப்பு யாருக்கு கிடைக்கும். ``கட்டுமானப் பணி முடிந்த பிறகு அதுகுறித்த முடிவு எடுக்கப்படும்'' என்று சம்பத் ராய் குறிப்பிட்டார்.
 
இந்தப் பணிகளுக்காக மட்டுமே நியாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. எந்த மாதிரியான ராமர் சிலை அங்கு நிறுவப்படும்? குழந்தை ராமர் சிலையா அல்லது வில் வைத்திருக்கும் ராமர் சிலையா?
 
வில் வைத்திருக்கும் ராமர் சிலையைத் தான் நிறுவ வேண்டும் என்று நிர்மோஹி அமைப்பு வலியுறுத்துகிறது. ஆனால் ராம் லல்லா விர்ஜமான் அமைப்பை ஆதரிப்பதவர்கள், ராம் லல்லா சிலை 1949ல் இருந்து அங்கு உள்ளது என்றும், அதனால் குழந்தை ராமர் சிலை தான் அங்கு நிறுவப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
 
``ராம லல்லா சிலை தான் அங்கு நிறுவப்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை'' என்கிறார் சம்பத் ராய்.
 
சன்னி வக்பு வாரியத்துக்கு ஆதரவாக தீர்ப்பு அமைந்தால் என்னவாகும்?
 
நிர்மோஹி அக்காரா சேர்ந்த கார்த்திக் சோப்பிரா
சன்னி வக்பு வாரியத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், அந்த நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமீபத்தில் முஸ்லிம் அறிவுஜீவிகள் குழுவினர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
சன்னி வக்பு வாரியத்தின் பிரதிநிதியான இக்பால் அன்சாரி இந்த யோசனையை ஏற்றுக்கொள்கிறாரா? இந்தக் கேள்விக்கு அவர் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை.
 
``பாருங்கள். தீர்ப்பு இன்னும் வரவில்லை. அறிவுஜீவிகளும், வேறு சிலரும் இந்தப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுகிறார்கள், அதை நாங்கள் வரவேற்கிறோம். நீதிமன்றம் மூலம் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இப்போது தீர்ப்பு வெளியாவதற்கான காலம் நெருங்கிவிட்டது. அநேகமாக இந்தப் பிரச்சினைக்கு அதில் தீர்வு கிடைக்கும்'' என்று அவர் கூறினார்.
 
தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வராவிட்டால் என்ற சாத்தியக்கூறு பற்றி பரிசீலிக்கவே நிர்மோஹி அக்காரா அமைப்பு விரும்பவில்லை. சர்ச்சைக்குரிய நிலத்தில் உரிமை கோரும் அமைப்பாக முஸ்லிம் குழுவினரை நிர்மோஹி அக்காரா ஏற்றுக் கொள்கிறது என்றாலும், தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்றும் நம்புகிறது.
 
அப்படி நடக்காது என்று ராம் லல்லா விரஜ்மன் தலைமை குரு கூறுகிறார். ஏன் அப்படி சொல்கிறார்?
 
தேவை ஏற்பட்டால் கோயில் கட்டுவதற்கு அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். ``முதலில் நீங்கள் நீதிமன்றத்தை நம்புங்கள் என்று இந்திய பிரதமர் கூறியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்காது என்று அவர் கூறியுள்ளார்'' என்று தலைமை குரு தெரிவிக்கிறார்.
 
ராம் லல்லா விரஜ்மனுக்கு ஆதரவாக தீர்ப்பு அமைந்தால் என்னவாகும்?
 
 
``ராம் லல்லாவும் எங்களுடைய அமைப்புதான். நிர்வாகத்தின் பொறுப்பை அளிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் நாங்கள் கேட்டிருக்கிறோம். வழிபாடு செய்தல் மற்றும் கடவுளுக்கு சேவை செய்யும் உரிமையை எங்களுக்குத் தர வேண்டும் என்று நீதிமன்றத்திடம் நாங்கள் கேட்டிருக்கிறோம்'' என்று நிர்மோஹி அக்காரா அமைப்புடன் தொடர்புடைய 94 வயதான ராமச்சந்திர ஆச்சார்யா கூறுகிறார்.
 
சமரச கமிட்டி கூட்டங்களில் நிர்மோஹி அக்காரா சார்பில் தருண்ஜித் வர்மா ஆஜராகியுள்ளார். 1866ல் இருந்து 1982 வரையில் ராம் லல்லாவில் நிர்மோஹி அக்காரா சேவை செய்திருக்கிறது என்று அவர் கூறுகிறார். தங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட அந்த உரிமையைத்தான் அவர்கள் கேட்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.
 
கார்த்திக் சோப்ராவும் நிர்மோஹி அக்காராவுடன் தொடர்புடையவர். ராம் லல்லாவின் உண்மையான பராமரிப்பாளர் நிர்மோஹி அக்காரா தான் என்று அவர் கூறுகிறார்.
 
மனு தாக்கல் செய்ததில் ஒரு நட்பு அமைப்பாக ராம் லல்லா விரஜ்மனை நாங்கள் கருதுகிறோம். (ராம் லல்லா விரஜ்மன் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வால் 1989ல் மனு தாக்கல் செய்தார்.) ``ஆனால் முக்கியமான நட்பு அமைப்பாகவும், ராம லல்லாவின் பராமரிப்பாளராகவும் இருப்பது நிர்மோஹி அகாரா'' என்று அவர் கூறுகிறார். ராம் லல்லாவுக்கான சர்ச்சை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தன் சார்பில் அதில் நிர்மோஹி அக்காராதான் மனுதாரராக உள்ளது என்கிறார்.
 
``எந்த இந்து அமைப்பு வழக்கில் வெற்றி பெறுகிறது என்பது பற்றி கவலை இல்லை. ராமர் கோவில் கட்டுவது என்ற கருத்தில் அவர்களுக்குள் ஒருமித்த கருத்து உள்ளது. ராம் லல்லா விரஜ்மனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அனைத்து இந்துக்களுக்கும் கிடைத்த வெற்றியாக அது இருக்கும்'' என்று ராம் லல்லா விரஜ்மனின் தலைமை குரு சத்யேந்திர தாஸ் கூறியுள்ளார்.
 
ஆரம்பத்தில் இந்த வழக்கில் நிர்மோஹி அகாராவும், முஸ்லிம் அமைப்பும் மட்டும்தான் மனுதாரர்களா இருந்தன என்பது உண்மைதான் என்று விசுவ இந்து பரிஷத் மூத்த நிர்வாகியான சம்பத் ராய் ஒப்புக்கொள்கிறார். ஆனால் நிர்மோஹி அமைப்புக்கு ஒரு கேள்வியை அவர் முன்வைக்கிறார்.
 
``1949 முதல் 1989 வரையில் அவர்கள் என்ன செய்தார்கள்? நிர்மோஹி அக்காரா தரப்பில் சட்டபூர்வமான பலவீனங்கள் இருந்ததால் நாங்கள் 1989ல் நீதிமன்றத்தை அணுகினோம்'' என்கிறார் அவர்.
 
சர்ச்சைக்குரிய கட்டட அமைப்பு- 1992ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்
``இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். இந்தப் பிரச்சினை கீழமை நீதிமன்றத்தில் இருந்தது, பின்னர் உயர்நீதிமன்றம் சென்றது, இப்போது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. நீண்டகாலமாக இது அரசியல் பிரச்சினையாகவும் உள்ளது. இப்போது இது முடிவு பெற வேண்டும்'' என்று இக்பால் அன்சாரி கூறுகிறார்.
 
முஸ்லிம் குழுவினருடன் சமரசத் தீர்வு காண்பது பற்றிய கருத்து குறித்து விசுவ இந்து பரிஷத்தின் சம்பத் ராயிடம் கேட்டபோது, இதுகுறித்து முடிவு எடுக்க முஸ்லிம்கள் மிக நீண்ட அவகாசம் எடுத்துக் கொண்டதாகக் கூறினார்.
 
``இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. வெற்றியா தோல்வியா என்ற வகையில் நாங்கள் இதைப் பார்க்கவில்லை. தீர்ப்பு எங்களுக்குச் சதகமாக வந்தால், உரிமை கோரும் முஸ்லிம்களை எப்படி கையாள்வது என்பதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். ஆனால் அவர்கள் இப்போது எதையும் கேட்கக் கூடாது. நீண்டகாலத்துக்கு முன்பே அவர்கள் ஒரு சமரசத்துக்கு முன்வந்திருக்க வேண்டும். இப்போது சில அறிவுஜீவிகள் சமரசத் திட்டத்தை முன்வைக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்தில் இவர்களுக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. 40-50 இமாம்கள் சேர்ந்து கூட்டாக ஒரு திட்டத்தை முன் வைத்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும். ஆனால், பரவாயில்லை. அவர்கள் ஒரு திட்டத்தை முன் வைத்துள்ளனர். நாங்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறுகிறோம்.'' என்று அவர் கூறினார்.
 
நிர்மோஹி அக்காராவுக்கு ஆதரவாக தீர்ப்பு அமைந்தால் என்னவாகும்?
 
அவர்கள் வெற்றி பெறுவதாக இருந்தால், அலகாபாத் உயர்நீதிமன்றத்திலேயே வெற்றி பெற்றிருப்பார்கள் என்று விசுவ இந்து பரிஷத் நிர்வாகி சம்பத் ராய் கூறுகிறார்.
 
``அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு எப்படி மாற்றப்படுகிறது என்பதைப் பார்க்க நான் விரும்புகிறேன். இந்த வழக்கு அந்த நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது. ஒன்பதரை மாதங்கள் விசாரணை நடைபெற்றது. இங்கு உச்சநீதிமன்றம் 40 நாட்களில் விசாரணையை முடித்துள்ளது. 15 ஆண்டுகள் நிலுவையில் இருந்து, ஒன்பதை மாதங்கள் விசாரித்து அளிக்கப்பட்ட தீர்ப்பு எப்படி மாற்றப்படப் போகிறது என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம்'' என்று அவர் கூறுகிறார்.
 
நீதிமன்றத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்று சன்னி வக்பு வாரியத்தைச் சேர்ந்த இக்பால் அன்சாரி கூறுகிறார்.
 
``இரண்டு இந்து அமைப்புகளுமே தீர்ப்பு குறித்து மிகவும் நம்பிக்கையுடன் உள்ளன. இந்தப் பிரச்சினை நாடு முழுவதிலும் எதிர்பார்க்கப்படும் விஷயமாக இருப்பதால், இதில் அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் மிக முக்கியமான பங்கு உள்ளது. இந்தப் பிரச்சினையில் நிறைய பேர் நீண்ட காலமாக அரசியல் ஆதாயம் தேடி வந்திருக்கிறார்கள். நீதிமன்றத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்'' என்று அவர் கூறினார்.
 
தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்று நிர்மோஹி அக்காரா நம்புகிறது. ராமர் கோயில் பற்றி சாதாரண இந்துக்கள் தவறாக வழிநடத்தப் பட்டுள்ளனர் என்று அக்காராவின் மூத்த உறுப்பினரான மகந்த் ராஜா ராமச்சந்திர ஆச்சார்யா கூறுகிறார்.
 
``இந்தப் பிரச்சினை தொடர்பாக நாட்டில் வகுப்புக் கலவரங்கள் நடந்துள்ளன. சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில், மசூதி அல்லது சர்ச்சைக்குரிய கட்டடத்தை தாங்கள் இடித்தார்களா என்பதை அரசியல்வாதிகள்தான் கூற வேண்டும். ஆனால் அது எங்கள் பொறுப்பில் இருந்தது. உள்பகுதியும் வெளிப்புறமும் எங்கள் பொறுப்பில் இருந்தன. அதை மீண்டும் எங்களிடமே தர வேண்டும்'' என்று அவர் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னிந்திய அளவிலான ஜூடோ போட்டி ! கரூர் பரணி வித்யாலாயா பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்