Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"நாங்கள் சகோதரர்கள், எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை" - அயோத்தி இளைஞர்களின் குரல்!

, சனி, 5 பிப்ரவரி 2022 (10:59 IST)
அயோத்தி என்பது சர்ச்சைக்குரிய, மிகவும் பதற்றமான ஒரு பகுதி என்ற பரவலான கருத்துக்கு நேர் எதிராக இருக்கிறது அங்குள்ள தற்போதைய நிலைமை. உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக அயோத்தியில் பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டபோது பேசிய வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞர்களும் "நாங்கள் சகோதரர்கள், நண்பர்கள். எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை" என்று அழுத்தமாகக் கூறினார்கள்.
 
கோயில், மசூதி போன்ற மதப் பிரச்னைகளை விட்டுவிட்டு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சி திட்டங்கள் போன்றவற்றில் அக்கறை காட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
 
அயோத்தியில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. மசூதிகளையும் பார்க்க முடியும். இப்போது அயோத்தி என்றே பரவலாக அறியப்படுகிற, குறிப்பிடப்படுகிற அயோத்தியின் இரட்டை நகரமான ஃபைசாபாத்தில் இஸ்லாமியர்களும், இஸ்லாமிய கட்டுமானங்களும் அதிகமாக இருக்கின்றன.அயோத்தியையும் ஃபைசாபாத்தையும் இணைக்கும் சாலையில் அமைந்திருக்கும் சாகேத் பி.ஜி. கல்லூரியில் சில மாணவர்களை பிபிசி தமிழ் குழு சந்தித்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படிக்கும் அந்தக் கல்லூரியில் சுமார் 30 சதவிகிதம் வரை இஸ்லாமிய மாணவ, மாணவிகள் படிப்பதாக அவர்கள் கூறினார்கள்.
 
"கல்லூரியிலும், வெளியிலும் மத ரீதியாக நாங்கள் யாரையும் பார்ப்பதில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் பத்துப் பன்னிரண்டு இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நேரம் செலவிடுவது எனக்கு மகிழ்ச்சியானது. அவர்களது வீட்டு விழாக்களுக்கு நாங்கள் செல்வோம். எங்களது நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்பார்கள்" என்று கூறினார் கல்லூரியில் முதுநிலை கணிதம் படிக்கும் அமித் குமார் குப்தா.
webdunia
"மதம் என்பது பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்க்கும் படிவங்களில் மட்டுமே கேட்கப்படுகிறது. மற்றபடி கல்வி நிறுவனங்களுக்குள் நுழைந்த பிறகு எந்த வகையான பாகுபாடும் இல்லை. ஒரே கூரையின்கீழ் ஒரே மாதிரியாகத்தான் பழகி வருகிறோம்."
 
இதே கல்லூரியில் படிக்கும் மணிஷ் சர்மாவும் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி தொடர்பான பணிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்."தேர்தல் நேரத்தில் மட்டும்தான் இந்து - முஸ்லிம் என்ற பேச்சே எழுகிறது. மற்ற நேரங்களில் இதுபற்றி எதுவும் பேசப்படுவதில்லை. அமைச்சர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின் பேச்சுகள் தேர்தல் நேரத்தில் மட்டும் மாறிவிடுகிறது. ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது மட்டுமே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தராது" என்றார் மணிஷ் சர்மா.
 
"நல்ல கல்வி கிடைத்தால்தான் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் அடுத்தடுத்து வரும் அரசுகள் இதில் கவனம் செலுத்துவதில்லை. மழை பெய்தால் சேற்றில் இருக்கும் தவளைகள் வெளியே வருவதுபோல் தேர்தல் நேரம் என்றால் இந்து - முஸ்லிம் பிரச்னை வந்து விடுகிறது. இதை விட்டுவிட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்தினால், நல்ல மாநிலம் உருவாகும். அதன் மூலம் நாடு வளம்பெறும்" என்றார் அமித்.
 
மற்றொரு மாணவரான விவேக் சிங், தன்னுடைய பள்ளிக் காலத்தில் இருந்தே இஸ்லாமிய நண்பர்களுடன் எந்த வேறுபாடும் இன்றி பழகி வருவதாகத் தெரிவித்தார்.
 
"நீண்ட காலமாக இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். நான் படித்த ராணுவப் பள்ளியில் என்னுடன் படித்த 33 பேரில் சுமார் 10 பேர் இஸ்லாமியர். அரசியலுக்காகத்தான் எங்களுக்குள் பிரச்னை இருப்பது போன்று காட்டப்படுறது. சில அரசியல்வாதிகள் ஆத்திரமூட்டும் வகையிலும் வெறுப்பைத் தூண்டும் வகையிலும் பேசுகிறார்கள். ஆனால் எங்களுக்குள் அப்படி எதுவும் இல்லை. கோயில்கள், மசூதிகள், குருத்துவாராக்கள் என எங்கும் பிரச்னையில்லை" என்றார் அவர்.
 
ஃபைசாபாத் பகுதியில் நவாப் ஷுஜா உத்-தௌலாவின் கல்லறையும் மசூதியும் இருக்கும் இடத்துக்குச் பிபிசி குழு சென்றது. 1700களில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவரான ஷுஜா உத்-தௌலா இறந்த இடம் அது. அவரது கல்லறையும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்களும் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்லாமியர் அதிகமாக வசிக்கிறார்கள்.
webdunia
ஆயினும் அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் பகுதியாகவே இது இருப்பதைக் காண முடிந்தது.
 
'சகோதரர்களைப் பிரிக்காதவரே உண்மையான மனிதர்'
அங்கு இஸ்லாமிய இளைஞர்கள் பலர் பிபிசி தமிழ் குழுவுடன் பேசுவதற்கு முன்வந்தார்கள். அமித்தும் விவேக்கும் என்ன கூறினார்களோ அதையே எதிரொலிப்பது போல் இருந்தது இஸ்லாமிய இளைஞர்களின் பேச்சு.
 
"எனக்கு நிறைய இந்து நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இங்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தேர்தல் மூலமாக ஏதாவது நல்லது நடக்கும் என்று நினைக்கிறேன்" என்றார் 22 வயதாகும் முகமது கவுசல் சித்திக்கி.
 
அரசுப் பணியில் இருக்கும் முகமது ஷதாப் சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
 
"மோதி, யோகி, அகிலேஷ் என யார் ஆட்சிக்கு வந்தாலும். இப்போது இருக்கும் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் பேணிக் காக்க வேண்டும். சகோதரர்களைப் பிரிக்காதவரே உண்மையான மனிதர். ஒற்றுமையாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சியடையாது" என்றார்.
 
"இந்தப் பகுதியில் மசூதியும் ஷூஜா உத் தௌலா கல்லறையும் இருக்கிறது. இங்கு இந்துக்கள் முஸ்லிம்கள் என அனைவருமே வருகின்றனர். எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை" என்றார் அமன் அப்பாஸ்.
 
இந்துக்கள் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் சீக்கியர்களும் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வருவதாகத் தெரிவித்தார் பரம்ஜித் சிங்.
 
"இந்து முஸ்லிம்கள் என அனைவரும் ஒற்றுமையாக இங்கு இருப்பதுதான் உண்மையான ராம்ராஜ்யம். அனைத்து மக்களும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று ராமர் விரும்பினார். அந்தப் பாரம்பரியம் தொடர வேண்டும்" என்றார் அவர்.
 
பிபிசி குழுவிடம் பேசிய பலரும் அரசியலைக் கடந்த மத நல்லிணக்கம் இருப்பதாகவே கூறினர். அரசியலை உற்று நோக்குவோரும் இதே கருத்தைத் தெரிவித்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பானி, அதானி ஆகியோருக்கு கீழே சென்ற பேஸ்புக் நிறுவனரின் சொத்து!