Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உத்தர பிரதேச தேர்தலில் அயோத்தி விவகாரம் தற்போதும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Advertiesment
Uttar Pradesh
, வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (10:21 IST)
அயோத்தி ராமர் கோயில் விவகாரம் இல்லாமல் உத்தர பிரதேச தேர்தல் பரப்புரை இல்லை எனும் அளவுக்கு மாநில அரசியலுடன் இந்தப் பிரச்னை பிணைந்திருக்கிறது. இந்த தேர்தலிலும் அத்தகைய பிணைப்பு இருக்கிறது.
 
"அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதை தடுப்பதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்" என்று அண்மையில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தைப் பார்வையிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டது சமாஜ்வாதி கட்சியையும் அதன் தலைவர் அகிலேஷ் யாதவையும் என்று இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் புரியும்.
webdunia
அமித் ஷாவுக்கு பதில் தரும் வகையில், மாநிலங்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையின்போது பேசிய சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், "அகிலேஷ் யாதவ் இன்னும் வேகமாக கோயிலை கட்டி முடிப்பார்" என்று கூறினார்.
 
தேர்தலில் இந்த விவகாரத்தை பாரதிய ஜனதா கட்சி தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதில் சமாஜ்வாதி கட்சி கவனமாக இருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
 
இப்படியாக வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலிலும் ராமர் கோயில் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.
 
தேசிய அரசியலிலும் உத்தர பிரதேச மாநில அரசியலிலும் ராமர் கோயில் விவகாரம் பாரதிய ஜனதா கட்சிக்கு பலன் தந்திருப்பதை பல தேர்தல்களில் பார்க்க முடிந்திருக்கிறது. ஆனால், இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை அயோத்தி விவகாரம் முன்பு போன்ற தாக்கத்தை தேர்தலில் ஏற்படுத்தாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
 
"அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. அதனால் இப்போது அரசியல் ஆதாயம் அடைவதற்கு எதுவும் இல்லை," என்கிறார், பத்திரிகையாளர் அர்ஷத் அஃப்சல் கான்.
 
தீவிரமாக நடக்கும் கோயில் கட்டும் பணி
webdunia
ராட்சத கிரேன்கள், இயந்திரங்கள், ஏராளமான பணியாளர்களுடன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இயந்திர துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கோயில் கட்டப்படும் இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
 
இவ்வளவுக்கும் மத்தியில் நூற்றுக்கணக்கான மக்கள் கோயிலில் வழிபடச் சென்று கொண்டிருக்கிறார்கள். தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கோயிலில் வழிபட வரிசையில் அனுமதி வழங்கப்படுகிறது. கோயில் கட்டுமானப் பணிகளையும் சற்று தொலைவில் இருந்து பார்வையிட முடியும்.
 
பாதுகாப்பு காரணங்களுக்காக மொபைல் போன் ஸ்மார்ட் வாட்ச் கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அப்படி எதையும் எடுத்துச் சென்றால் ஆங்காங்கே சிறு கடைகளில் இருக்கும் லாக்கர்களில் வைத்துவிட்டுத்தான் கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்கு அருகே செல்ல முடியும். எங்கிருந்தும் புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
 
ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் ராம்ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை வழங்கும் தகவல்களின்படி ராமர் கோயிலுக்கான அடித்தளப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. தளத்தில் கிரானைட் கற்கள் வைக்கும் பணிகளும் ராட்சத இயந்திரங்களின் உதவியுடன் தொடங்கப்பட்டுவிட்டன.
 
2023-ம் ஆண்டுக்குள் கோயில் பணிகள் நிறைவடையும் என்றும், தற்போது இருக்கும் இடத்தில் இருந்து ராமர் சிலைகள் உரிய இடத்துக்கு மாற்றப்படும் என்றும் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது. இது மக்களவைக்குத் தேர்தலுக்கு முந்தைய ஆண்டு என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.
 
"தேர்தலுக்குப் பிறகு மசூதி கட்டும் பணிகள்"
ராமர் கோயில் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. ஆயினும் தேர்தலுக்குப் பிறகு இதற்கான பணிகள் தொடங்கப்படலாம் என இதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
மசூதியைப் பொறுத்தவரை, வழக்கமான குவிமாடங்கள் போன்றவை இல்லாமல், மருத்துவமனை, அன்னதான வளாகம், தொல்பொருள் காட்சியகம் உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இருக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
புதிதாக அமைய இருக்கும் மசூதியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் வரை தொழுகை நடத்த முடியும். இது பாபர் மசூதியைப் போல மூன்று மடங்கு. கூடவே அமையவிருக்கும் மருத்துவமனை மசூதியைப் போல ஆறு மடங்கு பரப்பளவைக் கொண்டிருக்கும்.
 
அயோத்தியில் சூழல் என்ன?
 
அயோத்தி விவகாரம் ஒரு காலத்தில் தேசிய அரசியலையே புரட்டிப் போட்டிருக்கிறது. மத்தியிலும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆட்சி அமைப்பதற்கு உதவியிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் அனைத்துத் தேர்தல்களும் இந்த விவகாரம் தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது. அயோத்தியால் நாட்டின் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டதும் உண்டு.
 
அயோத்தியை பற்றி நாடு முழுவதும் தீவிரமான விவாதங்கள் இருந்தாலும் சமீப காலத்தில் அயோத்தி அமைதியாகவே இருந்து வந்திருக்கிறது. ராமர் கோயில் விவகாரம் நாடு முழுவதும் தீவிரமாக விவாதிக்கப்பட்டபோதும் கூட தொடர்புடைய இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இதை சுமுகமாக தீர்க்கவே முயற்சித்தனர்.
 
அயோத்தியும் அதன் அருகிலேயே இருக்கும் ஃபைசாபாத் நகரமும் தனித்தனியே பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு குடியிருப்புகளால் நெருங்கியிருக்கின்றன. இது இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் பொருந்தும் என்கிறார் பத்திரிகையாளர் அர்ஷத்.
 
"அயோத்தியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர் ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். பண்பாட்டு ரீதியிலும், தொழில்கள் காரணமாகவும் இந்தப் பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர்களுக்குள் பெரிய அளவில் மத ரீதியிலான பகையோ, கசப்போ ஏற்பட வாய்ப்பில்லை" என்கிறார் அவர்.
 
அயோத்தியில் தேர்தல் கள நிலவரம் என்ன?
 
உத்தர பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே அயோத்தி தொகுதியிலும் சமூக அடிப்படையிலேயே வாக்குகள் பிரிவதற்கான வாய்ப்பிருக்கிறது. இது ஒரு நகர்ப்புறத் தொகுதி.
 
இங்கு சுமார் 35 சதவிகிதம் வரை முற்பட்ட வகுப்பினரும், ஏறத்தாழ 30 சதவிகிதம் தலித் மக்களும், 20 சதவிகிதம் வரை இஸ்லாமியரும் வசிப்பதாக மதிப்பிடப்படுகிறது. பொதுவாக முற்பட்ட வகுப்பினரின் வாக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்குக் கிடைக்கும் என்றாலும் இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார் அர்ஷத்.
 
"அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தைச் சுற்றிய பகுதிகளில் பல நெருக்கமான தெருக்கள் இருக்கின்றன. அவற்றை அகலப்படுத்துவதற்கான பணிகளை மாநில அரசு செய்து வருகிறது. இதில் பல கட்டடங்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் உரிமையாளர்கள் பெரும்பாலும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இது பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவாக அமைய வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாகவே முதலில் அயோத்தி தொகுதியில் போட்டியிட முதல்வர் யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை என்றும் தகவல்கள் உண்டு" என்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயிரத்திற்கும் மேல் பதிவாகும் தினசரி உயிரிழப்புகள்! – இந்தியாவில் கொரோனா!