Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத வன்முறை: அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை

Advertiesment
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத வன்முறை: அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை
, வியாழன், 31 ஜனவரி 2019 (14:09 IST)
இந்திய மக்களவை தேர்தலின்போது, பிரதமர் மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்ந்து ஹிந்து தேசியவாத கருத்துகளை வலியுறுத்தினால் வகுப்புவாத வன்முறைகளுக்கான சாத்தியம் அதிகம் என்று அமெரிக்க உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.



உலகளாவிய அச்சுறுத்தல்களின் மதிப்பீடு தொடர்பாக, அமெரிக்க உளவு அமைப்பான தேசிய உளவுப் பிரிவின் இயக்குநர் டேனியல் ஆர்.கோட்ஸ் தயாரித்த அறிக்கை, அமெரிக்க செனட் சபையின் உளவு பிரிவுக்கான குழுவிடம் ஜனவரி 29-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தெற்காசியாவில் நிலவும் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில், இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் தொடர்புடைய விவரங்களும், அந்த நாடுகள் எதிர்கொள்ளும் சாத்தியம் மிகுந்த அச்சுறுத்தல்கள் குறித்தும் அமெரிக்க உளவு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

அதில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் தொடர்ச்சியாக நடந்து வரும் அணு ஆயுத திட்டங்களால் தெற்காசியாவில் அணு பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிய வகை அணு ஆயுதங்களின் அறிமுகம், இந்த பிராந்தியத்தில் புதிய வடிவிலான ஆபத்துகளை தீவிரமாக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில், குறுகிய தூர இலக்கை தாக்கக் கூடிய புதிய வகை தந்திரோபாய ஆயுதங்கள், கப்பல் மற்றும் போர் விமானத்தில் இருந்து செலுத்தக் கூடிய ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகள் போன்ற புதிய வகை ஆயுதங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்க உளவு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியா, தனது முதலாவது அணு ஏவுகணைகள் அடங்கிய ஆயுதம் தாங்கி நீர்மூழ்கி கப்பலை இயக்கியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

webdunia



சந்தை நிலவரம்

பிரேசில், இந்தியா, இந்தோனீசியா. துருக்கி உள்ளிட்ட நாடுகளில் பண மதிப்பு பெரிய அளவில் குறைந்து வருவதால், முதலீட்டாளர்கள் அமெரிக்க டாலர் முறையில் சேவை வழங்க சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அதன் காரணமாக 2018-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே முதலீட்டாளர்கள் அந்த நாடுகளில் முதலீடு செய்யாமல் தவிர்த்து விட்டதாகவும் அமெரிக்க உளவு அறிக்கை கூறுகிறது.

தேர்தல் பதற்றம்


ஆஃப்கானிஸ்தானில் இந்த ஆண்டு ஜூலை மாத மத்தியில், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால் தாலிபன்கள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தலாம் என்றும், தீவிரவாத குழுக்களை அணுகுவதில் பாகிஸ்தான் செயல்பாடு போதுமானதாக இல்லை என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை தகவல் இடம்பெற்றுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் எதிர்வரும் இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின்போது வகுப்புவாத வன்முறை ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு ஆபத்து

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத குழுக்களுக்கு, அந்நாட்டில் பாதுகாப்பான புகலிடம் கிடைத்து வரும் சாதகமான நிலையை பயன்படுத்தி, அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் அவை தாக்குதல்களை நடத்தத் திட்டமிடலாம் என்றும் அமரிக்க உளவு அமைப்பு கூறியுள்ளது.


webdunia


இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, தொடர்ந்து ஹிந்து தேசியவாத கருத்துகளை வற்புறுத்தி வந்தால், மக்களவை பொதுத்தேர்தலின்போது வகுப்புவாத வன்முறைக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்று அமெரிக்க உளவு அமைப்பு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.


பிரதமர் மோதியின் முதலாவது பதவிக்காலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் இந்திய மாநிலங்களில் வகுப்புவாத பதற்றங்கள் ஆழமாக இருப்பது, ஹிந்து தேசியவாத மாநிலத் தலைவர்கள், தங்களின் ஆதரவாளர்கள் மூலம் குறைந்த அளவிலான வன்முறையை தூண்டும் ஹிந்து தேசியவாத பிரசார பார்வையோடு பிரச்னைகளை அணுகுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் இனவாத மோதல்கள், இந்திய முஸ்லிம்களை தனிமைப்படுத்தலாம் என்றும் அது இஸ்லாமியவாத தீவிரவாத குழுக்கள் இந்தியாவில் தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொள்ள காரணமாகலாம் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

webdunia


இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் சீன பிரதமர் ஷி ஜின்பிங்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அலுவல்பூர்வமற்ற முறையில் சந்தித்துக்கொண்டபோது இரு நாடுகளிடையே பதற்றங்கள் மற்றும் உறவுகளை இயல்பாக மாற்றுவது குறித்து பேசினாலும், அந்த நாடுகளின் தலைமை, எல்லை பிரச்னைகளுக்கான தீர்வைக் காணவில்லை என்றும் அமெரிக்க உளவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராணுவ நடமாட்டம் அல்லது கட்டமைப்பு பற்றிய தவறான புரிந்துணர்வு இரு தரப்பிலும் ஆயுத மோதலுக்கு வழிவகுக்கலாம் என்றும் அமெரிக்க உளவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காந்தி உருவப்படத்தை சுட்ட பெண் யார்? வெளியான அதிர்ச்சி தகவல்கள்