முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: "உத்தரப் பிரதேச அமைச்சர்கள் அலைபேசி பயன்படுத்த முதல்வர் யோகி தடை"
உத்தரப் பிரதேச அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முக்கிய விவாதங்களில் பங்கேற்காமல் 'வாட்சாப்' தகவல்களை பார்ப்பதை தவிர்க்கும் பொருட்டு அலைபேசிக்கு தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"அலைபேசிகளை கொண்டு வரும் சில அமைச்சர்கள் வாட்சாப் செய்திகளை பார்ப்பதால் கூட்டத்தில் கவனம் இருப்பதில்லை. கூட்டத்தின் நோக்கமும் பாழாகிறது. இதுமட்டுமின்றி கூட்டத்தின் நிகழ்வுகள் அவற்றின் மூலம் வெளியே வரும் ஆபத்தும் உள்ளது.
எனவே அமைச்சரவைக் கூட்டத்துக்கு வரும் அமைச்சர்கள் தங்கள் அலைபேசிகளை வெளியே இதற்கென வைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில் பாதுகாப்பாக கொடுத்து வைத்து விட்டு தான் வரவேண்டும். அலைபேசியுடன் வருபவர்களுக்கு கூட்டத்தில் அனுமதியில்லை" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.