Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்

Advertiesment
ஆப்கானிஸ்தானில் போலியோ முகாம் நடத்தும் ஐ.நா: ஒப்புக்கொண்ட தாலிபன்
ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த உள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் மாத தொடக்கத்தில் நடக்க உள்ள இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபன்களின் முழு ஆதரவு இருப்பதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
 
பெண் ஊழியர்கள் இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்ககெடுக்கவும், இந்த முகாம் நடத்துவதற்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் தாலிபன்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்கிறது யுனிசெஃப்.
 
கடந்த காலங்களில் தடுப்பு மருந்துகள் செலுத்துவதை தாலிபன்கள் கடுமையாக எதிர்த்து வந்துள்ளனர் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் திறனை இழக்க செய்வதற்காக மேற்கத்திய நாடுகளின் செய்யும் சதியே தடுப்பு மருந்துகள் என்று தாலிபன்கள் தெரிவித்திருந்தனர்.
 
நவம்பர் எட்டாம் தேதி தொடங்க உள்ள இந்த போலியோ முகாம் மூலம் ஐந்து வயதுக்கும் குறைவான சுமார் ஒரு கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தடுப்பூசி முகாமில் பயன் பெறுவதற்கான வழி இல்லாமல் இருந்தனர். சுமார் மூன்றாண்டு காலத்துக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கும் எல்லா குழந்தைகளும் பலனடையும் தடுப்பு மருந்து முகாமாக இது இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெஃப் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
"போலியோவை ஒழிப்பதற்கான எங்களது முயற்சியில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்த இந்த முடிவு உதவி செய்யும். ஆப்கானிஸ்தானில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமானால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும், என்று ஆப்கானிஸ்தானில் உள்ள யுனிசெஃப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
 
ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் இவ்வாறான திட்டத்தின் கீழ் ஒரு தடுப்பு மருந்து முகாமை நடத்த ஐ.நா திட்டமிட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் போலியோ வைரஸ் ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ தொற்று உள்ளது.
 
போலியோ சொட்டு மருந்து வழங்கல் முகாம்களின் போது நடந்த தீவிரவாத தாக்குதலில் கடந்த காலங்களில் பாகிஸ்தானில் பலர் உயிரிழந்துள்ளனர்.
 
பெரும்பாலும் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளை பாதிக்கும் போலியோ கிருமி திரும்பவும் குணப்படுத்த முடியாத அளவுக்கு சில நேரங்களில் கை கால்களை முற்றிலும் செயலிழக்கச் செய்து விடுகிறது.
 
சுவாச மண்டலத்தில் இருக்கும் தசைகள் பாதிக்கப்பட்டால் இதன் காரணமாக மரணம் கூட உண்டாகலாம். போலியோவை குணப்படுத்துவதற்கான மருந்து எதுவுமில்லை. ஆனால் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்பட்டால் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் அதில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயில்ல இருந்தபடியே ஜெயிப்பேன்..! – உள்ளாட்சி தேர்தலில் வென்ற சாராய வியாபாரி!