தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அவரது ஆப்கானிஸ்தான் பயணத்தில் உயிராபத்து ஏற்படாமல் தவிர்க்க உதவிய மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு பைடன் மற்றும் பிற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தான் சென்றிருந்த பொழுது பனிப்புயல் ஒன்றின் காரணமாக ஒரு பனிப் பள்ளத்தாக்கில் அவர்களது ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்க வேண்டிய கட்டாயம் உண்டானது.
அந்தப் பள்ளத்தாக்கில் அப்பொழுது அவர்கள் தாக்குலுக்கு உள்ளாவதற்கு வாய்ப்புகள் இருந்தன. அப்போது பைடன் உள்ளிட்ட அமெரிக்கக் குழுவினரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்று ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களின் மொழிபெயர்ப்பாளர் அமான் கலிலியும் அடக்கம்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு, தமது விசா பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டுமென்று ஆகஸ்ட் மாதம் முதல் அவர் வேண்டுகோள் விடுத்து வந்தார்.
ஆகஸ்ட் மாத மத்தியில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ள பல்லாயிரம் ஆப்கானியர்களில் ஒருவராக கலிலி இருக்கிறார்.
அமான் கலிலி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது பாகிஸ்தான் அழைத்து செல்லப்படுகிறார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அங்கிருந்து அவர்கள் அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுவார்கள்.