Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கானிஸ்தான் மசூதி மீது தற்கொலை குண்டு தாக்குதல்: 50 பேர் பலி

ஆப்கானிஸ்தான் மசூதி மீது தற்கொலை குண்டு தாக்குதல்: 50 பேர் பலி
, சனி, 9 அக்டோபர் 2021 (10:26 IST)
ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் உள்ள குண்டூஸ் நகரில், செய்து அபாட் மசூதியில் நடந்த இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் உடல்கள் மசூதி முழுவதும் பரவிக் கிடந்தன. தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஐ.எஸ். உள்ளிட்ட சுன்னி முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் சிறுபான்மை ஷியா முஸ்லிம்களை இலக்குவைத்து வந்தனர்.
 
சுன்னி முஸ்லிம் தீவிரவாதிகள் ஷியா முஸ்லிம்களை சமய எதிரிகளாக கருதுகின்றனர்.
 
இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதக் குழுவின் வட்டார அமைப்பாக கருதப்படும் ஐ.எஸ் -கே ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியை கடுமையாக எதிர்க்கிற ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு சமீப காலத்தில் பல தாக்குதல்களை குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதியில் நடத்தியுள்ளது.
 
வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த தாக்குதலுக்குப் பிறகு ரத்த தானம் ஏதும் தேவைப்படுமா என்று விசாரிக்க மருத்துவமனைக்கு சென்ற உள்ளூர் வணிகர் ஜல்மாய் அலோக்சாய் கொடூரமான காட்சிகளைக் கண்டதாக விவரிக்கிறார்.
 
"இறந்தவர்களின் உடல்களை ஏற்றிவர சம்பவ இடத்துக்கு மீண்டும் ஆம்புலன்ஸ்கள் செல்கின்றன," என்று அவர் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
 
தாக்குதல் நடந்தபோது மசூதியில் 300க்கு மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி டோலோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
தாலிபன்களுக்கு பெரிய அச்சுறுத்தல்
 
இதுவரை இத்தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தாக்குதல் நடத்தப்பட்டவிதத்தில் ஐ.எஸ்.கே அமைப்பின் முத்திரைகள் அனைத்தும் தெரிகின்றன. இந்த அமைப்புதான் ஆகஸ்ட் மாதம் உலக நாடுகள் பல ஆப்கானிஸ்தானை விட்டு அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் மோசமான தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியது.
 
ஐஎஸ்-கே என்ற இந்த அமைப்பு கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள ஷியா முஸ்லிம்களை குறிவைத்து பல முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் மசூதிகள், விளையாட்டுக் குழுமங்கள், பள்ளிகள் ஆகியவற்றை தற்கொலைக் குண்டுதாரிகள் குறிவைத்துள்ளனர். கடந்த சில வாரங்களில் தாலிபன்களுக்கு எதிராக இவர்கள் தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 
காபூலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, தாலிபன் தலைவர்கள் பங்கேற்ற ஓர் இறுதிச் சடங்கில் ஐஎஸ் தாக்குதல் நடத்தியது. நங்ஹர், குனார் போன்ற கிழக்கு மாகாணங்களில் ஏராளமான சிறு சிறு தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தப் பகுதி ஐ.எஸ். அமைப்பு முன்பு வலுவாக இருந்த பகுதியாகும்.
 
வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் ஐ.எஸ். அமைப்பால் மேற்கொள்ளப்பட்டதாக இருக்குமானால், நாட்டின் வட பகுதியில் அவர்கள் மேற்கொண்ட பயங்கரமான விரிவாக்க நடவடிக்கையாக இது இருக்கும்.
 
டஜன் கணக்கான ஐ.எஸ். உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக கூறுகிறது தாலிபன். ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலரை தாலிபன்கள் கொன்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், ஐ.எஸ். அமைப்பால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து பொதுவெளியில் தாலிபன்கள் பெரிதாக பேசவில்லை.
 
தாலிபன்களின் ஆட்சி எதேச்சாதிகார ஆட்சியாக இருந்தாலும்கூட அது அமைதியான ஆட்சியாக இருக்கக்கூடும் என்று பல ஆப்கானியர்கள் நம்பினார்கள். மேம்பட்ட பாதுகாப்பு குறித்து தாலிபன்கள் அளித்த வாக்குறுதிக்கு ஐ.எஸ். முக்கியமான அச்சுறுத்தலாக இருக்கும்.
 
2001ம் ஆண்டு தாலிபன்களை ஆட்சியில் இருந்து அகற்றிய அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய படைகள், ஒரு ஒப்பந்தத்துக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
 
ஐக்கிய நாடுகள் மன்றம் கண்டனம்
வெள்ளியன்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த தற்கொலை தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
மத நிறுவனங்களைத் தாக்கும் இந்த வாரத்தில் நடந்த 3வது தாக்குதல் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் கூறியுள்ளது.
 
சென்ற ஞாயிற்றுக் கிழமை காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த தற்கொலை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். மேற்கத்திய படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தபின் நடந்த மிகப்பெரிய தாக்குதல் அது.
 
அதன்பின் புதனன்று இஸ்லாமியப் பாடசாலையான மதரஸா ஒன்றின்மீதும் தாக்குதல் நடந்தது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோடியாக உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி: விலை விவரம் உள்ளே!