Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிப்பூரில் வசித்து வந்த தமிழா்கள் இருவா், மியான்மரில் சுட்டுக் கொலை

மணிப்பூரில் வசித்து வந்த தமிழா்கள் இருவா், மியான்மரில் சுட்டுக் கொலை
, புதன், 6 ஜூலை 2022 (13:33 IST)
(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (06/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

மணிப்பூரில் வசித்து வந்த தமிழா்கள் இருவா், மியான்மரில் சுட்டுக் கொல்லப்பட்டனா் என 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டியுள்ள மோரே நகரத்தில் வசித்து வந்தவா்கள் பி.மோகன் (28), எம்.அய்யனாா் (35), தமிழா்கள். மோகன் ஆட்டோ ஓட்டுநராக இருந்தாா். அய்யனாா், சிறிய கடை ஒன்றை நடத்தி வந்தாா். இந்நிலையில், இவா்கள் இருவரும் மியான்மா் எல்லையில் உள்ள டாமு என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இருவரின் உடல்களும் அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மோரேயில் உள்ள தமிழ்ச் சங்கத்தினா் கூறுகையில், 'தமிழா்கள் இருவரையும் உளவாளிகள் எனக் கருதி மியான்மா் ராணுவத்தினா் சுட்டுக் கொன்றிருக்கலாம்' என்றனா்.
இருவரும் எதற்காக மியான்மா் எல்லைக்குள் சென்றாா்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மணிப்பூா் போலீஸாா் தெரிவித்தனா்.

'மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடா்ந்து, அந்த நாட்டுடனான சா்வதேச எல்லை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி மூடப்பட்டுள்ளது. இருப்பினும் வா்த்தக தேவைகளுக்காக இரு நாட்டு மக்களும் எல்லைகளைக் கடந்து வந்து செல்வது வழக்கம்' எனவும் தமிழ்ச் சங்கத்தினா் தெரிவித்தனா் என தினமணி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - ஷீரடி தனியார் ரயில் சேவையால் தெற்கு ரயில்வேக்கு ரூ.2.50 கோடி வருவாய்

கோவையிலிருந்து ஷீரடிக்கு பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட முதல் தனியார் ரயில்சேவை மூலமாக, ரூ.2.50 கோடி வருவாய் தெற்கு ரயில்வேக்கு கிடைத்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாரத் கவுரவ் திட்டத்தை இந்திய ரயில்வே கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், தனியார் ரயில் சேவை அளிக்க விரும்புவோர், தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அழைப்பு விடுத்தது. இதையடுத்து, சவுத் ஸ்டார் ரயில் என்ற நிறுவனம் பதிவு செய்து, கோயம்புத்தூர்-ஷீரடிக்கு பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் முதல் சேவையைத் தொடங்கியது.

இதேபோல, டிராவல் டைம்ஸ் இந்தியா நிறுவனம் பதிவுசெய்து, இரண்டாவது ரயில் சேவையை மதுரையில் இருந்து வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. `திவ்ய காசி-ஆடி அமாவாசை காசி யாத்திரை ரயில்' என்ற பெயரில் இந்த ரயில் இயக்கப்படஉள்ளது.

இதேபோல, 7 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்து, அடுத்தடுத்து ரயில் சேவையை அளிக்க உள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் வி.ஜெயந்தி கூறும்போது, "பாரத்கவுரவ் திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர்- ஷீரடிக்கு ரயில் சேவை இயக்கப்பட்டது. இதன்மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.2.50 கோடி வருவாய் கிடைத்தது.

டிராவல் டைம்ஸ் இந்தியா நிறுவனம் இரண்டவாது ரயில் சேவையை வழங்க உள்ளது. இந்த நிறுவனம் மூலமாக எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை இப்போது கூறமுடியாது. எத்தனை நாட்கள் பயணம், தொலைவு ஆகியவற்றின் அடிப்படையில் வருவாய் கணக்கிடப்படும். இதேபோல, 7 தனியார் நிறுவனங்கள் பதிவு செய்து, பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் ரயில்களை இயக்க உள்ளன" என கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாயண நிதியம் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தொடர்பாக பிரதமர் பாராளமன்றத்தில் பதிலளிப்பார்

சர்வதேச நாணய நிதிய குழுவினருடன் ஜனாதிபதி, நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உட்பட அதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்தனர். இந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பாக பிரதமர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பார் என 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
webdunia

சர்வதேச நாயண நிதிய பிரதிநிதிகளுடனா கலந்துரையாடல்கள் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இது தொடர்பான உண்மை நிலவரத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஒரு கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தது. இந்த கலந்துரையாடலின் பெறுபேறுகள் தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். அரசாங்கம் இதுதொடர்பாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்கும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம்.

ஆனால் இவ்வாறான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த அவர், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வி என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக அமெரிக்க ஊடகங்களே செய்தி வெளியிட்டிருந்தது. அதனால் இதன் உண்மை தன்மை தொடர்பில் நாங்கள் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை முன்வைப்பது நல்லது என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, சர்வதேச நாணய நிதிய குழுவினருடன் ஜனாதிபதி, நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உட்பட அதிகாரிகள் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்தனர். இந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பாக பிரதமர் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பார் என்றார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடக்க போவது அதிமுக பொதுக்குழு கூட்டம் அல்ல... பின்ன வேறு என்ன??