Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதினின் அரை நிர்வாண படங்கள்: கிண்டல் செய்த தலைவர்கள் - என்ன செய்தார் ரஷ்ய அதிபர்?

BBC
, வெள்ளி, 1 ஜூலை 2022 (12:32 IST)
தனது கட்டுமஸ்தான உடல்வாகு குறித்து இந்த வாரம் கிண்டல் செய்த மேற்கு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எதிர்வினையாற்றியுள்ளார். உங்களின் ஆடையை இப்படிக் கழற்றினால் "பார்க்க சகிக்காது" என்று அவர் கூறியுள்ளார்.

தமது குதிரை சவாரியின்போது மேல் சட்டையின்றி படங்களுக்கு போஸ் கொடுத்த ரஷ்ய அதிபரின் போக்கை ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற சில மேற்கு நாடுகளின் தலைவர்கள் கேலி செய்தனர். இந்த நிலையில், அவர்களுக்குக் கடுமையான முறையில் எதிர்வினையாற்றியிருக்கிறார் ரஷ்ய அதிபர்.

மேலும், தமது சக தலைவர்களிடம் நீங்கள் எல்லோரும் உங்களுடைய மது அருந்தும் அளவைக் குறைத்துக் கொண்டு அதிக விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்றும் புதின் அறிவுறுத்தியுள்ளார்.

தாம் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் யுக்ரேனை புதின் ஆக்கிரமித்திருக்க மாட்டார் என்ற பிரிட்டன் போரிஸ் ஜான்சனின் கருத்துகளையும் புதின் நிராகரித்தார்.

இது குறித்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய புதின், "அந்தக் கூற்று சரியல்ல. மார்கரெட் தாட்சர் (பிரிட்டன் முன்னாள் பிரதமர்) பால்க்லாந்து போரிலேயே "பகையைத் தொடங்க முடிவு செய்துள்ளார்" என்று கூறினார்.

என்ன நடந்தது?

ரஷ்ய அதிபர் மேலாடையின்றி படங்களுக்கு காட்சி தருவது அந்நாட்டில் புதிதல்ல. அவர் இதற்கு முன்பும் பல தருணங்களில் குதிரை சவாரி செய்யும்போதும் வேட்டைக்குச் செல்லும்போதும் மீன்பிடிக்கும்போதும் மேல் சட்டையின்றி இருப்பதைக் காட்டும் படங்கள் அந்நாட்டு அரசு ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

ரஷ்யர்களை ஈர்க்கும் வகையிலான ஆண்மை உணர்வை அத்தகைய காட்சிகள் ஏற்படுத்த முயல்வதாக தமது படங்கள் குறித்து புதின் கூறினார்.

முன்னதாக, இந்த வார தொடக்கத்தில் ஜெர்மனியில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் புதின் தொடர்பாக நையாண்டி செய்தார். அப்போது அவர், "புதினை விட மற்ற தலைவர்கள் வலிமையானவர்கள் என்பதைக் காண்பிக்க வேண்டுமானால், அவர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்ற வேண்டும்," என்று கிண்டலாக பேசினார்.

பிரிட்டன் பிரதமர், "நாமும் கடுமையானவர்கள் என்பதைக் காட்டுங்கள்" என்று கூறினார். கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "அப்படியென்றால் திறந்த மார்புடன் குதிரை சவாரி செய்ய வேண்டும்" எனப் பேசினார்.

இந்த நிலையில், துர்க்மெனிஸ்தானில் செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து புதினிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "அவர்கள் இடுப்புவரை கழற்ற விரும்புகிறார்களா அல்லது இடுப்புக்கு கீழே கழற்ற விரும்பினார்களா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எதுவாக இருந்தாலும் அது பார்க்க சகிக்க முடியாத காட்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று பதிலளித்தார்.

"நீங்கள் ஒரு புத்திசாலியாக இருக்கலாம். உங்கள் நகங்களின் அழகைப் பற்றியும் சிந்திக்கலாம் என ரஷ்ய கவி அலெக்சாண்டர் புஷ்கினின் வரியை மேற்கோள் காட்டிப் பேசிய புதின், "நான் அந்தக் கருத்துடன் நிச்சயமாக உடன்படுகிறேன்; ஒருவர் தமது உடல் மற்றும் ஆன்மாவுடன் இணக்கமாக உணர்வுபூர்வமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், எல்லாவற்றிலும் அப்படி இருக்க விரும்பினால் முதலில் நீங்கள் போதைக்கு அடிமையாவதிலும் பிற பழக்கங்களில் இருந்தும் விடுபட வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும், விளையாட்டில் ஈடுபட வேண்டும்," என்று தெரிவித்தார்.
 
webdunia

"நீங்கள் குறிப்பிடும் நபர்கள் அனைவரையும் நான் தனிப்பட்ட முறையில் அறிவேன் - எங்கள் உறவுகள் சிறப்பானதாக இல்லை. இது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனாலும், அவர்கள் அனைவரும் தலைவர்கள். அதாவது அவர்களுக்கு எனத் தனி குணம் உள்ளது. விருப்பம் கொண்டிருந்தால் அவர்கள் நிச்சயமாக விரும்பிய முன்னேற்றத்தை அடைவார்கள். ஆனால் அதற்கு அவர்கள் உழைக்க வேண்டும். அதைப் பற்றிப் பேசுவது கூட ஒருவகையில் நல்லதுதான். இதற்காக நான் அவர்களைப் போற்றுவேன்," என்று புதின் கூறினார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற நேட்டோ செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போரிஸ் ஜான்சனிடம் புதின் கூறிய இந்தக் கருத்துக்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால், அதற்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த போரிஸ், யுக்ரேன் மீதான ஆக்கிரமிப்புக்கு மேற்கு நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து அப்படி எதிர்வினையாற்றியதாகத் தெரிவித்தார்.

ஒரு பெண்ணாக இருந்திருந்தால் ரஷ்ய அதிபர் யுக்ரேனை ஆக்கிரமித்திருக்க மாட்டார் என்று போரிஸ் ஜான்சன் இந்த வாரம் தெரிவித்த கருத்துகள் குறித்தும் புதினிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

ஜெர்மன் செய்தி நிறுவனமான ZDF உடனான ஒரு நேர்காணலில் ஜான்சன் "யுக்ரேன் மீதான பைத்தியக்காரத்தனமான, ஆடம்பரமான ரஷ்ய படையெடுப்பு 'நச்சு ஆண்மைக்கு சரியான எடுத்துக்காட்டு" என்று கூறினார். மேலும் "அதிகாரப் பதவிகளில் அதிகமான பெண்கள் வர வேண்டும்" என்றும் போரிஸ் அழைப்பு விடுத்தார்.

அவரது இந்தக் கூற்றுக்கு எதிர்வினையாற்றிய புதின், "1982ஆம் ஆண்டு பால்க்லாந்து தீவுகள் தொடர்பாக பிரிட்டன் மற்றும் அர்ஜென்டீனா இடையே ஏற்பட்ட மோதலை மேற்கோள்காட்டி பதிலளித்தார்.

அப்போது அவர், "ஃபால்க்லாந்து தீவுகளுக்காக அர்ஜென்டீனாவுக்கு எதிராக மார்கரெட் தாட்சர் ராணுவ ரீதியில் குரோரத்தைத் தொடங்க முடிவு செய்த சமீபத்திய வரலாற்றின் நிகழ்வுகளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அப்படியென்றால் ஒரு பெண் விரோதத்தைத் தொடங்க முடிவு செய்திருக்கிறார். அந்த பால்க்லாந்து தீவுகள் எங்கே? பிரிட்டன் எங்கே? அது ஏகாதிபத்திய லட்சியங்கள் மற்றும் ஏகாதிபத்திய நிலையை உறுதிப்படுத்திய மனப்போக்கே தவிர வேறு எதுவும் இல்லை," என்று கூறினார்.

"எனவே, இன்று என்ன நடக்கிறது என்பதற்கு இது மிகவும் சரியான உவமை அல்ல என்று நான் நினைக்கிறேன். அதுவும் கிரேட் பிரிட்டனின் தற்போதைய பிரதமரிடமிருந்து அது சொல்லப்படுவது சரியல்ல," என்றார் புதின்.

ஃபால்க்லாந்து மோதல் என்பது என்ன?

தென் அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் காலனியான ஃபால்க்லாந்து தீவுகளை அர்ஜென்டீனாவின் துருப்புகள் 1982ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆக்கிரமித்தபோது, 10 வார ஃபாக்லாந்து மோதல் தொடங்கியது.

அர்ஜென்டீனா 1800களில் ஸ்பெயினிடம் இருந்து அந்தத் தீவுகளைப் பெற்றதாகவும் அவற்றை மீட்டெடுக்க விரும்புவதாகவும் கூறியது.

அந்தத் தீவுகளை ஆங்கிலேயர்கள் 150 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். மேலும் தீவுகளை மீண்டும் கைப்பற்ற கடல் வழியாக ஆயுதப்படைகளை அனுப்பினர். ஜூன் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவின் படைகள் சரணடைந்தன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கதான் பொறுப்பு! – நுபுர் சர்மா வழக்கில் உச்சநீதிமன்றம்!