Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'காதலுக்குக் கண்கள் இல்லை' - கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

Advertiesment
BBC Tamil
, வியாழன், 16 ஜூன் 2022 (14:37 IST)
(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (16/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

"காதலுக்கு கண்கள் இல்லை" என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரு மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிசர்கா (வயது 19). இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், அந்த கல்லூரியில் ஓட்டுனராக வேலை செய்த நிகில் (26) என்பவருடன் காதல் ஏற்பட்ட நிலையில், இதற்கு நிசர்காவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த மே 13-ம் தேதி முதல் நிசர்காவை காணவில்லை என்றும் அவரை நிகில் கடத்திச் சென்று இருக்கலாம் என்றும் கூறி நிசர்காவின் தந்தை நாகராஜ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வீரப்பா, ஹேமலேகா முன்னிலையில் நடந்தது. இந்த நிலையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் வசித்து வந்த நிசர்கா, நிகிலை போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நிசர்கா "தனக்கு 18 வயது பூர்த்தி அடைந்து விட்டதாகவும், எனது வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவு என்னுடையது. எனக்கும், நிகிலுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இனி கணவருடன் தான் வாழ்வேன்" எனக்கூறிய நிசர்கா, பெற்றோருடன் செல்ல மறுப்பு தெரிவித்ததாக, 'தினத்தந்தி' செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய நீதிபதிகள், "குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தங்களது உயிரை தியாகம் செய்யவும், பெற்றோருக்காக குழந்தைகள் தங்கள் உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றனர் என்பதை நமது வரலாறு வெளிப்படுத்துகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையே அன்பு, பாசம் இருந்தால் குடும்பத்தில் விரிசல் ஏற்படாது. இந்த வழக்கில் பெற்றோரின் அன்பை விட காதல் சக்தி வாய்ந்த ஆயுதம் என்பது வெளிப்படுகிறது. காதலுக்குக் கண்கள் இல்லை" என்று கூறி, நாகராஜின் ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்ததாக, அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

'ஆபரேஷன் கந்துவட்டி': தமிழ்நாடு முழுவதும் ஒரு வாரத்தில் 124 புகார் மனுக்கள், 89 எஃப்ஐஆர், 32 பேர் கைது
webdunia

'ஆபரேஷன் கந்துவட்டி' சிறப்பு ஆய்வின் மூலம் ஒரு வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார் என, 'இந்து தமிழ் திசை' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க 'ஆபரேஷன் கந்துவட்டி' என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், "கடந்த ஒரு வாரத்தில், தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி மற்றும் மீட்டர் வட்டி தொடர்பாக 124 புகார் மனுக்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டுள்ளன. இதில் 89 புகார் மனுக்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டடு, 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள புகார்களின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

கந்துவட்டி குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 பேரின் வீடுகளிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆவணங்களான பூர்த்தி செய்யப்படாத காசோலைகள், புரோ நோட்டுக்கள், கையெழுத்திடப்படாத ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 7 வழக்குகள், நாமக்கல் மாவட்டத்தில் 6 வழக்குகள் மற்றும் சேலம் மாநகரில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளதாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் வந்ததும் ஈபிஎஸ் டீம் ஓட்டமா? ஜெயகுமார் கூறுவது என்ன?