Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'இலங்கையில் அடுத்த சில மாதங்களில் உணவுத் தட்டுப்பாடு' - எச்சரிக்கும் ஐ.நா

Advertiesment
Srilanka
, புதன், 8 ஜூன் 2022 (15:29 IST)
(இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (08/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை மேலும் சரிவை சந்திக்கும் என்றும் உணவு கிடைப்பது குறையும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

"வருமானம் குறைந்துள்ளமை மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை குடும்பங்களின் போதுமான உணவை வாங்கும் திறனை பாதிக்கின்றன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

உள்நாட்டு விவசாய உற்பத்தி மற்றும் சர்வதேச விலை உயர்வு ஆகியவற்றுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் விலைப் பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் காரணமாக அடுத்த மாதங்களில் இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டத்தை உண்டாக்கி, வீட்டு வருமானத்தை பாதித்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதை சிக்கலாக்கி வருவதாக அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் பலவீனமான மாற்று விகிதம் ஆகியவற்றுடன், உணவு, எரிபொருள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்து, இந்த ஆண்டில் பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

'கோ ஹோம் கோட்டா' என்பதை அதிகமானோர் மறந்துவிட்டனர் - சஜித் பிரேமதாச

'கோ ஹோம் கோட்டா' என்பதை பெரும்பாலானோர் தற்போது மறந்து விட்டார்கள் என, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்ததாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின்போது விசேட கூற்றை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், அவர் பேசுகையில், "பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். அறிவுள்ளோர் நாட்டை விட்டு வெளியேறும் வீதம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது. திறமைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் நடைமுறைக்கு பொருத்தமான முன்னேற்ற திட்டங்களை செயற்படுத்தவில்லை.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிர்மான கட்டுமானத்துறையினர், சிறு மற்றும் நடுத்தர தொழிற் துறையினர் வங்கி கடன்களினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். வங்கி கடனை மீள் செலுத்துவதற்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் வழங்கல், வட்டி அறவிடலை இடைநிறுத்தல், கடன் தவணை மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டு பாரிய டாலர் நெருக்கடியினை நாடு எதிர்கொண்டுள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி அத்தியாவசிய பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட வகையில் இடைநிறுத்தப்பட வேண்டும்" என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை 250 வீதத்தால் உயர்த்த உத்தேசம்

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக மின்சார கட்டணத்தை 250 வீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை உத்தேசித்துள்ளதாக, 'தினகரன் - வாரமஞ்சரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
webdunia

இது தொடர்பாக அமைச்சரவை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவினால் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தெரிவித்தார்.

"இலங்கை மின்சார சபையின் வருமானம் 277 பில்லியன் ரூபாயாக உள்ளதுடன் செலவுகள் 755 பில்லியன் ரூபாயாகவுள்ளது. செலவுகளை சமாளிக்க மின் கட்டணத்தை உயர்த்துவது அவசியம். மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பாக அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புற்றுநோயை முழுவதும் குணப்படுத்தும் மருந்து! – அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் சாதனை!