Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தியாகராய நகர்: நூற்றாண்டை கொண்டாடும் அங்காடித் தெருவின் கதை

Advertiesment
T Nagar

Prasanth Karthick

, திங்கள், 9 டிசம்பர் 2024 (13:27 IST)

செல்லமாகவோ அல்லது சுருக்கமாகவோ தி - நகர் என அழைக்கப்படும் தியாகராய நகர், சென்னையின் தூங்காநகரம் என்றே சொல்லலாம்.

 

 

ஒரு காலத்தில் நுங்கம்பாக்கம் குளம் மற்றும் லாங்க் குளத்திற்கு மத்தியில் அமைந்திருந்த இந்த பகுதியில் குள்ளநரிகள் வாழ்ந்தன என்று கூறினால் உங்களால் நம்ப இயலுமா?

 

கடந்த 1923-ம் ஆண்டு தியாகராய நகர் உருவாக்கம் ஆரம்பித்து, 1925ல் செயல்பட ஆரம்பித்தது. தியாகராய நகர் ஒரு நூற்றாண்டு வரலாற்றை கொண்டிருக்கிறது. குடியிருப்புப் பகுதியாக உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தியாகராய நகரின் உருவாக்கம் இருந்தது என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

 

ஆனால், பாண்டிபஜாரும், ரங்கநாதர் தெருவும் வாடிக்கையாளர்களின் கூட்டத்திற்கு மத்தியில் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்க, இந்த முக்கியமான தெருக்கள் தியாகராயநகரின் அடையாளங்களாக மாறிவிட்டன.

 

தியாகராய நகர் உருவான பத்து-இருபது ஆண்டுகளிலேயே இந்த பகுதியில் பல்வேறு அங்காடிகள் செயல்பட ஆரம்பித்தன. தியாகராய நகர் வீதியில் வாணிபமும், வர்த்தகமும் அதிகரிக்க, தென் தமிழகத்தில் இருந்து வந்த பலர், சிறிய அளவில் கடைகள் ஆரம்பித்து, இன்று தங்களின் சொந்த வணிகங்களின் கிளைகளை பல்வேறு இடங்களில் உருவாக்கியுள்ளனர்.

 

மறுபுறம் வாடகை, நுகர்வு கலாசார போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், வணிக தோல்விகள், பொருளாதார நெருக்கடிகள் போன்றவை பல கடைகளை மூட வழி வகை செய்தது. ஆனால், ஒரு சில கடைகள் இன்றும் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக 60, 70 ஆண்டுகளாக இயங்கி வருகின்றன.

 

குடியிருப்புப் பகுதியாக உருவாக்க நினைத்த தியாகராய நகர் வணிக பகுதியாக மாறியது எப்படி? அரை நூற்றாண்டை கடந்தும் இங்கு வணிகம் செய்து வரும் பாரம்பரிய கடைகள் எவை? காலம் கடந்த பிறகும் இந்த வணிக பகுதி தனித்துத் தெரிய காரணம் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

 

அடித்தளமிட்ட மாம்பலம் ரயில் நிலையம்
 

"மாம்பலம் ரயில் நிலையம் உருவாக்கப்பட்டதும், அது உருவாக்கிய புதிய வாய்ப்புகளும் தான் தியாகராய நகரின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணம்," என்று கூறுகிறார் அஷ்மிதா ஆத்ரேயா.

 

சென்னையின் எழும்பூரை காஞ்சிபுரத்துடன் இணைக்கும் ரயில்வே சேவையின் ஒரு பகுதியாக மாம்பலத்தில் ரயில்வே நிலையம் 1911ம் ஆண்டு கட்டப்பட்டது.

 

வரலாற்று ஆய்வாளரான அஷ்மிதா, 'மெட்ராஸ் இன்ஹெரிட்டட்' என்ற நிறுவனத்தின் கீழ், சென்னையின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் மரபு நடைகளை மேற்கொண்டு வருகிறார். மெட்ராஸ் இன்ஹெரிட்டட் நிறுவனத்தின் 'ஹெட் ஆஃப் ஆப்பரேஷனாக' பணிபுரியும் அவர், மாம்பலம் ரயில் நிலையம் தியாகராய நகரின் வளர்ச்சியில் எத்தகைய முக்கிய பங்கை வகித்தது என்று விளக்கினார்.

 

"இந்த ரயில்வே லைன் தான் மேற்கு மாம்பலத்தையும், இன்று தியாகராய நகராக இருக்கும் கிழக்கு மாம்பலத்தையும் பிரிக்கும் உயிர் நாடியாக இருந்தது. இங்கு ரயில் நிலையம் வந்தது, தென் தமிழகத்தில் இருக்கும் பலரையும் இங்குள்ள பொருளாதார வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்தது. 1928ம் ஆண்டுக்கு முன்பு வரை காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த நல்லி குடும்பத்தினரை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம்.

 

சின்னசாமி செட்டியார் பட்டுப்புடவைகளை காஞ்சிபுரத்தில் இருந்து மாம்பலத்திற்கு கொண்டு வந்து, பிறகு அங்கிருந்து மயிலாப்பூரில் விற்பனை செய்துவிட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். மாம்பலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 1928ம் ஆண்டு நல்லியை சென்னையில் நிறுவினார்கள்," என்று கூறுகிறார் அஷ்மிதா.

 

ரயில் போக்குவரத்து வணிகர்களையும், நுகர்வோரையும் தியாகராய நகரில் ஒன்றிணைத்தது. இந்த வணிக பகுதியின் உருவாக்கத்தில் பல மரங்களும், வன உயிரினங்களும் மறைந்தன. ரங்கநாதர் நகரில் வசித்து வந்த எழுத்தாளார் அசோகமித்ரன் தன்னுடைய ஒரு பார்வையில் சென்னை நகரம் புத்தகத்தில், தியாகராய நகரில் குள்ளநரிகள் வாழ்ந்ததை குறிப்பிட்டிருக்கிறார்.

 

கடந்த 2013ம் ஆண்டு எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்ட கட்டுரையின் படி, தங்க நகைகள் விற்பனை மற்றும் ஆடை விற்பனை மூலமாக தியாகராய நகரில் இருக்கும் கடைகள் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டுவதாக குறிப்பிட்டிருந்தது.

 

அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் கோடியாக இந்த மதிப்பைக் கூறினாலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு தியாகராய நகரில் வந்த வருவாயானது, மும்மையின் லிங்கிங் சாலை, புது டெல்லியின் கன்னோட் ப்ளேஸ், பெங்களூருவின் ப்ரிகேட் சாலை பகுதியில் நடைபெறும் வர்த்தகங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்று மேற்கோள்காட்டியுள்ளது.

 

எனினும், இக்காலகட்டத்தில் தி.நகரில் நடைபெறும் வணிகத்தின் மதிப்பு என்ன என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை.

 

webdunia
 

பாரம்பரியமாக இயங்கி வரும் அங்காடிகள்
 

கேரளா ஹேர் ட்ரெஸ்ஸர்
 

தி-நகரின் உருவாக்கம் தொடங்கி ஒரு நூற்றாண்டை நாம் இன்று அடைந்துள்ள நிலையில், காலத்தின் ஓட்டத்தைக் காலம் கடந்து நின்று கவனித்த அங்காடிகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தியாகராயநகர் (பாண்டி பஜார்) சாலையில் இன்னும் செயல்பட்டு வருகின்றன.

 

ஒரு ஞாயிறு காலையன்று, அஷ்மிதா நடத்திய மரபு நடையில் கேரளா ஹேர் ட்ரெஸ்ஸர் கடையைப் பற்றி பேசினார். 1939ம் ஆண்டு வி சங்குண்ணி நாயரால் உருவாக்கப்பட்டது இந்த முடித்திருத்தும் கடை.

 

இந்த காலத்தில் இருப்பது போன்ற சலூன் அல்ல அது. பெல்ஜியம் கண்ணாடிகள், பழமையான கடிகாரம், முடி வெட்ட வரும் வாடிக்கையாளர்களுக்காகவே உருவாக்கப்பட்ட இருக்கைகளும் 1939 முதல் 2024 வரை எந்த வித மாற்றமும் இன்றி தொடர்ந்து வருகிறது என்கிறார், தற்போது அந்த கடையை நடத்தும் சங்குண்ணி நாயரின் பேரன் சந்தீப்.

 

மூன்று தலைமுறைக்கும் மேலாக இயங்கி வரும் இந்த கடையில் ஒரு காலத்தில் நடிகர்கள் சத்யராஜ், சிவக்குமார், மறைந்த நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான விஜயகாந்தும் தங்களுக்கான சிகை அலங்காரத்தை செய்திருக்கின்றனர்.

 

பளபளக்கும் எழுத்துகளிலும் பதாகைகளிலும் பல கடைகள் அந்த தெருவில் அமைந்திருந்தாலும், கேரளா ஹேர் ட்ரெஸ்ஸர்ஸ் பெரிய அளவில் எந்த விதமான மாற்றத்தையும் கடையின் தோற்றத்தில் செய்யாமல் இப்போதும் தொடர்ந்து வருகிறது.

 

பாண்டியன் காஃபிஸ்
 

ஃபில்டர் காஃபி பொடியை தயாரிக்கும் கடை இது. அதிகாலை 5 மணி முதல் 6.30 மணி வரை, உணவகங்களுக்காக காஃபி பொடியை தயாரித்து விநியோகத்திற்கு வழங்கிவிட்டு, தங்களின் வாடிக்கையாளர்களுக்காக தினமும் 9 மணிக்கு மேல், எந்த விதமான ஆரவாரம் இன்றி இயங்குகிறது இந்த சிறிய கடை.

 

கேரளா ஹேர் ட்ரெஸ்ஸரைப் போன்றே மூன்றாவது தலைமுறையாக இந்த கடை பாண்டி பஜாரில் இயங்கி வருகிறது. மகாலிங்கம் என்பவர் இந்த கடையை 1958ம் ஆண்டு நிறுவினார்.

 

அவருடைய சகோதரர் பாண்டியன் பெயரில் இந்த கடை தொடங்கப்பட்டது. இன்று அதனை ராமலிங்கம் என்ற நபர் நடத்தி வருகிறார்.

 

1880கள் தொடங்கி 1950கள் வரையிலான காலகட்டத்தில் விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்பட்ட 'எனாமல் சைனேஜ்' பாணியில், மிகவும் எளிமையான 'சைன் போர்டோடு' வரவேற்கிறது இந்த கடை.

 

"இந்த பகுதிகளில் இருக்கும் பழைய கடைகளை இந்த சைன் போர்டுகள் வைத்தே அடையாளம் கண்டுவிட இயலும். எந்தவிதமான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஏதுமின்றி, பாண்டியன் காஃபிஸ் இன்றும் இயங்கி வருகிறது. கடை தொடங்கப்பட்ட காலத்தில், இப்பகுதி குடியிருப்புப் பகுதியாக உருவாக தொடங்கியது. இங்குள்ள மக்கள் தினமும் 'ஃப்ரெஷ்ஷாக காஃபி' பொடியை வாங்க இந்த கடைக்கு வருகை புரிந்தது உண்டு," என்று இந்த கடைக்கான வரலாற்றை கூறுகிறார் அவர்.

 

காலத்தின் வேகத்தில் மாறும் தியாகராய நகரின் தனித்த அடையாளங்கள்
 

பாண்டி பஜாருக்கான பெயர் காரணங்கள் இரண்டாக இருக்கிறது என்கிறார் அஷ்மிதா. "ஒன்று, மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் உறுப்பினரும், சுயமரியாதை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படும் ஊதம்பட்டி புன்னைவன அய்யா சௌந்தரபாண்டியன் அவரின் பெயரில் அங்காடி தெரு அமைக்கப்பட்டு, இறுதியில் பாண்டி பஜாராக மாறியது என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

 

மற்றொன்று, தியாகராய நகர் உருவாகி வந்த போது பாண்டிச்சேரியை சேர்ந்த தொழில்முனைவோரான சொக்கலிங்க முதலியார், 10க்கும் மேற்பட்ட வணிக தளங்களை உருவாக்கினார்.

 

பாண்டிச்சேரியை சேர்ந்தவர் என்பதால் இதற்கு பாண்டி பஜார் என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் சிலர் வாதிடுகின்றனர்," என்று கூறினார் அஷ்மிதா.

 

அவர் உருவாக்கிய கட்டடங்கள் பல இன்று இப்பகுதியில் இல்லை. ஆனால், அலங்கார் ஆடையகம் இருந்ததால் அலங்கார் காம்ப்ளக்ஸ் என்று அழைக்கப்பட்ட அந்த ஒரு கட்டடம் மட்டும் பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகும் பழைய கட்டடக் கலையின் நுணுக்கத்தோடு காணப்படுகிறது.

 

பிரதான நுழைவின் மேலே பெண் தெய்வம் ஒன்றும் அதற்கு இரண்டு பக்கமும் யானைகள் இருப்பது போன்றும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தின் தூண்கள் கலை நயத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், மாடியின் சுவர்களும் கலைநயத்தோடு கட்டப்பட்டிருப்பதை இன்றும் பொதுமக்கள் காண முடியும்.

 

அலங்கார் காம்ப்ளக்ஸில் அலங்கார் ஆடையகம் செயல்பட்டு வந்த இடத்தில் இன்று க்ராக்ஸின் கடை உள்ளது. பல பத்தாண்டுகளாக இங்கே செயல்பட்டு வந்த வில்சன் மருந்தகம் மூடப்பட்டுவிட்டது.

 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதி பயன்படுத்திய பேனாவை உருவாக்கிய காமா பென்ஸின் கிளை தியாகராய நகரில் இருந்தது.

 

கடந்த 1928ம் ஆண்டு பாரிஸ் கார்னரில் செயல்பட ஆரம்பித்த காமா பென்ஸ், இந்தியாவின் பழமையான பேனா உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கிறது. கடந்த ஆண்டு, தியாகராய நகரில் செயல்பட்டு வந்த அதன் கிளை மூடப்பட்டுவிட்டது.

 

அங்காடிகள் சந்திக்கும் பிரச்னைகள்
 

"இங்கு பலகாலமாக இயங்கி வந்த கடைகளில் பெரும்பாலானவை வாடகைக்கு இயங்கி வந்தவை. தற்போது மிகப்பெரிய பிராண்டுகளின் கிளைகள் அதிக வாடகைக்கு தியாகராயநகரில் கடைகளை வைக்க முன்வரும் போது, பாரம்பரியமாக இயங்கி வரும் கடைகள் அவற்றுடன் போட்டியிடுவதில் கடும் சவால்களை சந்திக்கின்றன," என்கிறார் அஷ்மிதா.

 

பிபிசி தமிழிடம் பேசிய கேரளா ஹேர் ட்ரெஸ்ஸரின் தற்போதைய உரிமையாளர் சந்தீப், "வாடகை என்பது உண்மையாகவே சவாலான ஒன்றாக இருக்கிறது," என்று ஒப்புக் கொண்டார்.

 

"முடிதிருத்தும் கடைகளை பொறுத்தவரை ஒரே விதமான கட்டணங்கள் அனைத்து கடைகளிலும் பின்பற்றப்படுவதில்லை. போட்டிகள் அதிகரிக்கின்ற சூழலில், சிலர் நாங்கள் நிர்ணயிக்கும் விலைகளுக்கும் குறைவான விலையில் இந்த சேவைகளை வழங்குகின்றனர். அவர்களோடு போட்டியிட்டு இந்த துறையில் நீடித்தாலும் கூட, அதில் லாபம் இல்லை. மேலும் இந்த வருமானம், வாடகை உள்ளிட்ட பல செலவுகளை ஈடுகட்ட போதுமானதாக இருப்பதில்லை" என்றும் கூறுகிறார்.

 

சமூகநீதி கட்சிக்கும் இன்றைய தமிழ்நாட்டு அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக திகழ்ந்து வருகிறது தியாகராய நகர்.

 

காலத்தின் வேகம், மக்களின் தேவை, சாலை வசதிகள் விரிவாக்கம் போன்ற காரணங்களால் காலத்தின் கதைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் மரபு சின்னங்கள், அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் கண்களில் இருந்தும், நினைவுகளில் இருந்தும் அழிந்து கொண்டே வருகிறது. நூற்றாண்டு பிறந்த நாளை கொண்டாடும் தியாகராய நகரும் அதற்கு விதிவிலக்கல்ல.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 பேர் போதும்.. ஒரே இரவில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தை நொறுக்கி விடலாம்: காங்கிரஸ் பிரபலம்..!