Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புஷ்பா 2: சேஷாசல செம்மரங்களுக்கு சீனா, ரஷ்யாவில் அதிக தேவை இருப்பது ஏன்? எப்படி கடத்தப்படுகிறது?

Red Woods in Rayalaseema

Prasanth Karthick

, வியாழன், 5 டிசம்பர் 2024 (13:06 IST)

நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் இன்று (டிசம்பர் 5) ‘புஷ்பா 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியானது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களின் மத்தியில் புஷ்பா 2 திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

 

Red Woods in Rayalaseema
 

இந்த படத்தின் முதல் பாகம் செம்மரக் கட்டைகள் கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில், ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள வடக்கு பகுதிகளில் செம்மரங்கள் விளைகின்றன. அவ்வப்போது தமிழ்நாட்டை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் ஆந்திராவிற்கு சென்று செம்மரங்களை வெட்டி, அவற்றை கடத்தும் பணியில் ஈடுபட்டு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர், செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

உலகின் மிக அரிதான செம்மர வகைகள், தமிழகத்தின் எல்லையில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராயலசீமா பகுதியில் காணப்படுகின்றன. மலைகளால் நிறைந்த இந்த பகுதி சுமார் 5.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பரந்துள்ளது.

 

இங்கு காணப்படும் செம்மரங்கள் உலகின் மிக அரிதான செம்மர இனங்களுள் ஒன்றாகும் என்றும் அவற்றுக்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை இருப்பதாகவும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆந்திராவின் சித்தூர், நெல்லூர், கடப்பா மற்றும் கர்னூல் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள, சேஷாசலம், வெலுகொண்டா, பலகொண்டா, லக்கமலா மற்றும் நல்லமலா ஆகிய வனப்பகுதிகளில்தான் பெரும்பாலான செம்மரங்கள் காணப்படுகின்றன. இதில் குறிப்பாக, சேஷாசலம் காடுகளில் செம்மரங்கள் அதிக அளவில் விளைவதால், அதற்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை இருக்கிறது.

 

சீனா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் செம்மரங்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளில் செம்மர கட்டைகளுக்கான தேவைகளை நிறைவு செய்ய, கடத்தல்காரர்கள் பல வழிகளில் சட்டவிரோதமாக செம்மரக்கட்டைகளை கடத்துகின்றனர்.

 

செம்மரம் என்ற பெயர் எப்படி வந்தது?
 

செம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இதன் அறிவியல் பெயர் 'பெட்டெரோகார்ப்பஸ் சாண்டலினஸ்' (Pterocarpus santalinus) என்பதாகும். ‘Ptero’ என்ற சொல்லிற்கு கட்டை (குச்சி) என்று பொருள். ‘carpus’ என்பது ஒரு பழவகை. இவை கிரேக்க மொழிச் சொற்கள் ஆகும்.

 

இந்த மரத்தின் பழம் மிகவும் கடினமானது. அதன் விதையில் இருந்து செடி அவ்வளது எளிதாக முளைப்பதில்லை. அது வளர சுமார் ஒரு வருட காலமாகலாம்.

 

ரத்தச் சந்தனம், சிவப்பு தங்கம் போன்ற பிற பெயர்களாலும் செம்மரங்கள் அழைக்கப்படுகின்றன. இது 'ஃபபேசி' (Fabaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இதன் கட்டை சிவப்பு நிறத்தில் இருப்பதால் இது செம்மரம் என்று அழைக்கப்படுகிறது.

 

"தங்கம் விலைமதிப்பற்றது. இருப்பினும், அதை விட இந்த செம்மரங்கள் மிகவும் விலைமதிப்பானது. இந்த வகை செம்மரங்கள் ஆந்திராவில் மட்டும் நல்லமலா காடுகள் மற்றும் சேஷாசலம் மலைத்தொடர்களில் அதிகம் காணப்படுகின்றன" என்று எஸ்.வி பல்கலைக்கழகத்தின் அறிவியல் புலத் தலைவர், பேராசிரியர் என்.சாவித்ரம்மா பிபிசியிடம் தெரிவித்தார்.

 

சேஷாசலம் மலைத்தொடரின் மண்ணில் என்ன இருக்கிறது?
 

சித்தூர், நெல்லூர், கடப்பா மாவட்டங்களில் சேஷாசலம் மலைத்தொடர்கள் பரந்துள்ளன. அப்பகுதியில் உள்ள மண்ணின் தன்மை காரணமாக, அங்கு விளையும் செம்மரத்தின் தரம் மற்ற பகுதிகளில் உள்ள செம்மரங்களுக்கு இருப்பதில்லை.

 

"சித்தூர் மாவட்டத்தில்தான் நல்ல தரமான செம்மரம் கிடைக்கிறது. இங்குள்ள மண் இந்த மரங்களின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. யுரேனியம், இரும்பு, கிராஃபைட் மற்றும் கால்சியம் போன்றவை இந்த மண்ணில் இருக்கின்றன. இவை இந்த மரத்தின் வளர்ச்சிக்கு உகந்தது. அதனால்தான் இந்த மரங்கள் சேஷாசலம் மலைத்தொடரில் நன்றாக வளர்ந்து வருகின்றன. எந்த தாவரத்திற்கும் இல்லாத தனித்துவமான குணங்கள் இந்த மரங்களுக்கு இருக்கின்றன” என்று பேராசிரியர் சாவித்ரம்மா கூறுகிறார்.

 

விவசாயிகள் இதை வளர்க்க முடியுமா?
 

"விவசாயிகளும் இந்த மரத்தை வளர்த்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் வளர்க்கும் மரங்கள் அந்த அளவுக்கு தரமானதாக இருக்காது. இவர்கள் செம்மரங்கள் வளர்ப்பதற்கு வனத்துறையிடமும், வருவாய்த்துறையிடமும் அனுமதி பெற வேண்டும். அரசு அனுமதித்தால் விவசாயிகளுக்கு அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். அவர்கள் செம்மரங்களை ஏற்றுமதி செய்யலாம். சேஷாசலம் மலைத்தொடரில் விளையும் செம்மரங்கள் முழுதாக வளர 20 ஆண்டுகள் ஆகும், ஆனால் இந்த விவசாயிகள் வளர்க்கும் செம்மரங்கள் வளர 30 முதல் 40 ஆண்டுகள் ஆகலாம்" என்று பேராசிரியர் சாவித்ரம்மா கூறினார்.

 

webdunia
Red Woods
 

சீனா மற்றும் ஜப்பான் மக்கள் இந்த மரக்கன்றுகளை எடுத்து வளர்க்க முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் அவை அங்கு வளரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

“இந்த மரக்கன்றுகள் தானாக வராததால், பிற நாட்டு மக்கள் திசு வளர்ப்பு மூலம் இதனை வளர்க்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்கும் சாத்தியமில்லை. மேலும், இந்த முறையில் வளர்க்கப்படும் செடிகளில் மருத்துவ குணங்கள் குறைவாகவே இருக்கின்றன”, என்றார்.

 

அதிக தேவை ஏற்படுவது ஏன்?
 

சீனா மற்றும் ஜப்பானில், பாத்திரங்கள் மற்றும் கிண்ணங்கள் செம்மரக் கட்டைகள் மூலம் செய்யப்படுகின்றன. மேலும், அங்கு செம்மர கட்டைகளால் ஆன இசைக்கருவிகள் திருமணங்களில் பரிசளிக்கப்படுகின்றன.

 

"சீனா, ஜப்பான் மட்டுமின்றி ரஷ்யாவும் செம்மரக்கட்டைகளை வாங்கி வருகிறது. இது மருத்துவ குணம் கொண்டது. வயாகரா, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம்களில் அவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும், அல்சர், சிறுநீரக பிரச்னைகள் மற்றும் ரத்த சுத்திகரிப்பு போன்ற நோய்களையும் தீர்க்கும் பண்புகளை செம்மரம் கொண்டுள்ளது" என்று பேராசிரியர் சாவித்ரம்மா கூறினார்.

 

எப்படி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றது?
 

"சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து 7 கட்டங்களாக கடத்தல் நடைபெறுகின்றது. விறகு வெட்டுபவர்களில் இருந்து ஏற்றுமதியாளர்கள் வரை என இந்த கடத்தல் படிப்படியாக செய்யப்படுகிறது. இதில் ஈடுபடுபவர்கள் மிகவும் ரகசியமாக இருப்பார்கள், அவர்கள் யாரும் யாருடனும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை”, என்று துணை வனப்பாதுகாவலர் அசோக் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

“காடு ஒரு பரந்துவிரிந்த பகுதி, எங்கிருந்து வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம். வீரப்பன் இறந்த பிறகு வேலூர், காட்பாடி, ஜவ்வாதுமலை பகுதிகளில் இருந்து கடத்தல்காரர்கள் சேஷாசலம் மலைக்கு வந்து கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்”, என்று அசோக் குமார் கூறினார்.

 

"அவர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை. செம்மரக் கட்டைகளை இயல்பாக பகலிலும் இரவிலும் கொண்டு செல்கின்றனர். அவர்கள் எல்லா வழிகளிலும் செம்மரங்களை கடத்துகின்றனர். கூர்மையான ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செம்மரக் கட்டைகளை சுமந்து செல்ல முடியும். மலைப்பாதைகளில் நடப்பதில் அவர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. வனத்துறை அதிகாரிகள்கூட அவர்களை பிடிப்பது மிகவும் கடினம். ஏற்கனவே அவர்கள் அதிகாரிகளை கூட தாக்கியுள்ளார்கள்”, என்றும் அசோக் குமார் கூறினார்.

 

தொழிலாளர்கள் கூறுவது என்ன?
 

செம்மரக்கடத்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. வனப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளைத் தாண்டி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த முழு செயல்முறையிலும், கடத்தல்காரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, கீழ்நிலையில் உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று இதற்குமுன், கடத்தலில் ஈடுபட்ட ஒரு நபர் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

"அவர்கள் எங்கு அழைத்துச் செல்வார்கள் என்று எனக்கு தெரியாது. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு என்னை அறியாமலேயே அப்படியே செய்தேன். மற்றவர்கள் மரங்களை வெட்டித்தருவார்கள், அதனை சுமந்துசெல்வது தான் எனது வேலை. இந்த பணியில் எனது தோள்கள் மிகவும் வலித்தன. இதில், ஐந்தாயிரம் ரூபாய் முதல் ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் கூலி கிடைக்காது.

 

நான் ஒரு கடத்தல் வழக்கில் பிடிபட்டேன். எனது பெற்றோர் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டு என்னை ஜாமீனில் வெளியே கொண்டு வந்தனர். என்னால் கிராமத்தில் இருக்குஇருக்கும் என் மனைவி, குழந்தைகள் தலைகுனிந்து நடக்கவேண்டியதாயிற்று. இந்த வேலைக்கு என்னை அழைத்துச் சென்றவர்கள் யாரும் எனக்கு உதவவில்லை. என்னைப்போன்ற சிறு வேலைகளை செய்பவர்கள் மட்டுமே மிகவும் பாதிக்கப்படுகின்றனர்”, என்று பெயர் கூற விரும்பாத நபர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

 

கடத்தலை தடுக்க அரசு என்ன செய்கிறது?
 

செம்மரக் கட்டைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க கடத்தல்காரர்களுக்கு எதிரான பணிக்குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இதனால், சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கடத்தலில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு செம்மரங்களை வெட்டுவது தடுக்கப்படுகிறது.

 

கடந்த 2015-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பணிக்குழுவில், காவல்துறை, வனத்துறை, ஆந்திர காவல் படை, ஆயுதப்படை மற்றும் சிவில் போலீஸ் துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். இது திருப்பதியை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.

 

"கடத்தல்காரர்கள் காட்டுக்குள் செல்லும் இடங்கள் மற்றும் மரக்கட்டைகளை கொண்டு செல்லும் பகுதிகளில் நாங்கள் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதிகாரிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு காட்டுக்குள் அனுப்பப்படுவார்கள்.

 

அப்போது, கடத்தல்காரர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள். சில நேரங்களில் கடத்தல்காரர்கள் எங்களைப் பார்த்து செம்மரக்கட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். இருப்பினும் அவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து வனத்துறையிடம் ஒப்படைப்போம். அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள்," என்று கடத்தல் தடுப்புப் பணிக்குழுவின் கண்காணிப்பாளர் சுந்தர் ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

கடந்த 2021-ம் ஆண்டு இதுதொடர்பாக 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 434 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுந்தர் ராவ் தெரிவித்தார். மேலும், 3,000 கிலோ மரக்கட்டைகள் மற்றும் 282 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவற்றின் மதிப்பு ரூ. 50 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

 

காடுகளில் செல்போன் சிக்னல் இருக்காது
 

கடத்தல் தடுப்புப் பணிக்குழுவிற்கு இடையே தகவல் தொடர்பு மிகவும் முக்கியமானது. ஆனால், காடுகளில் செல்போன் சிக்னல்கள் இருக்காது. இதற்காக செயற்கைக்கோள் செல்போன்கள் வேண்டுமென கேட்டு அரசுக்கு அதிகாரிகள் விண்ணப்பித்தனர். தகவல் தொடர்பு மேம்பட்டால் கடத்தல்காரர்களைப் பிடிப்பது எளிதாகும் என்று மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

"கடத்தல்காரர்கள் இருக்கும் இடத்தை நாங்கள் அறிந்தால் அங்கு கூடுதல் படையை அனுப்பி, அவர்களை கைது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று சுந்தர் ராவ் கூறினார்.

 

பிடிபட்ட செம்மரக்கட்டைகள் என்ன செய்யப்படுகின்றன?
 

"திருப்பதியில் எட்டு குடோன்கள் இருக்கின்றன. இதுவரை, 5,500 டன் செம்மரக் கட்டைகள் அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த செம்மரக் கட்டைகள் சர்வதேச சந்தையில் ஏலம் விடப்படுகின்றன, இதன்மூலம் வனத்துறைக்கு வருவாய் கிடைக்கின்றது. 2018ம் ஆண்டு ஐந்து கட்டங்களாக 1,462 டன் செம்மரக் கட்டைகள் இப்படி ஏலம் விடப்பட்டுள்ளன. அதன்மூலம், ரூ. 664 கோடி அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது,” என்று அசோக் குமார் கூறினார்.

 

சர்வதேச சந்தையின் தேவையைப் பொறுத்து செம்மரக்கட்டைகளின் விலை ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும் என்றும், தற்போது, செம்மரங்களின் விலை ஒரு டன்னுக்கு சுமார் ரூ .50 லட்சம் வரை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

தரம் குறையுமா?
 

அதிக நேரம் குடோனில் வைத்தால், செம்மரக் கட்டையின் தரம் குறையும். இது அரசுக்கு நஷ்டம்தான். அவற்றை விரைவாக ஏலம் விட்டால், தரம் குறையாது. அதை வாங்கியவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்" என்று பேராசிரியர் சாவித்ரம்மா கூறினார்.

 

கடந்த 30 ஆண்டுகளாக கடத்தல் நடந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் 15 லட்சம் டன் செம்மரக்கட்டைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன.

 

"செம்மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த சீனாவும், ஜப்பானும் இந்தியாவில் இருந்து அவற்றை இறக்குமதி செய்யத் தொடங்கின. பின்னர் அரசாங்கம் அதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால், அதற்கு முன்பே அதிக அளவில் கடத்தல் நடத்தப்பட்டு வந்துள்ளது”, என்றும் பேராசிரியர் சாவித்ரம்மா கூறினார்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் உயிரோடு விளையாடுகிறது திமுக அரசு: கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்பு குறித்து ஈபிஎஸ்