Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர்

நோட்ர-டாம் தேவாலயம் முன்பைவிட அழகாகக் கட்டப்படும்: பிரான்ஸ் அதிபர்
, புதன், 17 ஏப்ரல் 2019 (20:51 IST)
பாரிஸ் நகரில் தீ விபத்தால் சேதமடைந்துள்ள ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயம் இருக்கும் அதே இடத்தில் முன்பைவிட அழகாக புதிதாக மறுநிர்மாணம் செய்யப்படும் என்று பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி, திங்களன்று மாலை 06:43 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்ட, இந்தத் தீ விபத்தினால், இந்த தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் ஆகியன கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்தன.
 
இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டுகளைக் கொண்ட கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கியப் பகுதிகள் தீ விபத்தில் இருந்து தப்பின.
 
இந்தத் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர சுமார் 15 மணிநேரம் ஆனது. இதில் சுமார் 400 தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.
 
எனினும், முக்கியக் கட்டடத்தில் இருந்த தீ 15 முதல் 30 நிமிடங்களுக்குள் அணைக்கப்பட்டது.
 
ஐ.நாவின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான இந்த பிரெஞ்சு தேவாலயத்தை புனரமைக்க சர்வதேச அளவில் நிதி கோரும் முயற்சியைத் தொடர்ந்து 800 மில்லியன் யூரோ அளவுக்கு நிதி வழங்க பல நிறுவனங்களும் தொழில் அதிபர்களும் உறுதியளித்துள்ளனர்.
 
ஐந்து ஆண்டுகளில் முடியுமா?
வரும் 2024ஆம் ஆண்டு பாரிஸில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அப்போது பிரான்ஸ் நாட்டுக்கு வெளிநாட்டவர் வரத்து அதிகமாக இருக்கும்.
 
"நோட்ர-டாம் தேவாலயத்தை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் மேலும் அழகாகக் கட்டியெழுப்ப வேண்டும் என நான் விரும்புகிறேன். அதை நம்மால் செய்ய முடியும்," என்று கூறியுள்ளார்.
 
 
தீ விபத்துக்கு முன்னர், விபத்து நடத்த சமயம் மற்றும் தீ அணைக்கப்பட்ட பின்னர்.
"இந்தப் பேரழிவை எப்படி ஒரு வாய்ப்பாக மாற்றுகிறோம் என்பது நம் கையில்தான் உள்ளது, " என்று தேவாலய புனரமைப்பு குறித்து செவ்வாய் மாலை அவர் கூறியுள்ளார்.
 
எனினும், 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ட்ராஸ்பர்க் தேவாலயத்தை புனரமைக்கும் அமைப்பின் தலைவர் எரிக் பிஷ்சர், நோட்ர-டாம் தேவாலயத்தை புனரமைக்க பல தசாப்தங்கள் ஆகும் என்கிறார்.
 
 
தேவாலயத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து தனியார் நிறுவனங்களின் ஊழியர்களிடம் தீ விபத்து உண்டானதற்கான காரணத்தை அறியும் நோக்கில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
யாரும் வேண்டுமென்றே தீ வைக்கவில்லை என்பதுபோல தெரிகிறது என்று விசாரணை அதிகாரி ரெமி ஹெய்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
 
தேவாலயத்தில் இருந்து மீட்கப்பட்ட கலைப் பொருட்களும், வழிபாட்டுப் பொருட்களும் லூவ்ர் அருங்காயக்கத்தில் வைக்கப்படும். அவற்றில் சேதமடைந்தவை மீண்டும் புனரமைக்கபபடும் என பிரான்ஸ் கலாசார அமைச்சர் பிராங்க் ரெய்ஸ்ட்டர் கூறியுள்ளார்.
 
சிலுவையில் ஏற்றப்படும் முன் ஏசு கிறிஸ்து அணிந்திருந்ததாக நம்பப்படும் முள் கீரிடம், சிலுவையின் ஒரு பகுதி, ஓர் ஆணி, மன்னர் ஒன்பதாம் லூயிஸ் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஆடை ஆகியவை அந்தப் பொருட்களில் அடக்கம்.
 
அந்த தேவாலயத்தில் இருந்த ஓவியங்கள் வரும் வெள்ளிக்கிழமை முதல் அங்கிருந்து அகற்றப்படும் என்று அமைச்சர் பிராங்க் ரெய்ஸ்ட்டர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகிப் போட்டியில் கலந்து கொண்ட மனைவி, இடமாற்றம் செய்யப்பட்ட ரஷ்ய பாதிரியார்