மன்னருக்கு எதிராகவும், விசுவாசமின்றியும் செயல்பட்டதாக கூறி, தாய்லாந்தின் அரசுப்படையை சேர்ந்த பெண் தளபதி சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக்-கிற்கு வழங்கப்பட்டிருந்த அரச தகுதியை நீக்கியுள்ளார் தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்ன்.
பெண் தளபதியான சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் பேராசையோடு செயல்பட்டதாகவும், அரசிக்கு இணையான நிலைக்கு தன்னை உயர்த்தி கொள்ள முயன்றதாகவும் தாய்லாந்து அரசவை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் மன்னர் சுதிடா என்ற பெண்ணை மணந்து அவரை அரசியாக்கினார். இவர் அரசரின் நான்காவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது இந்த திருமணம் நடந்த இரண்டாவது மாதத்தில் சின்னிநாட்டிற்கு இந்த அரச தகுதி வழங்கப்பட்டது.
தாய்லாந்து ராணுவத்தில் ஒரு தளபதியாகவும் பணியாற்றிய சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக், விமானியும், செவிலிதாயும், மெய்காப்பளரும் ஆவார். கடந்த 100 ஆண்டுகளில், தாய்லாந்து அரச அதிகார குழுவில் இந்த தகுதியை பெற்றுள்ள முதல் பெண் சின்னிநாட் வாங்வாச்சீர்னாபாக் என்பது குறிப்பிடத்தக்கது.