Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெனெட் – திரை விமர்சனம்

டெனெட் – திரை விமர்சனம்
, வெள்ளி, 4 டிசம்பர் 2020 (23:59 IST)

டிகர்கள்: ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பாட்டின்சன்,எலிசபெத் டெபிக்கி, டிம்பிள் கபாடியா, மிச்செல் கெய்ன், கென்னத் ப்ரனா; படத்தொகுப்பு: ஜெனிஃபர் லேம்; எழுத்து, இயக்கம்: கிரிஸ்டஃபர் நோலன்
The Dark Knight வரிசை திரைப்படங்கள், Interstellar, Dunkrik, Inception படங்களை இயக்கிய க்ரிஸ்டஃபர் நோலனின் அடுத்த திரைப்படம் இது. வெகு நாட்களுக்கு முன்பே தயாராகியும், கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.

 
இது ஒரு Spy - Thriller என்றாலும் Inceptionஐப் போலவே இந்தப் படத்திலும் காலப் பயணம் இருக்கிறது. ஆகவே குழப்பமும் உண்டு. படத்தின் கதை குத்துமதிப்பாக இதுதான்: டெனெட் என்ற ரகசிய அமைப்பு கதாநாயகனை (ஜான் டேவிட் வாஷிங்டன்) ஒரு பணிக்கு அமர்த்துகிறது. அதாவது காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்யக்கூடிய துப்பாக்கி ரவைகள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றால் உலகுக்கே ஆபத்து என்றும், எதிர்காலத்திற்குப் பயணம் செய்து, அவற்றை அழிக்க வேண்டுமென்பதுதான் அவருக்கு இடப்பட்ட பணி.
 
 
அந்த துப்பாக்கி ரவைகள் ப்ரியா சிங் (டிம்பிள் கபாடியா) என்பவரிடம் இட்டுச் செல்கின்றன. அவர், ஆண்ட்ரெய் சதோர் (கென்னத் பிரனா) ஒரு ரஷ்ய ஆயுத வியாபாரிதான் இந்த வேலையைச் செய்தது என்கிறார்.
 
இந்த ஆண்ட்ரெய் சதோருக்கு தன் மனைவி மீது கொலைவெறி. இதுபோக அவருக்கு புற்றுநோயும் இருக்கிறது. தான் சாகும்போது உலகமும் அழியும் வகையில் ஒரு ஏற்பாட்டைச் செய்கிறார். ஆகவே காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்து, சதோரின் சாவை சற்று தள்ளிப்போட்டு, உலகை அழிவிலிருந்து மீட்கிறார்கள் டெனெட் வீரர்கள். இதற்குப் பிறகு சில, பல கொலைகள் நடக்கின்றன.
 
 
க்ரிஸ்டஃபர் நோலனின் திரைப்படங்கள், மற்ற ஹாலிவுட் திரைப்படங்களைப் போன்றவை அல்ல. இவருடைய பல படங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் பார்த்தால்தான் முழுமையாக அனுபவிக்க முடியும். Interstellar, Inception ஆகிய படங்கள் இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள். ஆனால், இந்தப் படம், Interstellar, Inception படங்களையும் மீறிய அடர்த்தியைக் கொண்டது. ஆகவே, குறைந்தது மூன்று தடவைகள் பார்த்தால்தான் அதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். பிரச்சனை என்னவென்றால், இந்தப் படத்தை ஒரு முறை பார்த்து முடிக்கும்போதே, 'அப்பாடா, முடிந்தது' என்ற நிம்மதி ஏற்படுவதால், இன்னொரு முறை பார்க்க முடியுமா என்ற கேள்வியே எழவில்லை.
 
காலப் பயணங்கள் பற்றிய பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இவ்வளவு சிக்கலான திரைக்கதை, அறிவியல் பின்னணியோடு ஒரு திரைப்படம் வெளிவந்ததில்லை என்றே சொல்லலாம். ஒரு ஆக்ஷன் காட்சியில், சில கார்கள் காலத்தில் முன்னோக்கியும் சில காலத்தில் பின்னோக்கியும் நகர்கின்றன. அந்தத் தருணத்தில் படம் பார்க்கும் ரசிகர்கள், படத்தை புரிந்துகொள்வது பற்றிய நம்பிக்கையையே இழந்துவிடுவார்கள். நடப்பது, நடக்கட்டும் என்ற மனநிலை வந்துவிடுகிறது.
 
ஆனால், காட்சி ரீதியாக பிரமிக்கவைக்கும் திரைப்படம் இது. ஒளிப்பதிவாளரைத் தவிர, படத்தில் பாராட்டத்தக்க ஒருவர், படத் தொகுப்பாளர். இந்தத் திரைக்கதையை புரிந்துகொண்டு படத்தைத் தொகுத்திருக்கிறார்.
 
க்ரிஸ்டோஃபர் நோலனின் ரசிகர்கள் படத்தை 2- 3 முறை பார்த்து, புரிந்து ரசிக்கலாம். மற்றவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமான திரைப்படம்தான்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் வறுமையை அகற்றும் பழங்கால கைவினை தொழில்