Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

"குவாரி உரிமையாளர்களுக்கு சாதகமாக தமிழ்நாடு அரசு செய்த சட்டத் திருத்தம்"

Advertiesment
, சனி, 7 ஜனவரி 2023 (10:07 IST)
தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் கனிமச் சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு அரசு செய்திருக்கும் மாற்றம், தமிழகத்தில் உள்ள காப்புக்காடுகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
 
இது தொடர்பான அரசாணையை ரத்துசெய்யக் கோரி, ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பூவுலகின் நண்பர்கள் போன்ற சூழலியல் அமைப்புகள் என மொத்தம் 18 அமைப்புகள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளன.
 
குவாரி அமைப்பது தொடர்பான புதிய சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்புகள் கிளம்புவது ஏன்?
 
என்ன பிரச்னை?
தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கடந்த 14.12.2022 அன்று தமிழ்நாடு சிறு கனிம சலுகைச் சட்டவிதிகள் 1959இல் (The Tamilnadu Minor Mineral Concession Rules) பிரிவு 36 உட்பிரிவு 1(A)வில் சட்டத்திருத்தம் செய்து ஓர் அரசாணையை வெளியிட்டது.
 
இந்தச் சட்டத்திருத்தத்தின்படி காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கி.மீ சுற்றளவுக்குள் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டது.
 
காப்புக்காடுகள், காட்டுயிர் சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், மற்றும் யானைகளின் வலசைப் பாதைகள் ஆகியவற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுவரை கனிமச் சுரங்கங்கள் அமைக்கத் தடை விதித்து கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்த நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் இருந்து காப்புக்காடுகள் மட்டும் நீக்கப்பட்டுள்ளது.
webdunia
இந்த சட்டத்திருத்தம் காப்புக்காடுகளுக்கு அருகேயே குவாரிகள் அமைய வழிவகுப்பதால் இது மிகப்பெரிய சூழலியல் சீர்கேட்டையும் மனித விலங்குகள் மோதலையும் ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர் இந்த சட்டதிருத்தத்தை எதிர்ப்பவர்கள்.
 
ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தடைக்குப் பிறகு 200க்கும் மேற்பட்ட குவாரிகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், அவசியம் இருப்பதன் காரணமாகவே இந்த சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
 
 
'தமிழக அரசின் முரணான செயல்'
ஒரு புறம் காடுகளின் பரப்பளவை 33 சதவிகிதமாக அதிகரிக்கப்பதற்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திவரும் நிலையில், இது மாதிரியான சட்டத் திருத்தம் அதற்கு முரணாக இருப்பதாக கூறுகிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.
webdunia
"குவாரி உரிமையாளர்களுக்காகத்தான் இந்த சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. காப்புக்காடுகளுக்கு அருகில் குவாரி அமைக்க வேண்டிய தேவை ஏன் வருகிறது? இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்துவரும் நிலையில், காப்புக்காடுகளை பாதிக்கும் வகையில் குவாரிகளுக்கு அனுமதியளிப்பதை எப்படி ஏற்க முடியும்" எனக் கேள்வியெழுப்புகிறார் சுந்தர்ராஜன்.
 
ஒரு மாநிலம் என்றுவரும் போது 35 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மொத்த வனப்பகுதியின் பரப்பளவு 23.4 சதவிகிதம்தான். எனவே காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். இப்படியான சூழலில் தமிழக அரசு செய்திருக்கும் இந்த சட்டத்திருத்தத்தின் பின்னணியில் எந்த நியாயமான காரணமும் இல்லை என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
 
"குவாரி தொழில் பாதிக்கப்படுகிறது, அரசுக்கு வருவாய் வர வேண்டும் என்பதால்தான் இந்தத் திருத்தம் கொண்டுவரப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. காப்புக்காடுகளுக்கு அருகே இருந்த குவாரிகளை கடந்த ஆண்டு மூடியதால் அரசுக்கு இவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது, இவ்வளவு கிரானைட் தட்டுப்பாடு ஏற்பட்டது என்று ஏதேனும் புள்ளிவிவரங்கள் இருக்கிறதா என்றால் இல்லை. எந்தத் தேவையும் இல்லாமல் காப்புக்காடுகளுக்கு அருகே குவாரியை மீண்டும் அனுமதிப்பதற்கான தேவை ஏன் வருகிறது?" என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
 
காப்புக்காடுகளில் இருந்து 60மீ தொலைவில்தான் குவாரிகள் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளதாகக் கூறும் வெற்றிச்செல்வன், ஒரு கிமீ வரம்பு எங்கிருக்கிறது, 60மீ எங்கிருக்கிறது எனக் கேள்வியெழுப்புகிறார்.
 
இந்த சட்டத் திருத்தம் தொடர்பான விளக்க அறிக்கையில் பாதுகாக்கப்பட்ட காடுகள் என்பதன் கீழ் சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்கள் மட்டுமே வரும், காப்புக்காடுகள் வராது என அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் இயற்கை முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகள் இன்னும் சரணாலயமாகவோ தேசிய பூங்காவாகவோ அறிவிக்கப்படாமல், காப்புக்காடுகளாகவே உள்ளதாக் கூறுகிறார் சுந்தர்ராஜன்.
 
பின்வாங்குவது தவறான முடிவு?
கோதண்ட வர்மன் வழக்கு உட்பட சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், சரணாலயம், தேசிய பூங்கா, யானை வழித்தடம் உள்ளிட்ட சுழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைச் சுற்றுயுள்ள பகுதியை குறிப்பிட்ட தூரத்திற்கு சுழலியல் உணர்திறன் பகுதியாக அறிவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலும் மத்திய அரசு வழிகாட்டுதல் அடிப்படையிலும்தான் கடந்த 2021ஆம் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
 
ஆனால், தற்போதைய சட்டத்திருத்ததிற்கும் உச்ச நீதிமன்றத்தின் அதே தீர்ப்பை தமிழக அரசு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகக் கூறுகிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
 
"உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் சரணாலயம், தேசிய பூங்கா, யானை வழித்தடங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி காப்புக்காடுகளுக்கும் சேர்த்து விதிக்கப்பட்ட தடையை தற்போது தமிழக அரசு நீக்கியுள்ளது. இதையும் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்துவிட்டு, தற்போது அதில் இருந்து பின்வாங்கியிருப்பது எப்படி சரியாகும். காப்புக்காடுகளையும் பாதுகாக்க வேண்டும் என்று எடுத்த முடிவுதான் அறிவியல்பூர்வமாக சரியானது" என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
 
இந்தப் புதிய சட்டத்திருத்தத்தினால் நம்முடைய பசுமைப் பரப்பு குறையும், மனித விலங்குகள் மோதல் அதிகரிக்கும், பல்லுயிர் சூழல் பாதித்து மிகப்பெரிய சூழலியல் சீர்கேடு ஏற்படும் என்கிறார் சுந்தர்ராஜன்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போகி நாளன்று பழைய பொருட்களை எரிக்க தடை!