Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலா முன் உள்ள 4 வாய்ப்புகள் என்னென்ன?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலா முன் உள்ள 4 வாய்ப்புகள் என்னென்ன?
, செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (14:28 IST)
பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய பிறகு, சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் வி.கே.சசிகலா. இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்த பிறகும் அவர் மௌனமாக இருப்பது ஏன்?

பிரதமர் விழாவும் தினகரன் பேட்டியும்!

தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோதி, ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிகள் லைவ் செய்து கொண்டிருந்த நேரத்தில், ஒரத்தநாட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இந்தச் சந்திப்பின்போது பேசிய அவர், `இந்த ஆட்சி எப்படி அமைந்தது என 5 வயது குழந்தையைக் கேட்டால்கூட தெரியும். அ.தி.மு.கவில் சசிகலாவை 100 சதவிகிதம் சேர்க்க மாட்டோம் எனவும் தினகரன் ஒரு தனி மரம் எனவும் கூறுகிறார்கள். இவர்களது அதிகாரங்கள் எல்லாம் இன்னும் 10, 15 தினங்களில் மாறிவிடும். மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவித்தால் தெரிந்துவிடும். தேர்தலுக்கோ முன்போ பின்போ ஜனநாயக வழியில் அ.தி.மு.கவை மீட்டெடுப்போம்" என்றார்.

`அ.தி.மு.க, அ.ம.மு.க இணைப்புக்காக பிரதமர் வந்துள்ளாரா?' எனச் செய்தியாளர்கள் தினகரனிடம் கேட்டபோது, ``யூகங்களுக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது. தமிழகத்துக்குச் சிறப்பான திட்டங்களைப் பிரதமர் செயல்படுத்தி வருகிறார்" என்றார்.

சசிகலா மனநிலை!

`` சசிகலா வந்த பிறகு தினகரன் மட்டுமே தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார். அவரது செயல்பாடுகளில் சிலவற்றை குடும்ப உறவுகள் ரசிக்கவில்லை" என்கின்றனர் சசிகலா தரப்பினர். இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழுக்காக பேசிய அவர்கள், `` எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் பழிவாங்க வேண்டும் என்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார். ஆனால், `அவர்களைப் பழிவாங்குகிறோம் என்ற பெயரில் அ.தி.மு.கவின் வீழ்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்துவிடக் கூடாது' என்பதுதான் சசிகலாவின் எண்ணம்" என்கின்றனர்.

தொடர்ந்து பேசியவர்கள், `` கடந்த சில நாள்களாக தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் சசிகலா பேசும்போது, ` தேர்தலில் அ.ம.மு.கவாக நாம் போட்டியிடுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதன்மூலமாக அ.தி.மு.க வீழ்ந்துவிடக் கூடாது. எம்.ஜி.ஆரும் அம்மாவும் கட்டிக் காத்த இயக்கம் இது' என்றார். ஆனால், தினகரனோ இதற்கு நேர் எதிர் மனநிலையில் இருக்கிறார். `ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இருவரையும் தோற்கடித்துவிட்டால் கட்சி நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் காட்டிய பிறகும் அமைதியாக ஏன் இருக்க வேண்டும்? தனித்துப் போட்டியிட்டு 40 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டால், அடுத்த முதல்வரை நாம் தீர்மானிப்போம்' என்ற மனநிலையில் இருக்கிறார்.

தினகரனுடன் பனிப்போர்?

அதனால்தான் எந்த முடிவையும் அறிவிக்காமல் சசிகலா அமைதியாக இருக்கிறார். அதிலும், கடந்த சில நாட்களாக தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷுக்கு சசிகலா முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இது தினகரன் தரப்பை உற்றுக் கவனிக்க வைத்துள்ளது. ஏனென்றால் தினகரனுக்கும் டாக்டர் வெங்கடேஷுக்கும் இடையில் அவ்வளவு புரிதல் இல்லை. பெங்களூருவில் இருந்து வந்த பிறகு மருத்துவர்களின் ஆலோசனைப்படி தீவிர ஓய்வில் சசிகலா இருக்கிறார். தினமும் செய்தித் தொலைக்காட்சிகளை மட்டுமே தொடர்ந்து கவனித்து வருகிறார். அவரோடு நீண்டகாலம் நட்பில் உள்ள முன்னாள் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி மட்டுமே சந்தித்துப் பேசினார். வேறு யாரையும் சந்திக்க சசிகலா அனுமதி கொடுக்கவில்லை" என்கின்றனர்.
webdunia

தொடர்ந்து, `ஒருவேளை அ.ம.மு.க தனித்துப் போட்டியிட்டால் முதல்வர் வேட்பாளராக தினகரனை முன்னிறுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறதா?' எனக் கேட்டோம். ``அப்படியொரு மனநிலையில் சசிகலா இருக்கிறாரா எனத் தெரியவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தினகரனை முன்னிறுத்தி சசிகலா பின்னே நிற்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டு வருகிறது. எனவே, முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல்கூட தேர்தலைச் சந்திக்கலாம். அதேநேரம் அ.தி.மு.கவில் உரிமை கொண்டாட அவர் கண்முன்னால் நான்கு வாய்ப்புகள் உள்ளன" என்கின்றனர்.

நான்கு வாய்ப்புகள் என்னென்ன?

1. தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முடிவில் சசிகலா இருக்கிறார். அப்போது என்ன நிலைப்பாடு எடுத்து மக்களிடம் பேசப் போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அது எதிர்பார்ப்புக்குரியதாகவும் உள்ளது. சட்டரீதியாகவே `தான் பொதுச் செயலாளர்' எனக் கூறி வருகிறார். அதனை ஓரளவுக்கு அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் ஓர் இடைக்கால உத்தரவை வழங்கியது. சிவில் வழக்கு 857/2018-ன்படி, `வங்கிக் கணக்குகளை அவர் பார்வையிடலாம்; சசிகலாவுக்குத் தெரியாமல் ஆவணங்கள் திருத்தப்படக் கூடாது என்பதால் அந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைந்து நடத்திய பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது' எனக் கூறியுள்ளது. நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்ததால் இந்த வழக்கை சசிகலா தீவிரப்படுத்தவில்லை. இனி வரும் நாட்களில் இந்த வழக்கை அவர் தீவிரப்படுத்த முயற்சிக்கலாம்.

2. சிவில் வழக்கு 857/2018 நிலுவையில் உள்ளபோது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், `அ.தி.மு.க பொதுச் செயலாளர் நான்தான் என்பதற்கு நீதிமன்றம் தடைவிதிக்கவும் இல்லை; அங்கீகரிக்கவும் இல்லை. அதனால் வேட்பாளர்களுக்குக் கொடுக்கப்படும் ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையொப்பமிடும் அதிகாரத்தை எனக்கும் கொடுக்கலாம் எனத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கும் வேலையைத் தொடங்கலாம்.

3. சசிகலாவின் இந்த வேண்டுகோளை தேர்தல் ஆணையம் நிராகரித்தால், `எனக்கு இடைக்கால நிவாரணம் கொடுங்கள்' என இதே கோரிக்கையோடு உச்ச நீதிமன்றத்தில் அவர் முறையிடவும் வாய்ப்புகள் உள்ளன.

4. அ.தி.மு.கவின் சட்டவிதிகளின்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது. நீதிமன்றம் இதனை உறுதிப்படுத்திவிட்டால், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லாதவையாக ஆகிவிடும்.

- ``இந்த 4 வாய்ப்புகளை மையமாக வைத்தே சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும், அதனால்தான் தினகரனின் முயற்சிகளுக்கு செவிசாய்க்காமல் மௌனம் காக்கிறார். இதில் சசிகலாவுக்கு எதிராக ஏதேனும் உத்தரவுகள் வந்தால், தனித்துப் போட்டி என்ற முடிவை நோக்கி அவர் தள்ளப்படலாம்" என்கின்றனர் அவரது உறவினர்கள்.

ஏ டீமாக மாறுமா பி டீம்?

`சசிகலா என்ன முடிவில் இருக்கிறார்?" என அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் காசிநாத பாரதியிடம் கேட்டோம். `` "சின்னம்மாவின் வருகை, மக்கள் மத்தியில் அனுதாப அலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக அம்மா நினைவிடத்தை மூடுவது, தலைமைக் கழகத்தைப் பூட்டி வைத்திருப்பது போன்ற நிகழ்வுகளை ஆளும்தரப்பினர் மேற்கொண்டனர். இவ்வளவு அழுத்தங்களையும் தாண்டி கொட்டும் பனியிலும் அவருக்கு 20 லட்சம் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். சின்னம்மாவை நோக்கித் தொண்டர்கள் அணிவகுத்து வருகின்றனர்" என்கிறார்.
webdunia

மேலும், `` பெங்களூருவில் இருந்து கட்சிக் கொடியை கட்டிக் கொண்டு அவர் வந்த காட்சியைப் பார்த்த தொண்டர்கள், `அம்மாவுக்கு இணையாக வலிமை உள்ளவர் சின்னம்மாதான்' என்பதை உணர்ந்து கொண்டனர். தேர்தல் பிரசாரத்துக்கு சின்னம்மா வரும்போது பி டீமாக இல்லாமல் ஏ டீமாகவே அ.ம.மு.க மாறும். அ.தி.மு.க நூறாண்டுகள் வாழ வேண்டும் என்றால், சின்னம்மா தலைமையேற்க வேண்டும்" என்றவரிடம், `அ.ம.மு.க தனித்துப் போட்டியிட முடிவு செய்துவிட்டதா?' என்றோம். ``காலமும் சூழலும் தீர்மானிக்கும்" என்றார்.

அரசியல் நிர்பந்தம்!

``சசிகலாவின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?" என அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சட்டமன்றத் தேர்தலில் `பிரதமர் எதிர்ப்பு, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு' ஆகியவற்றை மையமாக வைத்து தினகரனை ஆதரிப்பதைத் தவிர சசிகலாவுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் 5.5 சதவிகித வாக்குகளை தினகரன் பெற்றார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 5.5 சதவிகிதத்துக்கு மேல் சசிகலா பெற்றுவிட்டால், அவர் ஓர் அரசியல் சக்தியாக வலம் வருவார்.

எனவே, தினகரனை முக்கிய நபராகக் காட்டுவதன் மூலமே சசிகலா தன்னை நிரூபித்துக் கொள்ள முடியும். தினகரனை ஆதரிப்பது என்பது சசிகலாவின் அரசியல் நிர்பந்தம். நேற்றைய அரசு விழாவில், சசிகலாவை எதிர்த்துப் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுத்தும் மௌனம் காத்த பன்னீர்செல்வத்தை பிரதமர் புறக்கணித்ததில் இருந்தே பா.ஜ.கவின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிகிறது. இந்தநிலையில் சசிகலாவுக்கு உள்ள வாய்ப்பு என்பது தினகரனைக் களத்தில் இறக்குவதுதான்" என்கிறார்.

ஜெயலலிதா பிறந்தநாள்

``சிவில் வழக்கு 857/2018-ன்படி மீண்டும் அ.தி.மு.கவுக்கு சசிகலா உரிமை கொண்டாட முடியாதா?" என்றோம். ``சிவில் வழக்கு தீர்ப்பு முடிவாதற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன. இரட்டை இலை என்பது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோருக்கு மட்டுமே சொந்தமானது. 2021 தேர்தலிலும் இதில் எந்த மாற்றமும் இருக்காது. எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டு, `அம்மா வழியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்' எனக் கோவை கூட்டத்தில் ஓ.பி.எஸ் பாராட்டு சான்றிதழ் வாசித்துவிட்டார். எனவே, வரும் தேர்தலில் எந்தவிதச் சிக்கல்களும் அ.தி.மு.கவில் இருக்காது" என்கிறார்.

``முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வரவுள்ளது. அந்தநாளில் அவரின் நினைவிடத்தை அ.தி.மு.க தரப்பு மூடி வைப்பதற்கு வாய்ப்பில்லை. அன்று அம்மா சமாதிக்கு சசிகலா வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அன்றே அவர் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கலாம் என எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.கவுக்கு உரிமை கொண்டாடி நீதிமன்றம் செல்வாரா.. அ.ம.மு.க என்ற கட்சியின் சார்பாக தினகரனை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்பாரா என்பதும் அன்று தெரிந்துவிடும்" என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்சிகளிடம் டீல்.. பெட்டி வாங்குவது ரஜினி ப்ளான்!? – முன்னாள் நிர்வாகி பகீர் குற்றச்சாட்டு!