Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் வெற்றி: இந்தியா என்ன செய்யப் போகிறது?

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் வெற்றி: இந்தியா என்ன செய்யப் போகிறது?
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (12:13 IST)
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் இந்த வேகத்தில் கைப்பற்றியது உலகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு மற்றும் ராஜீய நிபுணர்களை திகைக்க வைத்திருக்கிறது.

காபூல் நகரம் வீழ்ச்சியடைந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் செய்திருக்கும் முதலீடுகளையும், உடைமைகளையும் விட்டுவிட்டு வெளிநாடுகள் அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரிகளையும் குடிமக்களையும் அவை மீட்டு வருகின்றன.
 
தாலிபன்களின் வெற்றி தெற்காசிய நாடுகளின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படத்தக்கூடும். இது இந்தியாவுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கலாம்.
 
ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கப் போகும் பாகிஸ்தான் மற்றும் சீனவுடனான எல்லைச் சிக்கல்கள், பதற்றமான உறவுகள் ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய காரணிகளாக இருக்கும்.
 
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான எல்லை, அதிக கட்டுப்பாடு இல்லாதது. இது இரு தரப்பு உறவில் மிக முக்கியமான அம்சம். இப்போது ஆப்கானிஸ்தானில் பெரிய அளவில் செயலாற்ற வேண்டும் என்று சீனாவும் விரும்புகிறது.
 
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, தாலிபன் தலைவர்கள் கடந்த மாதம் பெய்ஜிங்கில் சந்தித்தார். ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் சீனா இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
 
இந்தப் புதிய புவிசார் அணிசேர்க்கை "அனைத்தையும் தலைகீழாக மாற்றும்" என்கிறார் ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் கவுதம் முகோபாத்யாயா.
 
காபூலில் இருந்த ஜனநாயக அரசு, மேற்கத்திய நாடுகள், மற்றும் இந்தியா போன்ற பின ஜனநாயக நாடுகளுக்கும் இடையேயான ஓர் கூட்டணியாக ஆப்கானிஸ்தான் இதுவரை இருந்து வந்தது. ஆனால் "மகா ஆட்டத்தின்" புதிய ஆட்டக்காரர்களாக பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான், சீனா ஆகிய நாடுகளை உலகம் இனி பார்க்கக்கூடும்
 
இதை இந்தியாவுக்கு இழப்பாகவும் பாகிஸ்தானுக்கு பெரிய வெற்றியாகவும் பலர் கருதுகின்றனர். ஆனால் இது மிகவும் மேலோட்டமான பார்வை என்கிறார் இந்தியாவின் முன்னாள் அரசுமுறை அதிகாரி ஜிதேந்திரநாத் மிஸ்ரா. ஏனென்றால் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லையை தாலிபன்கள் ஒருபோதும் அங்கீகரித்தது இல்லை. இது பாகிஸ்தானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியது.
 
"தங்களது எல்லையை தாலிபன்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்கே முன்னுரிமை அளிக்கும்" என்று கூறினார் முகோபாத்யாயா..
 
இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சி அமைவது இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானுக்கு உத்திசார் ஆதாயத்தை அளிக்கிறது என்பதும் உண்மைதான்.
 
"இஸ்லாமாபாத் தான் எப்போதும் விரும்பிவந்த ஒன்றை இப்போது பெற்றிருக்கிறது" என்கிறார் வாஷிங்டனில் உள்ள வில்சன் மையத்தின் சிந்தனைக் குழுவின் துணை இயக்குநர் மைக்கேல் குகல்மேன். அது தன்னால் எளிதில் செல்வாக்குச் செலுத்த முடிகிற ஓர் ஆப்கானிஸ்தானிய அரசாங்கம்.
 
"ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய கேந்திர இலக்குகள் உள்ளன" என்று கூறுகிறார் குகல்மேன். "இந்த நேரத்தில் அது தன்னை மிகப்பெரிய வெற்றியாளராக பார்க்கிறது."
 
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவு அல்லது ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானியுடன் தங்களுக்கு இருந்த மந்தமான உறவுகளால் பாகிஸ்தான் கவலையில் இருந்தது. தங்களது பொருளாதார நிலையும் அவர்களுக்கு சிக்கலாக இருந்தது.
 
இப்போது தாங்கள் தான் வெற்றியாளர் என்று பாகிஸ்தான் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. ஏனெனில் சீனாவுடனான "அனைத்துச் சூழல்" நட்பும் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், பெய்ஜிங் அதன் வலிமையை காட்ட இப்போது தயங்கவில்லை. "சீனா தனது சொந்த விதிகளின்படி இப்போது ஆட்டத்தை ஆட முடியும்," என்கிறார் மிஸ்ரா.
 
சீனாவிற்கு ஆப்கானிஸ்தானில் பொருளாதார நோக்கங்கள் உண்டு. அதிகரித்துவரும் கனிமங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய சீனா நினைக்கிறது. ஆனால் அதைவிட முக்கியமாக கிழக்கு துர்கஸ்தான் இஸ்லாமிய இயக்கம்(ETIM) ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படுவதற்குத் தடை விதிக்க தாலிபன்களை சீனா வலியுறுத்தும். சீனாவில் இஸ்லாமியர் ஆதிக்கம் உள்ள ஜின்ஜியான் மாகாணத்தில் அமைதியின்மைக்கு காரணம் இந்த இயக்கமே என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
 
சீனாவும் பாகிஸ்தானும் "ஆப்கானிஸ்தானில் ஒருவரது முதுகில் மற்றவர் சவாரி செய்யும்" என்று முகோபாத்யாயா கூறுகிறார். அதே நேரத்தில் கடந்த காலங்களில் மற்ற உலக வல்லரசுகளைப் போல எந்த வலையிலும் சீனா விழுந்துவிடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
 
ரஷ்யாவும் ஈரானும் ஒரே பாதையில் இருப்பதாகத் தெரிகிறது. அவை தங்களது தூதரகங்களைக் காலி செய்யவில்லை. இரு நாடுகளின் தூதர்களும் காபூலில் இன்னும் பணியாற்றி வருகிறார்கள்.
 
ஆக, இந்தியா இப்போது என்ன செய்யலாம்? பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யாவைப் போல இந்தியா ஒருபோதும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மிகப்பெரிய பங்கு வகித்ததில்லை. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் பண்பாட்டு உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியா எப்போதும் முனைப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது. கல்வி, வேலை அல்லது மருத்துவ சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள்..
 
"இன்றைய சூழலில் ஆப்கானிஸ்தானுக்கு நல்ல வாய்ப்புகள் என்று ஏதுமில்லை. மோசமானவை அல்லது மிக மோசமான வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன" என்று கூறுகிறார் மிஸ்ரா.
 
தாலிபன் அரசை அங்கீகரிப்பதா வேண்டாமா என்பது இப்போது இந்தியா முன்னிருக்கும் மிகப்பெரிய சவால். ரஷ்யாவும் சீனாவும் தாலிபன்களின் அரசை ஏற்றுக்கொள்ளும்போது, இந்தியாவின் நிலை கடினமாகிவிடும். 1999-ஆம் ஆண்டைப் போல தாலிபன் அரசை பாகிஸ்தான் அங்கீகரிக்க வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
தாலிபன்களுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு வழியைத் திறந்து வைப்பதே இந்தியாவுக்கு இருக்கும் சிறந்த வழி. ஆனால் தாலிபன்களுடனான இந்தியாவின் உறவின் வரலாற்றைக் கருத்தில் கொண்டால் இது கசப்பானதாகவே இருக்கப் போகிறது.
 
1999-ஆம் ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியவர்களுக்கு தாலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர். இந்தச் சம்பவம் இந்தியர்களின் நினைவில் செதுக்கப்பட்டிருக்கிறது. 1996 மற்றும் 1999 க்கு இடையேயான கால கட்டத்தில் தலிபான்களுடன் சண்டையிட்ட வடக்குக் கூட்டணி எனப்படும் ஆயுதக் குழுவுடன் இந்தியா எப்போதும் நெருக்கமான உறவைப் பேணி வருகிறது.
 
தாலிபன்கள் காபூலைக் கைப்பறிவிட்டதால், பிராந்தியம் ஸ்திரமாக இருக்கவும், சொந்த நலனைப் பாதுகாக்கவும்கடந்த காலக் கசப்புகளை ஒதுக்கிவைக்கவே இந்தியா விரும்பும். தாலிபன்கள் வெற்றி பெற்றிருப்பதால் கிடைத்திருக்கும் ஊக்கத்தைப் பயன்படுத்தி ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ-தாய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற கவலையும் இருக்கிறது.
 
"இந்தியா கத்தி மீது நடக்க வேண்டிய தருணம் இது" என்கிறார். லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் அரசியல் பேராசிரியரும், ஆப்கானிஸ்தான் பற்றிய புத்தகத்தின் ஆசிரியருமான அமலேந்து மிஸ்ரா
 
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியம், முஜாஹிதீன்களின் அடுத்த இலக்காக மாறிவிடாமல் இருப்பதை உறுதி செய்ய ஓர் உத்தி இந்தியாவுக்குத் தேவைப்படலாம்.
 
தாலிபான்களுடன் இந்தியா தொடர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்பதுடன், தாலிபன் எதிர்ப்பு அணியுடன் பணியாற்றுவதில் எந்த அளவுக்கு ஆர்வங்காட்ட வேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
 
தாலிபான்கள் மீது அழுத்தம் கொடுப்பதற்காக ஓர் அணியைத் திரட்ட மேற்கு நாடுகள் திட்டமிடுகின்றன. தாலிபன் அரசுக்கு எதிரான ஒரு கூட்டணிக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருக்கிறார்.
 
ஆப்கானிஸ்தானின் வடக்குக் கூட்டணி மீண்டும் அணி சேர்ந்து தாலிபன்களுக்கு எதிராகச் சண்டையிடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அதேபோல அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கும் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கூட்டணிக்கும் இடையே யார் பெரியவன் என்ற போட்டிக்கான களமாக ஆப்கானிஸ்தான் மாறவும் வாய்ப்பிருக்கிறது.
 
எனவே இந்தியாவுக்கு எளிதான வழிகள் ஏதும் இல்லை. ஆனால் இந்தியாவின் முடிவுகள் பிராந்திய அமைதி மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தப்பிக்க விமானம் இல்ல; வேற வழி இல்ல! – பாகிஸ்தானிடம் அடைக்கலம் கேட்கும் ஆப்கன் அகதிகள்!