Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டெர்லைட்: 3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் - இயல்புநிலை பாதிப்பு

ஸ்டெர்லைட்: 3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் - இயல்புநிலை பாதிப்பு
, வியாழன், 24 மே 2018 (14:45 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி, இணையதள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு சுற்றாணை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் 22ஆம் தேதி நடந்த போராட்டங்களுக்கு சமூக வலைதளங்களின் மூலமாகவே 20,000 பேர்வரை திரட்டப்பட்டனர் என்றும் சமூக  விரோதிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பொய்யான தகவல்களை மிகத் தீவிரமாக, சமூகவலைதளங்களின் மூலமாக பரப்பினர் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இம்மாதிரியான வதந்திகளும் பொய்களும் பரப்பப்படுவது நிறுத்தப்பட்டு, மாவட்டத்தில் அமைதி திரும்ப வேண்டுமானால், இணைய சேவைகள் நிறுத்தப்படுவது அவசியம் என்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அரசு கருதுகிறது என்றும் அதனால் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை - ஐந்து நாட்களுக்கு - இணைய சேவைகளை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் முடக்குவதற்கு உத்தரவிடுவதாகவும் அந்தச் சுற்றாணையில் கூறப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இணைய சேவை முடக்கப்படுவது அவ்வப்போது நடந்துவந்தாலும், தமிழகத்தில் இம்மாதிரி இணைய  சேவை முடக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். தூத்துக்குடியில் இருக்கும் செய்தியாளர்கள்கூட விருதுநகர் அல்லது ராமநாதபுரம் மாவட்ட எல்லைக்குச்  சென்றே செய்திகளை அனுப்பவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்
 
இதற்கிடையில் கலவரங்களால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் என். வெங்கடேஷ் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக தற்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். என். வெங்கடேஷ் சமக்ர சிக்ஷா அபியானின் மாநில கூடுதல் திட்ட இயக்குநராக இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியின் புதிய மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
 
தூத்துக்குடியின் காவல்துறை கண்காணிப்பாளரான பி. மகேந்திரனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை வடக்கு போக்குவரத்து காவல்துறையின் துணை  ஆணையராக அவர் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தூத்துக்குடியின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணையம் முடக்கம் எதிரொலி: ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதி