Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்?

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்?
, திங்கள், 18 நவம்பர் 2019 (21:31 IST)
யூ.எல். மப்றூக்
 
இலங்கையில் ஜனாதிபதிகளை தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லப்போகிறது என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தெரிவித்தார்.
இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக, கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தேர்தலில், சிங்கள மக்களின் அமோக ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து பெரும்பான்மையான வாக்குகளை வழங்கிய ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ, இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
 
இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் மக்களின் அரசியல் குறித்து, எதிர்காலத்தில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும், கலாநிதி பாஸில் உடன் பிபிசி தமிழ் பேசிய போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.
 
"தேர்தலுக்குப் பின்னரான தற்போதைய சூழ்நிலையை மிகக் கவனமாகப் புரிந்து கொண்டு, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து, தமது சமூகத்துக்காக பெரும்பான்மை மக்களின் ஆதரவுள்ள அரசியல் தலைமைகளோடு ஒத்திசைந்து போவது பற்றி யோசிக்க வேண்டும்" எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
 
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல்துறைத் தலைவர் பாஸில் உடன் பேசியபோது, அவர் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.
 
"இலங்கை முஸ்லிம்களை பொறுத்த வரை, அவர்களின் அரசியல் போக்கு, மிக முக்கியமான மாற்றம் மற்றும் சிக்கல்களுக்குள் அகப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
 
முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
 
சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் தமிழ் மக்கள் எவ்வாறான எதிர்ப்பு அரசியல் நிலைமைகளை - சிங்கள பெரும்பான்மை சமூகத்திலிருந்து எதிர் நோக்கினார்களோ, அதனை ஒத்த மாதிரியான நிகழ்வுகள், யுத்தத்துக்குப் பின்னரும் இடம்பெற்று வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
 
அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக எழுச்சியடைய முற்பட்ட தமிழ் சமூகமானது, பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அரசியல் ரீதியான செயற்பாட்டின் ஊடாக, சிறுமைப்படுத்தப்பட்ட ஒரு சூழ்நிலை தென்பட்டிருக்கிற வேளையிலே, முஸ்லிம் சமூகம் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டு எழுச்சியடைந்து வருகிறது. ஆனால், தற்போது அந்த சமூகமும், இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீளவும் ஒரு சவாலுக்கு உட்பட்டுள்ளது.
 
எம்.எம். பாஸில்
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரைக்கும், யுத்தத்திற்கு பின்னர் அவர்களுடைய அரசியல், சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் குறித்து எதிர்ப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுடைய அரசியல், சமூக, பொருளாதார இருப்புக்கள் அழிவுக்குட்படுத்தப்படுகின்ற சூழ்நிலைகள் தோன்றியிருக்கின்றன.
 
அதேவேளையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலானது, முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் இருப்பின் மீதும், அவர்களின் சுதந்திரமாக வாழ்வுரிமை மற்றும் மனித உரிமைகள் மீதும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில்தான், இலங்கையினுடைய ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளதோடு, அதில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளார்.
 
சிங்கள சமூகத்தின் ஒன்றிணைவு
பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ 52.25 வீத வாக்குகளை பெற்றிருக்கிறார். மற்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 41.99 வீத வாக்குகளை மட்டும் பெற்றிருக்கின்றார். இந்த நிலைவரமானது இந்த நாட்டினுடைய சிறுபான்மையினர் பற்றிய மிக முக்கியமான செய்தியை சொல்ல வருகிறது.
 
இலங்கையில், முஸ்லிம்களுடைய அரசியல் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் மிக முக்கிய அம்சமாக, சிங்கள தேசிய வாதத்தின் மீள் எழுச்சி இடம்பெற்றிருக்கிறது.
 
சிங்கள மக்களோடு வாழ்கிற முஸ்லிம்கள் சார்பாக விடப்பட்ட தவறுகள் இதற்குப் பங்களித்திருக்கலாமென்றும் பார்க்கப்படுகிறது.
 
தற்போது 52 வீதத்தையும் தாண்டிய வெற்றியினை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றிருக்கும் நிலையில், இலங்கை முஸ்லிம்கள் இந்த தேர்தலில் வழிநடத்தப்பட்டமை குறித்தும் நாங்கள் மிக கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
 
சிங்கள பெரும்பான்மை மக்கள், பல விடயங்களுடாக ஒன்றிணைக்கப்பட்டார்கள். சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துப் பிரச்சாரங்களின் ஊடாகவும், எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஊடாகவும், அந்த ஒழுங்கமைப்புகள் இடம்பெற்றன.
 
மேலும் ஏப்ரல் 21ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், சிங்கள மக்கள் மத்தியில் பாதுகாப்புப் பற்றிய ஒரு அச்சம் ஏற்பட்டதோடு, பலம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவரின் தேவையும் வலியுறுத்தப்பட்டது.
 
இந்தச் சூழ்நிலை ஏற்படுத்துவதற்கு தேசிய சூழல், சர்வதேசத்தின் தலையீடு போன்றன பின்னணியில் இருந்திருக்கலாம் என்கிற பார்வையும் உள்ளது. இதன் அடிப்படையில் சிங்களச் சமூகம் ஒன்றிணைந்திருக்கின்ற வேளையிலே, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மிகக் கவனமாகச் சிந்தித்து, தமது சமூகத்தை வழி நடத்தியிருக்க வேண்டும் என்கிற கருத்து உள்ளது.
 
கவனிக்கத் தவறிய விடயங்கள்
 
அந்த வகையில் பார்க்கின்ற போது, சிங்கள மக்களின் ஒன்று திரண்ட செயற்பாட்டினை, முஸ்லிம் தலைவர்கள் அனுமானித்துக் கொள்ளவில்லையா, அல்லது விளங்கிக் கொள்ளவில்லையோ என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
 
இலங்கையில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இந்தத் தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 வீதத்தைத் தாண்டிச் செல்லப் போகிறது என்பதையும் முஸ்லிம்களை வழிநடத்தி வரும் - முஸ்லிம் அரசியல் தலைமைகளான ரஊப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுகிறது.
 
பலமிழந்த சிறுபான்மையினர்
1990களிலே அப்போதைய ஜனாதிபதி பிரேமதாஸவுடன் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் இணைந்திருந்த காலம் மற்றும் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் அஷ்ரப் இணைந்திருந்த காலங்களில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையின மக்கள் இருந்து வந்துள்ளார்கள். 2015ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் இதனை மிகத் தெளிவாகக் கண்டோம்.
 
ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியுள்ள இந்தத் தேர்தல் முடிவானது, சிறுபான்மையினரின் ஆதரவில்லாமலேயே, ஜனாதிபதியொருவரை பெரும்பான்மை இனத்தவர்கள் தெரிவு செய்வதற்கானதொரு நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது.
 
வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் ஆங்காங்கே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்திருந்தாலும் கூட, வடக்கு, கிழக்கிலே தமிழர்களுடன் ஒன்றிணைந்து வாழ்கின்ற முஸ்லிம்கள், பெரும்பாலும் தமது வாக்குகளை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கினர். இதன் காரணத்தினால், முஸ்லிம்களுடைய பங்குபற்றுதல் இல்லாமலேயே சிங்கள ஜனாதிபதியொருவரை சிங்கள சமூகம் தெரிவு செய்திருக்கிறது.
 
இந்த ஜனாதிபதி ஆட்சி முறைமை சிறுபான்மையினருக்கு சாதமானது என்று சொல்லப்பட்ட போதிலும், அது இன்று கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
 
முஸ்லிம்களின் முக்கியத்துவம் இழக்கப்பட்டிருக்கிற தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலிலே முஸ்லிம்களின் பேரம் பேசும் சக்தியும் கேள்விக்குரியதாக மாறியுள்ளதோடு, அது தேவையில்லை என்கிற சூழ்நிலையினையும் இந்தத் தேர்தல் முடிவு வெளிக்காட்டியிருக்கிறது.
 
செய்ய வேண்டிவை என்ன?
எனவே, முஸ்லிம் தலைமைகள் மீண்டும் மிகக் கவனமாகச் சிந்தித்து, தங்கள் அரசியல் செயல்முறைமையினை கொண்டு நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
 
இங்கு இரண்டு வகையான செய்திகளை என்னால் சொல்ல முடியும். ஒன்று முஸ்லிம் சமூகத்துக்கானது. மற்றையது முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் அரசியல் தலைமைகளுக்கானது.
 
முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானத்துடன் கவனமாகச் சிந்தித்து பெரும்பான்மைச் சமூகத்தோடு இந்த நாட்டிலே ஒன்றித்துச் செயற்பட வேண்டும் என்கிறதொரு செய்தி சிங்களப் பெரும்பான்மையினரால் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களோடு ஒற்றுமையாக வாழ்வதற்குரிய வழிமுறைகளை முஸ்லிம்கள் தேட வேண்டும்.
 
இந்த நாட்டின் இனத்துவ வீதாசாரப் புள்ளி விவரத்தின் படி, 74 வீதத்தினர் சிங்களவர்களாக இருக்கின்றனர். அதன் காரணத்தினால் சிறுபான்மையினர் அரசியலில் பெரும் செல்வாக்கினை தொடர்ந்தும் செலுத்த முடியாத நிலைமை இருப்பதனாலும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைககள் அதிகரித்துக் காணப்படுவதனாலும், முஸ்லிம்கள் ஒத்தியங்கிப் போய் தங்களின் வாழ்க்கையினையும் தம்முடைய எதிர்கால சமூகத்தின் வாழ்க்கையினையும் நிலைப்படுத்துவதற்கான தேவையினைத் தேட வேண்டியுள்ளது.
 
அடுத்து நான் கூறும் செய்தி, இந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கிணங்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து, மிக முக்கியமான ஒரு விடயத்தைக் கவனத்திற்கொள்ள வேண்டும் என்பதாகும். அதாவது எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தை எப்படி வழிநடத்துவது என்பதாகும். பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய அரசியல் நடவடிக்கைகளை, எதிர்காலத்தில் முஸ்லிம் தலைமைகள் எடுப்பதன் ஊடாகத்தான், முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்க முடியும்.
 
இந்த நிலையில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை கவனமாகப் பரிசீலித்து, அதன் அடிப்படையிலான ஒரு ஆட்சியினைச் செய்யவுள்ளதாக தற்போது மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
 
இதனூடாக நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால், நாடாளுமன்றத்தில் மூன்றிரலின்டு பெரும்பான்மை ஆதரவினை அவர்கள் திரட்டிக் கொள்ளப் போகிறார்கள். ஏற்கனவே அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையின் ஊடாகத்தான் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்றினார். அதன்போது முஸ்லிம்களின் உதவியும் அவர்களுக்குத் தேவைப்பட்டது.
 
எனவே, தற்போதைய சூழலை மிகக் கவனமாகப் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து, தமது சமூகத்துக்காக பெரும்பான்மை மக்களின் ஆதரவுள்ள அரசியல் தலைமைகளோடு ஒத்திசைந்து போகக் கூடிய நடவடிக்கைகள் குறித்து யோசிக்க வேண்டும்.
 
மியான்மர் மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த தேசியவாதச் செயன்முறைகளும், பௌத்தத்தை மீள் புனர் நிர்மாணம் செய்வதற்கான மீள் எழுச்சிகளும் இடம்பெறுகின்றன. இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம்கள் - பௌத்தத்தின் ஆதிக்கத்துக்குட்பட்டு சின்னாபின்னப்பட்டு வருகின்றனர்.
 
இலங்கையிலும் அதே சூழ்நிலை உருவாகியிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்திலே, முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் மிக நிதானமாகச் செயற்பட்டு, தேசிய அரசியலில் பெரும்பான்மையினத்தவரோடு ஒத்துப் போகக் கூடியவாறான செயற்பாடுகளில் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகினி உடையில் பெட்ரோல் பங்க் முன் குவிந்த வாடிக்கையாளர்கள்: பெரும் பரபரப்பு