Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை: இரு அங்குல புத்திர் சிலையின் மதிப்பு 600 கோடி - விசாரிக்கும் காவல்துறை

இலங்கை: இரு அங்குல புத்திர் சிலையின் மதிப்பு 600 கோடி - விசாரிக்கும் காவல்துறை
இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட சிறிய சிலையொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சிலையின் பெறுமதி இலங்கை பெறுமதியில் சுமார் 600 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 238 கோடி ரூபாய்) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 
இலங்கையின் ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் வைத்து இந்த சிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர்  கைப்பற்றப்பட்டுள்ளது.
 
சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாரான சந்தர்ப்பத்திலேயே குறித்த சிலையை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
 
குறித்த புத்தர் சிலையை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில், சட்டவிரோத நடவடிக்கையொன்று இடம்பெறுவதாக போலீஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவலொன்று கிடைத்துள்ளது.
 
அதனைத் தொடர்ந்து, போலீஸார் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
இதன்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் செயற்பட்ட நால்வரை, போலீஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
 
இதையடுத்து, சந்தேகநபர்கள் வசமிருந்த 2 அங்குல உயரமான, மிக பழைமை வாய்ந்த நீல மாணிக்கக்கல்லில் செய்யப்பட்ட புத்தர் சிலையை போலீஸார்  கைப்பற்றியுள்ளனர்.
 
இந்த நிலையில், குறித்த 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மொனராகலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து  எதிர்வரும் 16ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட குறித்த நான்கு சந்தேகநபர்களும் புத்தர் சிலையை விற்பனை செய்யும் இடை தரகர்களாகவே செயற்பட்டுள்ளதாக மொனராகலை போலீஸார்  தெரிவிக்கின்றனர்.
 
எனினும், குறித்த சிலையின் உரிமையாளர் தொடர்பிலான சில தகவல்கள் கிடைத்துள்ள போதிலும், விசாரணைகளின் நிமிர்த்தம் அந்த தகவல்களை வெளியிட  போலீஸார் மறுப்பு தெரிவித்தனர்.
 
அத்துடன், இந்த சிலை தொடர்பிலான தொல்பொருள் திணைக்களம், மாணிக்கக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை ஆகியவற்றின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போலீஸார் தெரிவிக்கின்றனர்.
 
இந்த அறிக்கைகள் கிடைத்தவுடன், குறித்த சிலை எவ்வளவு பழைமை வாய்ந்தது மற்றும் எவ்வளவு பெறுமதியானது என்பது தொடர்பில் சரியான தகவல்களை அறிந்துக்கொள்ள முடியும் என நம்பப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொனராகலை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹத்ராஸ் பெண்ணை கொன்றது அவரது பெற்றோர்களா? – போலீசுக்கு வந்த கடிதம்!