Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோனம் மாலிக்: ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனை

சோனம் மாலிக்: ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனை
, திங்கள், 18 ஜனவரி 2021 (13:49 IST)
இவர் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒலிம்பிக் பதக்கம் பெற்றவரை இருமுறை வீழ்த்தியுள்ளார்.

சோனம் மாலிக் இன்னும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த சாக்‌ஷி மாலிக்கை வென்றுள்ளார்.

விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் அந்த துறையைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்களை தங்கள் ரோல் மாடல் என சொல்வதுண்டு. ஆனால் இளம் வீராங்கனையான சோனம் மாலிக்கிற்கு அந்த அவசியம் இருக்கவில்லை.

ஹரியாணாவை சேர்ந்த அவருக்கு குழந்தைப் பருவத்திலிருந்து பல தேசிய மற்றும் சர்வதேச மல்யுத்த வீரர்கள் சூழ வளரும் வாய்ப்பு கிடைத்தது.

ஹரியாணாவில் சோனிப்பட்டில் உள்ள மதினா கிராமத்தில் 2002ஆம் அண்டு பிறந்த சோனம் மாலிக், ஒரு மல்யுத்த வீரர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஒரு நல்ல வீராங்கனையாக என்னென்ன நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களைக் கேட்டுக் கொண்டே வளர்ந்தார்.

இளம் வயதிலேயே அவருக்குள் ஒலிம்பிக் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

இளம் வயதில் உண்டான கனவு

சோனம் மாலிக்கின் தந்தை மற்றும் பல உறவினர்கள் ஏற்கனவே மல்யுத்தத்தில் இருப்பதால் சோனம் மாலிக்கின் பாதையும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றே கூறலாம். சிறுவயதிலேயே அவர் மல்யுத்தத்தை விரும்ப தொடங்கினார். சோனம் மாலிக்கின் தந்தையின் நண்பர் ஒருவர் சோனமின் கிராமத்தில் மல்யுத்த அகாதமி ஒன்றை தொடங்க, தனது தந்தையுடன் அங்கு செல்ல தொடங்கினார் சோனம் மாலிக்.

தொடக்கத்தில் அந்த அகாதமியில் `மல்யுத்த மேட்` வசதி இல்லை. எனவே சோனம் மாலிக் தரையில் பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மழைக்காலங்களில் தரை சேறும் சகதியுமாக மாறிவிடும் என்பதால், அகாதமியில் பயிற்சி பெறுபவர்கள் சாலைகளில் பயிற்சி மேற்கொண்டனர்.

இம்மாதிரியான குறைகள் இருந்தபோதும் அந்த அகாதமி சோனம் மாலிக்கின் ஆரம்பக் காலத்தில் தேவையான பயிற்சியை வழங்கியது. அவரின் குடும்பத்தின் ஆதரவும் வலுவாக இருந்தது.

2016ஆம் அண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற பின் சோனம் மாலிக் பெரும் தன்னம்பிக்கையை பெற்றார்.

இந்த வெற்றிதான் பயிற்சி செய்தால் மேலும் பல பதக்கங்களை வெல்லலாம் என்ற நம்பிக்கையை சோனம் மாலிக்கிற்கு தந்தது.

2017ஆம் இளையோருக்கான மல்யுத்த போட்டியில் தங்க பதக்கம் வென்றபோது முக்கிய வீராங்கனைகளின் பட்டியலில் இணைந்தார் சோனம். அந்த போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்திற்கான விருதையும் பெற்றார்.

இந்த வெற்றி அவரின் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்தது. இதில் அவருக்கு ஸ்பான்சர்ஷிப் மட்டுமல்ல, ஒலிம்பிக் தகுதி போட்டிகளில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

ஹரியாணாவை சேர்ந்த பிற சிறப்பான மல்யுத்த வீரர்களின் பட்டியலில் சோனம் மாலிக்கின் பெயரும் இடம் பிடித்தது.

காயத்தால் ஏற்பட்ட நெருக்கடி

சோனம் சிறப்பான வீராங்கனையாக உருவாகிக் கொண்டிருக்க 2017ஆம் ஆண்டு கிட்டதட்ட அவரின் கனவை தகர்க்கும் ஒரு காயம் ஏற்பட்டது.

இளையோருக்கான மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்றபின், மாநில அளவில் நடைபெற்ற ஒரு மல்யுத்த போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட, மருத்துவர்கள் அவரின் நரம்புகள் செயல்படவில்லை என தெரிவித்தனர்.

அதன் பிறகு ஒன்றரை வருடம் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதிலிருந்து மீள நீண்ட நாட்கள் பிடித்தது. இது ஒரு இளம் வீராங்கனையின் எதிர்கால வாழ்க்கையை கிட்டதட்ட முடித்துவிடும்.

ஆனால் அந்த காயமும், ஓய்வு எடுத்த நேரமும் அவரின் குணம், வலிமை, விடா முயற்சி, உறுதி ஆகியவற்றை சோதிப்பதாக இருந்தது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக்கை 62 கிலோ எடை பிரிவில் கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் தோற்கடித்த பின் மீண்டும் வெற்றியை பார்க்க தொடங்கினார் சோனம் மாலிக்.

அவர் பெற்ற இரண்டாவது வெற்றி மூலம் அவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் சோனம் மாலிக்.

சோனம் மாலிக்குக்கு அவரின் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வந்துள்ளது. எனவே மகள்கள் தங்களின் லட்சியத்தை அடைய குடும்பங்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்கிறார் அவர்.

சோனம் மாலிக்கிறகு பிபிசி அனுப்பிய மின்னஞ்சலுக்கு கிடைத்த பதில்கள் மூலம் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்ச்சைக்குள்ளான வாட்ஸ் ஆப் பாலிசி! – சம்மன் அனுப்பிய நாடாளுமன்ற நிலைக்குழு!