Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்: ராணுவப் புரட்சி அல்ல என்கிறார் பிரதமர்

Advertiesment
மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்: ராணுவப் புரட்சி அல்ல என்கிறார் பிரதமர்
, செவ்வாய், 12 ஜனவரி 2021 (14:37 IST)
மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஏதுவாக அந்நாட்டின் மாமன்னர் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று (ஜனவரி 12) காலை வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நாட்டில் அவசரநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மலேசியாவில் இரண்டாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (லாக் டவுன்) அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நடவடிக்கையானது ராணுவப் புரட்சி அல்ல என்றும், நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் மலேசியப் பிரதமர் மொகிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு மற்றும் மாநில அரசுகள் நீடிக்கும் என்று குறிப்பிட்ட அவர், பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என்ற உறுதிமொழியையும் அளித்துள்ளார். இன்று காலை தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றியபோது அவர் இதை தெரிவித்தார்.

நாட்டில் வைரஸ் தொற்றுப்பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது தெரியவந்ததால் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஹாஜி அகமட் ஷா உணர்ந்ததாக அரண்மனைக் காப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் பட்சத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாகவே அவசரநிலை உத்தரவு மீட்டுக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மலாய் ஆட்சியாளர்களின் கருத்துகளையும் கேட்டறிந்த பிறகே மாமன்னர் முடிவெடுத்ததாகவும், அரசுத்தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவ, சுகாதார நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட சுயேச்சை சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (ஜனவரி 11) பிரதமர் மொகிதீன் யாசீனுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வைரஸ் தொற்றுப்பரவலை முற்றிலும் முறியடிக்கும் நடவடிக்கையாக அவசரநிலை பிரகடனத்திற்கு மாமன்னர் அனுமதி வழங்கி உள்ளதாகவும் அரண்மனைக் காப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாமன்னர் கவலை அடைந்துள்ளதாகவும் தொற்றுப் பரவலை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் மக்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை அவர் உணர்ந்துள்ளதாகவும் அரண்மனை அறிக்கை தெரிவிக்கிறது.

மொகிதீன் யாசின்: உடனடி தேர்தலை நடத்த மாமன்னர் விரும்பவில்லை

இதற்கிடையே இன்று காலை நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மலேசியப் பிரதமர் மொகிதீன் யாசின் அவசரநிலை பிரகடனமானது ராணுவப் புரட்சி அல்ல என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அமைச்சரவையும் மாநில அரசுகளும் செயல்படும் என்று குறிப்பிட்ட அவர், சுய பாதுகாப்பு மற்றும் நலன்களை மனதிற்கொண்டு மக்கள் அமைதியாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகரித்து வரும் வைரஸ் தொற்றுப் பரவலானது நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பதே அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட முக்கிய காரணம் என்று குறிப்பிட்ட அவர், இதன் அடிப்படையிலேயே அவசரநிலை பிரகடனத்துக்கு மாமன்னர் ஒப்புதல் வழங்கியதாக தெரிவித்தார்.

தொற்றுப்பரவல் மோசமாக உள்ள நிலையில், உடனடி தேர்தலை நடத்த மாமன்னர் விரும்பவில்லை என்றும், நாட்டின் நலனையும் பொதுமக்களின் நலனையும் பாதுகாப்பது தமது கடமை என்ற அடிப்படையில் அவர் இம்முடிவுக்கு வந்திருப்பதாகவும் பிரதமர் மொகிதீன் யாசின் தெரிவித்தார்.

அவசரநிலை காலத்தில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் சொத்துக்களை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும், இவ்வேளையில் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைகள் கூட்டம் நடத்தப்படாது என்றும் பிரதமர் மொகிதீன் யாசின் கூறினார்.

மேலும் எந்தவிதமான இடைத்தேர்தல்கள் மற்றும் பொதுத்தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அவசரநிலையை நீட்டிப்பது அல்லது முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் சுயேச்சை சிறப்புக்குழு அவ்வப்போது அளிக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் மாமன்னர் முடிவெடுப்பார் என்று தெரிவித்த பிரதமர் மொகிதீன் யாசின், அவசரநிலை காலம் முடிவுக்கு வந்த பிறகே நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றார்.

அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் அவசரநிலை பிரகடனம்

மலேசியாவில் அண்மைய சில மாதங்களாக அரசியல் களத்தில் குழப்பம் நீடித்து வருகிறது.

பிரதமர் மொகிதீன் யாசின் தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. உடனடியாக பிரதமர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் பிரதமர் மொகிதீன் அரசாங்கம் பட்ஜெட் கூட்டத்தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. மலேசிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. இவற்றுள் 111 வாக்குகள் பட்ஜெட்டுக்கு ஆதரவாகப் பதிவாகின. பட்ஜெட்டுக்கு 108 எம்பிக்கள் வாக்களித்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரை எப்படியோ சமாளித்துவிட்ட நிலையில், மொகிதீன் யாசின் அரசுக்கு ஆதரவளித்து வந்த இரண்டு எம்பிக்கள் தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் ஆளும் பெரிக்கத்தான் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது என்பதால் பிரதமர் மொகிதீன் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிரமாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மலேசியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது ராணுவப் புரட்சி அல்ல என பிரதமரும் விளக்கம் அளித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா 3.0... உருமாறியதில் இருந்து உருமாறிய வைரஸ்!!