பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சிக்குரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணி 182 இடங்களை பெற்று தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுத்துள்ளது.
எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு நாடாளுமன்றம் அமைவதால், தற்போது அனைவரின் பார்வையும் பிரதமர் பதவியை நோக்கியே உள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில், தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சி (ஆர்என்) முன்னிலையில் இருந்த நிலையில், இறுதி முடிவில் இடதுசாரி கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
பிரான்ஸின் டிவி சேனல்களில், தேர்தல் முடிவுகளை காண்பித்தபோது, அதில் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சியின் தலைவர் மரைன் லே பென்னோ, அடுத்த பிரதமாவதற்கு காத்திருந்த அவரது கட்சியை சேர்ந்த ஜோர்டான் பர்டெல்லாவோ வெற்றியை கொண்டாடவில்லை.
திடீர் திருப்பமாக, இடதுசாரி கூட்டணியே வெற்றியை பெற்றது. யாரும் எதிர்பாராத வகையில் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாத கூட்டணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி, தேசிய பேரணிக் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியது.
தீவிர இடதுசாரி கொள்கை கொண்டவர் என விமர்கர்களால் அழைக்கப்படும் மூத்த இடதுசாரி தலைவரான ஜா-லுக் மெரான்ஷன் அதிக நேரம் காத்திருக்காமல் தங்களது கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இந்த கூட்டணி 182 இடங்களை பெற்று தனிப்பெரும் அணியாக உருவெடுத்துள்ளது.
புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியை ஆட்சி அமைக்க அதிபர் அழைக்க வேண்டும் என ஸ்டாலின்கிராட் சதுக்கத்தில் கட்சியின் ஆதரவாளர்களிடம் மெரான்ஷன் கூறினார்.
மேலும் தானும் தனது கூட்டணியும் தோல்வியடைந்ததை, அதிபர் எமானுவேல் மக்ரோங் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங் திடீரென முன்கூட்டியே தேர்தல்களை அறிவித்த நிலையில், சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்கள், பசுமைவாதிகள் மற்றும் பிரான்ஸ் அன்பௌட் (LFI) உள்ளடங்கிய இடதுசாரிக் கட்சிகள் புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியை உருவாக்கின. ஆனால், ஆட்சி அமைக்கும் அளவுக்கு இந்த கூட்டணி வெற்றி பெறவில்லை.
பிரான்ஸில் தொங்கு நாடாளுமன்றம் அமையவுள்ளது. 577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 289 இடங்களைப் பெற்று, எந்த கூட்டணியும் தனிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை. அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் மையவாத கூட்டணி 168 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு வரை தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற பேச்சே இருந்தது.
முதல் சுற்றுத் தேர்தலில் பெரும்பான்மையை நோக்கி தேசிய பேரணி நகர்ந்து கொண்டிருந்தது, ஆனால், இரண்டாவது மற்றும் இறுதிக் சுற்றில் அந்த கட்சி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
மரைன் லே பென் மற்றும் ஜோர்டான் பர்டெல்லா ஆகியோர் வாக்களிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தங்கள் கட்சிக்கு இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
முடிவுகளை தைரியமாக எதிர்கொண்ட லே பென், இரண்டு வருடங்களுக்கு முன்பு நமக்கு 2 எம்.பிகள் மட்டுமே இருந்தனர். இன்று தேர்தலில் அதிக எம்.பிக்களை பெற்ற கட்சியாக உள்ளோம் என கூறினார்.
கடந்த நாடாளுமன்றத்தில் 88 எம்.பி.க்களைக் கொண்டிருந்த தேசிய பேரணி கட்சி இப்போது 140க்கும் அதிகமான எம்.பி.க்களை பெற்றிருக்கிறது.
லே பென் சொன்னதுபோல, இந்த தேர்தலில் வேறு எந்த கட்சியும் 100 இடங்களை தாண்டவில்லை. மக்ரோங் கட்சியும், பாப்புலர் ஃப்ரண்ட் கட்சியும் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன.
இயற்கைக்கு மாறான "மரியாதையற்ற கூட்டணிகளால்" தனது கட்சி தோல்வியடைந்ததாக ஜோர்டான் பர்டெல்லா புகார் கூறினார்.
தற்போது வெற்றி பெற்ற 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை "குடியரசு முன்னணியின்" ஒரு பகுதியாகக் கருதுகின்றனர்.
இடதுசாரிகளின் அடுத்த இடத்தில் இவர்கள் உள்ளனர். இதன் மூலம் தேசிய பேரணிக் கட்சி மூன்றாம் இடத்திற்கு சென்றது.
யாருக்கு எத்தனை இடம்?
புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி- 182
மையவாத கூட்டணி- 168
தேசிய பேரணிக் கட்சி + கூட்டணி -143
குடியரசு + வலது- 60
பிற இடது- 13
பிற- 11
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து வன்முறை
பிரான்ஸ் அரசியல் தற்போது நிலையற்ற சூழ்நிலைக்கு சென்றுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தெருக்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாரிஸ் மற்றும் நான்டெஸ் மற்றும் லியோன் உள்ளிட்ட நகரங்களில் ஒரு சில வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன
தற்போது அனைவரின் பார்வையும் பிரதமர் பதவியை நோக்கியே உள்ளது. தற்போது உள்ள முட்டுக்கட்டையான நிலையில் அடுத்த பிரதமர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மக்ரோங் கட்சியைச் சேர்ந்த தற்போதைய கேப்ரியல் அட்டல் பதவி விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். தங்கள் கட்சியை சேர்ந்தவரே அடுத்த பிரதமாவார் என மூத்த இடதுசாரி தலைவரான ஜா-லுக் மெரான்ஷன் கூறியுள்ளார்.