Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய என்விடியா - பாத்திரம் கழுவியவரின் நிறுவனம் வென்றது எப்படி?

Nvidia

Prasanth Karthick

, புதன், 19 ஜூன் 2024 (16:22 IST)
என்விடியா (Nvidia) நிறுவனம் உலகின் அதிக சந்தை மதிப்புமிக்க நிறுவனமாக உருமாறியுள்ளது. செவ்வாயன்று (ஜூன் 18) அதன் பங்கு விலை எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியதை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக சந்தை மதிப்புமிக்க நிறுவனமாகி உள்ளது.



பங்குச் சந்தையில், செவ்வாயன்று என்விடியாவின் பங்குகள் சுமார் 3.5% உயர்ந்தன, அதன் பங்கு வர்த்தக நாள் சுமார் $136 என்ற மதிப்பில் முடிவடைந்தது, இது மைக்ரோசாப்ட் மதிப்பை விட அதிகம். கடந்த மாத தொடக்கத்தில், இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவனமான என்விடியா செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருளுக்குத் தேவையான கம்ப்யூட்டர் சிப்’-களை உற்பத்தி செய்து வருகிறது, அதன் தயாரிப்புகளுக்கான தேவை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதால் அதன் விற்பனை மற்றும் லாபம் உயர்ந்து வருகிறது.

மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மீதான எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது. அந்த தொழில்நுட்பத்தை சாத்தியமாக்கும் ’சிப்’புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வது என்விடியா நிறுவனம் தான். எனவே என்விடியாவின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

பல முதலீட்டாளர்கள் என்விடியா நிறுவன வருவாய் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று நம்புகிறார்கள், இது அதன் பங்கு விலை உயர காரணமாக இருந்தது, இருப்பினும் சிலர் அதன் உயர் மதிப்பீட்டைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

இத்தனை சவால்களை உள்ளடக்கிய என்விடியா நிறுவனத்தின் வரலாறு என்ன? உணவகங்கள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலை செய்துக் கொண்டிருந்த ஹுவாங்கின் கனவில் உதித்த இந்நிறுவனத்தின் வரலாறு அவ்வளவு எளிதானது அல்ல.

மூன்று கூறுகளை குறிக்கும் வார்த்தைகளின் கலவையே என்விடியா (Nvidia). இந்நிறுவனம் ஜென்சன் ஹுவாங்கால் 1993இல் நிறுவப்பட்டது. இதில் என்.வி ’நெக்ஸ்ட் விஷன்’ எனும் தொலைநோக்குப் பார்வையைக் குறிக்கிறது. விஐடி (Vid) என்ற சொல் வீடியோவை குறிக்கிறது. ஏனெனில் இந்நிறுவனம் கணினிகளுக்கான கிராஃபிக் கார்டுகளை உருவாக்கத் தொடங்கியது. ஆனால் இது லத்தீன் வார்த்தையான இன்விடியாவையும் (Invidia) குறிக்கிறது. அதன் அர்த்தம், பொறாமை.

கடந்த ஆண்டு இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் அற்புதமான முடிவுகளைக் கருத்தில் கொண்டு, அந்நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் மீது போட்டியாளர்கள் பொறாமைப்படக் கூடும்.

மார்ச்-2023 மற்றும் மார்ச்-2024 க்கு இடையில், என்விடியாவின் பங்கு மதிப்பு 64 டாலர்களில் இருந்து 886 டாலர்களாக உயர்ந்தது. மேலும் நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு 2 டிரில்லியன் டாலர்களை தாண்டியது. ஆல்ஃபாபெட் (கூகுள்), அமேசான் மற்றும் மெட்டாவை விஞ்சி, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட உலகின் மூன்றாவது மதிப்புமிக்க நிறுவனமாக இது மாறியுள்ளது. மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் முதலிரு இடங்களில் உள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மீதான எதிர்பார்ப்பு மற்றும் அந்த தொழில்நுட்பத்தை சாத்தியமாக்கும் ’சிப்’புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சப்ளையர் நிறுவனம் என்பதாலும் என்விடியாவின் மதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.

நிச்சயமாக, ஜென்சன் ஹுவாங்கின் தொலைநோக்குப் பார்வை இல்லாமல் இது சாத்தியமில்லை. செயற்கை நுண்ணறிவு குறித்த புரிதல் தொடங்குவதற்கு முன்வே இத்தொழில்நுட்பத்தில் இறங்கினார்.

’வயர்டு’ பத்திரிகை (Wired) சமீபத்தில் கூறியது போல், ஹுவாங், ’இந்தாண்டின், தசாப்தத்தின் மனிதராக கருதப்படுகிறார். அதேநேரத்தில், அமெரிக்க தொலைக்காட்சி சேனலான சி.என்.பி.சி-யின் முதலீட்டு ஆய்வாளரான ஜிம் க்ரேமர் பார்வையில், என்விடியா நிறுவனர் ஒரு தொலைநோக்கு பார்வையாளராக ஈலோன் மஸ்க்கை விஞ்சியுள்ளார்.

ஹுவாங்கின் வாழ்க்கை, கஷ்டங்கள், ஆபத்துகள் மற்றும் கடின உழைப்பு ஆகியவை நிறைந்தவை. கழிப்பறைகள் மற்றும் உணவகங்களில் மேசைகளை சுத்தம் செய்வதும் இதில் அடங்கும்.

புலம்பெயர் வாழ்க்கை

கடந்த 1963இல் பிறந்த ஹுவாங், தனது குழந்தைப் பருவத்தை தைவான் மற்றும் தாய்லாந்தில் கழித்தார். அவருடைய பெற்றோர் அவரையும் அவரது சகோதரரையும் அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு செய்தனர்.

webdunia


இரு சகோதரர்களுக்கும் ஆங்கிலம் பேசத் தெரியாது. வெகு காலத்திற்கு முன்பு குடியேறிய அவர்களின் உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இருவரும் கென்டக்கியில் உள்ள ஒனிடா பாப்டிஸ்ட் நிறுவனத்தில் படித்தனர். அச்சமயத்தில், அப்பள்ளி ஓர் வழக்கமான பள்ளியைவிட சீர்திருத்த மையம் போன்றே இருந்தது.

2016 இல் பள்ளியால் வெளியிடப்பட்ட செய்திமடலின் படி, இரு சகோதரர்களும் அங்கேயே தங்கவும், சாப்பிடவும் மற்றும் வேலை செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிறுவனத்தில் உயர்நிலைப் கல்வி வரை மட்டுமே அளிக்கப்பட்டது.

சிறுவனான ஜென்சனின் வேலை கழிவறைகளை சுத்தம் செய்வது.

"சிறு குழந்தைகள் குறும்புத்தனமாக இருப்பார்கள். எல்லோரிடமும் சிறு கத்திகள் இருந்தன. குழந்தைகள் சண்டையிடுவது நல்லதல்ல. சண்டையிடும் போது குழந்தைகள் காயமடைந்தனர்" என்று ஜென்சன் NPR-க்கு 2012-ல் அளித்த நேர்காணலில் கூறினார்.

பல சிரமங்கள் இருந்த போதிலும், ஹுவாங் எப்போதும் அதுவொரு சிறந்த அனுபவம் என்றும், அங்கு தான் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறினார்.

ஹுவாங் மற்றும் அவரது மனைவி லோரி ஆகியோர் 2016 ஆம் ஆண்டில் 20 லட்சம் டாலர்களை அந்தப் பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் பெண்களுக்கான தங்குமிடங்களுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கு நன்கொடையாக அளித்தனர்.

உணவகத்தில் வேலை

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுடைய பெற்றோரும் அமெரிக்காவின் ஒரேகானில் குடியேறினர். இதன்பின், தன் பெற்றோர்களுடன் அவர்கள் வாழ்ந்தனர்.

ஹுவாங் ஒரேகான் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் படித்தார்.

அவரைப் பொறுத்தவரை, அப்போதுதான் கணினிகளுக்குப் பின்னால் உள்ள “மந்திரம்” அவருக்கு புலப்பட்டது. அங்குதான் அவர் தனது மனைவி லோரியைச் சந்தித்தார். இருவரும் ஒன்றாக ஆய்வக பயிற்சிகளில் ஈடுபடுவர்.

80 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் படித்த மூன்று பெண்களில் லோரியும் ஒருவர். 2013 இல் அப்பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், தான் எப்படி என்விடியாவின் இணை நிறுவனர்களான கிறிஸ் மலாச்சோவ்ஸ்கி மற்றும் கர்டிஸ் ப்ரிம் ஆகியோரை தற்செயலாக சந்தித்தேன் என்பது குறித்து ஹுவாங் பேசினார்.

"தற்செயல் வெற்றிக்கு முக்கியமானது என்று நான் அடிக்கடி கூறுவேன்," என்று அவர் கூறினார்.

என்விடியாவின் மூன்று இணை நிறுவனர்கள், கலிஃபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள டென்னியின் துரித உணவுகளுக்கான உணவகத்தில் காலை உணவை உட்கொள்ளும் போது இந்நிறுவனத்திற்கான யோசனையை முன்வைத்தனர்.

நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் அந்நிறுவனம் ஒரு பில்லியன் டாலர்களுக்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதை நினைவூட்டும் வகையில் ஒரு உலோக வில்லை அந்த உணவகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

15 வயதில் போர்ட்லேண்டில் உள்ள டென்னிஸ் உணவகத்தில் பாத்திரங்களைக் கழுவுதல், மேசைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் பணியாளராகப் பணியாற்றும் முதல் வேலையைப் பெற்றதால், டென்னிஸுடன் ஹுவாங் நீண்டகால உறவைக் கொண்டிருந்தார்.

ஹுவாங் அடிக்கடி அந்த வேலையை எவ்வளவு நன்றாகச் செய்தார் என்பதைப் பற்றி கூறுவார். "இது ஒரு பெரிய வேலை. ஒவ்வொருவரும் உணவக வணிகத்தில் தங்கள் முதல் வேலையைத் தொடங்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அந்த வேலை பணிவு மற்றும் கடின உழைப்பைக் கற்றுக்கொடுக்கிறது” என கூறுகிறார் அவர்.

"தலைமை நிர்வாக அதிகாரி ஆவதற்கு முன் எனது முதல் வேலை பாத்திரங்களைக் கழுவுவது, நான் அதை நன்றாகச் செய்தேன்," என்று அவர் ஸ்டான்ஃபோர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் சமீபத்தில் ஒரு விரிவுரையில் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, உணவக வேலை அவரது கூச்சத்தைப் போக்க உதவியது.
"மக்களுடன் பேசுவதற்கு எனக்கு மிகவும் பதற்றமாக இருக்கும்," என்று அவர் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார்.

’சவால்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்’

ஹுவாங் 1984 இல் பொறியியல் பட்டம் பெற்றார். "பட்டம் பெற இது சரியான ஆண்டு" என்று அவர் கூறினார். ஏனெனில், தனிநபர் கணினிகளின் சகாப்தம் அந்தாண்டில் தான் தொடங்கியது. அந்தாண்டு தான் மேகிண்டோஷ் முதல் தனிநபர் கணினியை வெளியிட்டது.

அதன்பிறகு, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதை முடிக்க அவருக்கு எட்டு ஆண்டுகள் எடுத்தன.

படிப்புடன், அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் (ஏஎம்டி) மற்றும் எல்எஸ்ஐ லாஜிக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்வேறு வேலைகளிலும் பணியாற்றினார். என்விடியாவை நிறுவுவதற்கு முன்பு அந்த வேலைகளிலிருந்து வெளியேறினார்.

2013 ஆம் ஆண்டு ஒரேகான் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் ஒரு உரையில் கூறியதுபோன்று, இதை நாங்கள் உண்மையில் விரும்புகிறோமா, இது செயல்படக்கூடியதா, இதைச் செய்வது உண்மையில் கடினமா என்ற கேல்விகளை அதன் நிறுவனர்கள் மூவரும் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டனர்.

"இன்னும் நான் எப்போதும் அதே கேள்வியை என்னிடம் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் நீங்கள் விரும்பாத ஒன்றை நீங்கள் செய்யக்கூடாது, உங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும்," என்று ஹுவாங் கூறினார்.

தெளிவான சந்தை இல்லையென்றாலும், இதுபோன்ற முக்கியமான விஷயங்களைச் செய்வதற்கு ’ரிஸ்க்’ எடுப்பதை தன் கொள்கையாகவே கருதினார்.

"நாங்கள் சந்தையின் அளவினால் அல்ல, வேலையின் முக்கியத்துவத்தால் உந்துதல் பெறுகிறோம். ஏனென்றால் வேலையின் முக்கியத்துவம் எதிர்கால சந்தையின் ஆரம்ப குறிகாட்டியாகும்" என்று அவர் ஸ்டான்ஃபோர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் கூறினார்.

அடிப்படைகளை பலமாக கொண்டிருப்பதே வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரே வழி என அவர் உறுதியாக நம்புகிறார்.

இந்த வகையான யோசனைகளை செயல்படுத்துவதன் மூலம், ஹுவாங் ஒரு ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அந்நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இல்லை, அவர்கள் அனைவரும் நேரடியாக ஹுவாங்கிற்கு தங்கள் வேலைகள் குறித்து தகவல் தெரிவிக்கின்றனர்.

யோசனைகள் மற்றும் தகவல்களின் ஓட்டத்தை எளிதாக்குவதற்கும், எனது குழுவின் சிறந்த யோசனைகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருப்பதற்கும் இது ஒரு வழியாகும் என்று அவர் விளக்கினார்.

ஸ்டான்ஃபோர்டில் ஆற்றிய உரையில், "சிறந்த விஷயங்களைச் சாதிக்க மக்களை வழிநடத்துதல், ஊக்கப்படுத்துதல், அதிகாரமளித்தல் மற்றும் பிறருக்கு ஆதரவளித்தல், இந்த இலக்குகள் அனைத்தும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும்" என்று கூறினார்.

என்விடியாவின் முடிவுகளைப் பார்க்கும்போது, ​​இந்தத் தத்துவம் வேலை செய்வதாகத் தெரிகிறது. நிச்சயமாக, அவரது நிறுவனத்திற்கும் கடினமான காலங்கள் இருக்கின்றன.

DRAM நினைவகத்தின் அதிக விலையின் சிக்கலுக்கு தொழில்நுட்ப தீர்வைத் தேடும் நிறுவனத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில், DRAM இன் விலை 90 சதவீதம் குறைந்துள்ளது.
அந்த முயற்சி பயனற்றது மற்றும் சிறந்த கிராஃபிக்ஸ் ’சிப்’களை உருவாக்க பந்தயத்தில் போட்டியிட டஜன்கணக்கான நிறுவனங்களுக்கு கதவைத் திறந்தது.

என்விடியா மீண்டும் முயற்சி செய்து 1999 இல் கிராஃபிக் ப்ராசசிங் யூனிட்டை (GPU) அறிமுகப்படுத்தியது. இந்த GPU ஒரு நுண்செயலி, இது கணினி விளையாட்டுகளை மறுவரையறை செய்துள்ளது.

அப்போதிருந்து, நிறுவனம் GPU-முடுக்கப்பட்ட கணினித் திறன் வளர்ச்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இதுவொரு கணினித் திறன் மாதிரியாகும். இது இணை கிராஃபிக்ஸ் செயலிகளை அதிகமாகப் பயன்படுத்துகிறது. மேலும், பகுப்பாய்வு, தரவு உருவகப்படுத்துதல், காட்சிப்படுத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பெரிய அளவிலான கணக்கீட்டு சக்தி தேவைப்படும் நிரல்களை துரிதப்படுத்துகிறது.

இந்த வேலை என்விடியாவின் பங்குகளின் விலையை கணிசமாக அதிகரித்தது. மேலும் ஹுவாங்கின் தனிப்பட்ட நிகர மதிப்பு 79 பில்லியன் டாலர்களை எட்டியது. ஃபோர்ப்ஸ் இதழின் படி, அவர் உலகின் 18-வது பணக்காரர் ஆனார்.

இந்த சூப்பர் ’சிப்’ தயாரிப்பில் என்விடியா ஏறக்குறைய ஏகபோக உரிமையைக் கொண்டிருப்பதால், இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூப்பர் ’சிப்’களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி நியூயார்க்கர் இதழில் மேற்கோள்காட்டப்பட்ட ஒரு ஆய்வாளர் கருத்துப்படி, "செயற்கை நுண்ணறிவுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. என்விடியா மட்டும்தான் ஆயுத விற்பனையாளராக இருக்கிறது" என தெரிவித்தார்.

ஜென்சன் ஹுவாங்கின் அதிர்ஷ்டம் தொடர்ந்து பிரகாசிப்பதாகத் தெரிகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40-வது முறையாக நீட்டிப்பு.!