Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பத்தூரில் விழுந்த ‘மர்மப் பொருள்’ விண்கல்லா? - விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

Thirupathur

Prasanth Karthick

, செவ்வாய், 28 மே 2024 (19:53 IST)
திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் பகுதியில் அடையாளம் காணப்படாத பொருள் விழுந்து, நான்கு அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத அந்தப் பொருள் விண்கல்லா? விண் கற்களை அடையாளம் காண்பது எப்படி? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?



திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு அருகில் உள்ள அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ராஜி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த மே 26-ஆம் தேதி இரவில் பெரும் சத்தத்துடன் அடையாளம் காண முடியாத பொருள் ஒன்று விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் அந்த இடத்தில் சுமார் நான்கடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டது.

அந்தப் பள்ளத்தில் இருந்து வெப்பம் மிகுந்த காற்று வெளியானதை அருகில் உள்ள நிலத்தைச் சேர்ந்த திருமலை என்பவர் கவனித்து மற்றவர்களுக்குத் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகு இந்தத் தகவல் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த மாவட்ட வருவாய்த் துறையினர் அங்கிருந்து மண் மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனர். மே 27-ஆம் தேதி காலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அந்த இடத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், “அச்சமங்கலம் பகுதியில் அடையாளம் காணப்படாத பொருள் ஒன்று விழுந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் வந்து பார்த்திருக்கிறோம். அந்தப் பொருள் குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநரிடம் பேசியுள்ளோம். அவர் இது குறித்து ஆய்வு செய்ய விரைவாக ஒரு அறிவியல் ஆய்வாளரை இங்கு அனுப்புவதாக கூறியுள்ளார்,” என்று தெரிவித்தார்.

அதன்படி, அங்கு வந்த தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் நிபுணர்கள் அந்த இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் லெனின் தமிழ் கோவனிடம் கேட்டபோது, "விண்கல் விழுந்ததாகச் சொல்லப்படும் இடத்திலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை இன்னும் இங்கு வந்து சேரவில்லை. இங்கு வந்த பிறகு சோதனை செய்யப்பட்டு முடிவுகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்படும்," என்று கூறினார்.

விண்கற்கள் எங்கிருந்து வருகின்றன?

விண்வெளியில் இருந்து கற்கள் விழுவதும் அதனால் சேதம் ஏற்படுவதும் சம்பந்தப்பட்ட இடங்களில் அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் விண்வெளியிலிருந்து சுமார் 40,000 கிலோ எடையுள்ள விண்கற்கள் பூமியில் விழுவதாகச் சொல்கிறார் மஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

"இந்தக் கற்கள் எல்லாமே சின்னச் சின்ன கற்களாகவே இருக்கும். அவை பெரும்பாலும் பூமியின் வளிமண்டலப் பகுதிக்குள் நுழையும்போது எரிந்துவிடும். வெகு சில விண்கற்கள் மிகப் பெரியதாக இருக்கும். அவை எரியும்போது மிகப் பெரிய அளவில் அவை தென்படும். பத்து நாட்களுக்கு முன்பாகக்கூட ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் பகுதிகளில் இதுபோல ஒரு விண்கல் எரிந்த காட்சியைப் பார்க்க முடிந்தது. மிகச் சில விண்கற்கள் பூமியில் விழுந்து பள்ளத்தை ஏற்படுத்துகின்றன," என்கிறார் வெங்கடேஸ்வரன்.

ஒரு விண்கல்லை எப்படிக் கண்டறிவது?

"நம்முடைய சூரிய மண்டலத்தில் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் மிகப் பெரிய அளவில் சிறு கோள்களின் பட்டை ஒன்று இருக்கிறது. இதில் பல பத்து லட்சம் கணக்கான விண்கற்கள் வலம் வருகின்றன. இவற்றின் சில கற்கள் பூமியின் ஈர்ப்புச் சக்திக்குள் வந்து, வளி மண்டலத்திற்குள் நுழைந்துவிடும். அவைதான் இந்த விண்கற்கள்," என்கிறார் லெனின் தமிழ் கோவன்.

ஒரு இடத்தில் விழுந்தது விண்கல்லா என்பதை பல்வேறு வகைகளில் அறியலாம் என்கிறார் லெனின். "அந்த விண்கல்லை ஆராய்வதன் மூலம் அதைக் கண்டறிய முடியும். பொதுவாக இந்த விண்கற்கள் இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்றவற்றால் ஆன கற்களாக இருக்கும். வேறு சில தனிமங்களும் மிகக் குறைவான அளவில் இருக்கும். பூமியில் உள்ள அதே அளவு கற்களின் எடையைவிட இவற்றின் எடை அதிகமாக இருக்கும். இவற்றில் உலோக அம்சங்கள் அதிகம் என்பதால் காந்தத்தால் இவை ஈர்க்கப்படும்," என்கிறார் லெனின்.

மேலும் அந்தக் கற்கள் எரிந்ததற்கான அடையாளமும் பூமிக்குள் நுழையும்போது உராய்ந்ததால் ஏற்பட்ட பளபளப்பும் அந்தக் கற்களில் இருக்கும் என்கிறார் அவர்.

விண்கல் விழுந்ததாக சொல்லப்படும் பள்ளத்தில் ஆய்வு

விண்கற்களை மட்டுமல்லாமல் அவை விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தையும் ஆராய வேண்டும் என்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்.

"விண்கற்கள் விழந்ததால் ஏற்படும் பள்ளத்திற்கு என ஒரு வடிவம் இருக்கும். சில சமயம் பள்ளங்கள் பூமிக்குக் கீழே உள்ள இடைவெளியினாலும் ஏற்படும். அப்போதும் அந்தப் பகுதி வெப்பமாக இருக்கும். ஆகவே, அந்த இடத்தை ஆய்வுசெய்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும்," என்கிரார் த.வி. வெங்கடேஸ்வரன்.

தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதியன்று வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் விண்கல் விழுந்ததாகச் சொல்லப்பட்டது. மர்மப் பொருள் ஒன்று வானிலிருந்து விழுந்ததாகவும் பெரும் சத்தத்துடன் அது வெடித்துச் சிதறியதாகவும் சொல்லப்பட்டது. இதனால், அந்தக் கல்லூரியின் பேருந்து ஓட்டுநரான காமராஜ் என்பவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டது. மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

ஆனால், அது விண்கல்தானா என்பது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.

அந்த இடத்தை ஆய்வுசெய்ய இந்தியப் புவியியல் ஆய்வுத் துறையினர் அந்த தனியார் கல்லூரிக்குச் சென்றபோது தங்களால் அந்த இடத்தை மட்டுமே ஆய்வு செய்ய முடிந்ததே தவிர, விழுந்ததாகச் சொல்லப்படும் பொருளைத் தங்களிடம் அளிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

அந்தக் கல்லூரியின் மாடியிலும் ஒரு கல் விழுந்ததாகக் கூறப்பட்டதாகவும் அந்தக் கல் 61.2 கிராம் எடை கொண்டதாகவும் இருந்தது எனவும், ஆனால், அந்தக் கல்லில் கார்பன் இருந்ததாகவும் இந்திய புவியியல் ஆய்வுத் துறையின் தமிழக பிரிவின் துணை இயக்குனர் ஜெனரல் ராஜு தெரிவித்தார்.

பொதுவாக விண்ணில் இருந்து விழும் பொருட்களில் குரோமியம், நிக்கல் போன்ற உலோகங்கள் தான் இருக்கும் என்றும் கார்பன் இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேபோல, விண்கல் விழுந்ததாகச் சொல்லப்படும் இடத்தில் உள்ள பள்ளம், விண்கல் விழுந்ததால் ஏற்பட்டதைப் போல இல்லையென்றும் புவியியல் ஆய்வுத் துறை அந்த சமயத்தில் தெரிவித்தது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?