புதுச்சேரியில் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகம் தீர்ப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளன.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கு அமலிலிருந்த நிலையில் பள்ளிகள் திறப்பதில் தொடர்ந்து தடை நீடித்து வந்தது. இந்நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அமல் படுத்தப்பட்டு வருவதை அடுத்து புதுச்சேரியில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. அதில் 5ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டது. குறிப்பாக, வகுப்பறை சுத்தம் செய்து, மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று(வியாழக்கிழமை) முதல் மாணவர்களுக்கு சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குச் சந்தேகம் தீர்ப்பு வகுப்புகள் இன்று தொடங்கியது. மாணவர்கள் தங்கள் பாடங்களில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் அதைக்கேட்டுப் புரிந்து கொள்வதற்காக இந்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வகுப்புகள் வாரத்திற்கு 6 நாட்கள் நடைபெறும். அதில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும் எனக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த வகுப்புகளின் நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வருகை தருகின்ற மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெறுவதற்கான மாதிரி கடிதத்ததை கல்வித்துறை தயார் செய்துள்ளது. அதில், பாடங்கள் தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு, அரசின் வழிகாட்டுதல் படி எனது சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு எங்களது பிள்ளையை அனுப்பிவைக்க முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்து பெற்றோர் கையெழுத்திடும் வகையில் கடிதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கடிதத்தைப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோர் அனுமதி பெற்று கட்டாயம் கொண்டுவரவேண்டும். அதே போன்று பள்ளிகளுக்கு வருகைதரும் மாணவர்களுக்கு வருகைப் பதிவேடு கிடையாது என்பதால் மாணவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த வகுப்புகளைக் கண்காணிக்க கல்வித்துறை அதிகாரிகள் எந்நேரமும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இன்று முதல் நாளன்று பள்ளிகளுக்கு வருகை தந்த மாணவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்து, கைகளைச் சுத்தம் செய்த பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் வகுப்புகளில் அமர வைத்து சந்தேகப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக முதல் நாள் வகுப்பில், குறைந்த அளவிலான மாணவர்களே வருகை புரிந்தனர்.