அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. நான்கு விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் 193 ரன்கள் எடுத்தது.
ஆட்டநாயகனாக தேர்வான சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில், 11 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் உள்பட 79 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சேசிங்கை தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
ராஜஸ்தான் இழந்த 10 விக்கெட்டுகளில் நான்கை கைப்பற்றியவர் மும்பையின் ஜஸ்ப்ரித் பும்ரா.
நேற்று பலரது கவனத்தையும் பெற்ற ஆட்டநாயகன் சூர்ய குமார் யாதவ் பற்றிய 10 சுவாரசிய தகவல்கள்.
-
சூர்ய குமார் யாதவுக்கு 30 வயதாகிறது. 1990ம் ஆண்டு பிறந்த இவர் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதிதான் 30 வயதை நிறைவு செய்தார். சூர்யகுமார் யாதவ் மனைவியின் பெயர் தேவிஷா ஷெட்டி.
-
மும்பையைச் சேர்ந்த சூர்ய குமார் யாதவ் வலது கை பேட்ஸ்மேன் மட்டுமல்ல வலது கை மித வேகப்பந்து வீச்சாளரும் கூட.
-
சூர்யகுமார் யாதவை 2018ஆம் ஆண்டு 3.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.
-
முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக நான்கு ஆண்டுகள் அவர் விளையாடி வந்தார்.
-
சூர்ய குமார் முதன்முதலாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகத்தான் விளையாடிக் கொண்டிருந்தவர்.
-
2012இல் அவர் தேர்வான சமயத்தில் மும்பை அணியில் சச்சின், ஜெயவர்த்தனே என முன்னணி வீரர்கள் இருந்ததால் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
-
2018இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து மீண்டும் மும்பைக்கு வந்தவுடன் அந்த சீசனில் நான்கு அரை சதம் அடித்தது மட்டுமல்லாமல் 512 ரன்கள் எடுத்தார் அவர்.
-
பல இளம் வீரர்கள் ஐபிஎல் போட்டி மூலம் தங்கள் திறனை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்துள்ள நிலையில் சூர்ய குமார் இது வரை இந்திய அணிக்காக ஒரு முறை கூட தேர்வு செய்யப்படவில்லை.
-
நேற்றைய போட்டி உள்பட இதுவரை விளையாடியுள்ள 91 ஐபிஎல் போட்டிகளில் அவர் 1724 ரன்கள் எடுத்துள்ளார்.
-
கொல்கத்தா அணியில் விளையாடிய காலத்தில் அந்த அணிக்கு துணை கேப்டனாகவும் சூரியகுமார் இருந்துள்ளார்