Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வசதி இல்லாத பள்ளி மாணவி தற்கொலை

Advertiesment
School student
, வியாழன், 4 ஜூன் 2020 (09:49 IST)
கேரளாவில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். கல்வி நிறுவனங்கள் திடீரென ஆன்லைன் வகுப்பு முறைக்குத் தாவியதால் ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது இந்த தற்கொலை.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம், இரும்பிலியம் ஊராட்சியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த இந்த மாணவி, தம்மால் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கமுடியவில்லை என்ற கவலையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் தமது வீடு இருக்கும் தலித் காலனியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தீவைத்துக் கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் இந்த சிறுமி.

"எட்டாம் வகுப்பில் அவள் நன்றாகப் படித்தாள். தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு சென்றதாக அறிவிக்கப்பட்டாள். இந்நிலையில் சோதனை முறையில் ஆன்லைன் வகுப்புகள் ஏழு நாட்களுக்கு மட்டும் நடக்கும் என்று பெற்றோர்களிடம் தெரிவித்திருந்தோம். ஆனாலும் இது நடந்துவிட்டது," என்று பிபிசி இந்தி செய்திப் பிரிவிடம் தெரிவித்தார் அந்தப் பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான பெரும்பேரவில்.

அந்த மாணவியின் தந்தையை தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் தாம் ஒரு தினக்கூலித் தொழிலாளி என்றும் தனது மகள் ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்க ஏதுவாக தம்மிடம் திறன்பேசி இல்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த வகுப்புகள் அரசு நடத்தும் விக்டர்ஸ் சேனல் என்ற தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பு செய்யப்படும். ஆனால், முடக்கநிலை காரணமாக தம் வீட்டில் உள்ள பழுதடைந்த தொலைக்காட்சிப் பெட்டியை தம்மால் சீர் செய்ய முடியவில்லை என்றும் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
webdunia


"தன்னால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அவள் மிக கவலையோடு இருந்தாள். இதற்கு ஆசிரியர்கள் ஏதாவது தீர்வு கண்டுபிடிப்பார்கள் என்று அவளுக்கு கூறினேன்" என்று அந்த சிறுமியின் தந்தை கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

"ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத குழந்தைகளுக்கு வேறு ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று முன்பே அரசுக்கு கூறியிருந்தோம். ஒரு பிரிவில் இதைப் போல ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வாய்ப்பில்லாத 25 குழந்தைகள் உள்ளன" என்கிறார் ஸ்ரீகாந்த்.

"மடிக்கணினியோ, திறன்பேசியோ இல்லை என்பது அடிப்படைப் பிரச்சனை அல்ல. விளிம்புநிலை மக்களின் நிலையில் இருந்து அரசாங்கம் கல்வியைப் பார்க்கவேண்டும். வீடு, இணைய இணைப்பு ஆகியவை முதலில் தரப்படவேண்டும்" என்று பிபிசியிடம் குறிப்பிட்டார் தலித் செயற்பாட்டாளர் சன்னி கப்பிக்காட்
ஏதாவது செய்யப்படும் என்று தந்தை உறுதியளித்திருந்தபோதும் இந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதை வேறு கோணத்தில் இருந்து பார்க்கிறார் திருவனந்தபுரம் சென்டர் ஃபார் டெவலப்மென்டல் ஸ்டடீஸ் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த வரலாற்றாளரும், விமர்சகருமான பேராசிரியர் ஜெ.தேவிகா.

"கடந்தகாலத்தில் அவள் எதிர்கொண்ட எல்லா ஏமாற்றங்களின் சுமையும் ஒன்று சேர்ந்து அவளை அழுத்தியிருக்கிறது. தொடர் போராட்டங்களின், தோல்விகளின் சுமையை தாளமுடியாமல், கையறு நிலையில் இந்த தீவிர முடிவை அவள் எடுத்திருக்கவேண்டும். வசதி மிக்க மாணவர்கள் நிரம்பிய வகுப்பு ஒன்றில் வசதி இல்லாத பின்னணியில் இருந்து வந்த மாணவி இடம் பெற்றுப் படிப்பது அவ்ளவு எளிதல்ல," என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.

ஆதரவற்ற பின்னணியில் இருந்து வரும் குழந்தைகள் ஏற்கெனவே இந்த அமைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இணைய இணைப்பு சமமாக இல்லை என்பதால் பந்தயத்தில் தாம் தோற்றுவிடுவோம் என்று அவர்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளதால் பலவீனமாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார் தேவிகா.

ஆனால், ஆன்லைன் வகுப்பு முறைக்கு மாறிச்செல்வதை தேவிகா எதிர்க்கவில்லை. மாணவர்களை ஆசிரியர்கள் மிரட்டி உருட்டுவதும், ஆசிரியர்கள் அறநெறி போலீசாக செயல்படுவதும் ஆன்லைன் வகுப்பு முறையால் கட்டுப்படும் என்கிறார் அவர். பெரும்பாலும், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து வரும் மாணவர்களே இது போன்ற அதட்டல்களுக்கு பெரும்பாலும் ஆளாவதாகவும் அவர் தெரிவித்தார்.

"உணவு இடைவேளையில் மாணவர்கள் விளையாட நேரம் தராத பள்ளிகளைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். உணவு இடைவேளையில் பிள்ளைகள் பொதுவாக சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு ஓடியாடி விளையாடுவார்கள். இப்போது அதெல்லாம் மாறிவிட்டது. மாணவர்கள் சாப்பிட 5 நிமிடமோ, 10 நிமிடமோதான் தரப்படுகிறது. பிறகு அவர்கள் விரைவாக வகுப்புகளுக்குச் சென்று படிக்கவேண்டும்," என்கிறார் தேவிகா.

வசதி குறைவான பிள்ளைகளுக்கு கேரள அரசின் ஒரு திட்டம் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. பகுதிவாரியாக கணினி மையங்களை அமைத்து, அதில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க ஏற்பாடு செய்யவுள்ளது கேரள அரசு. எனினும் இந்த நிலை மாற்றம் கடினமான ஒன்றாகவே இருக்கும் என்கிறார் தேவிகா.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 ஆயிரத்தை தாண்டிய பலிகள்! – ஒரே நாளில் 9 ஆயிரம் பாதிப்புகள்!