கேரளாவில் காட்டு யானை ஒன்றிற்கு அன்னாசியில் வெடி வைத்து கொன்ற சம்பவத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் கோலி மற்றும் சச்சின் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் மலப்புரம் பகுதியில் கிராமத்து பகுதியில் அடிக்கடி வந்த பெண் யானை ஒன்று அங்கிருந்த பயிர்களை சாப்பிட்டு வந்துள்ளது. இதனால் சிலர் அன்னாசி பழத்தில் வெடியை வைத்து யானைக்கு கொடுத்துள்ளனர். வெடி வாயில் வெடித்ததால் காயம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக சாப்பிட முடியாமல் மெலிந்த யானை ஆற்றில் நின்றபடி உயிரிழந்தது. அதை உடற்கூறாய்வு செய்ததில் அது கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் ஆர்வலர்கள் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ”கேரளாவில் நடந்த துயரமான சம்பவம் குறித்து அறிந்தேன். தயவுசெய்து நம்மை சுற்றியுள்ள விலங்குகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் “யானை கொல்லப்பட்டது குறித்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க கேரள வனத்துறைக்கு நமது ஆதரவை அளிப்போம்” என கூறியுள்ளார்.