Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாடகை வீடு: ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் வழக்கு தொடரலாம் என நீதிமன்றம் தீர்ப்பு

வாடகை வீடு: ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் வழக்கு தொடரலாம் என நீதிமன்றம் தீர்ப்பு
, ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (18:26 IST)
பிரமிளா கிருஷ்ணன்
 
வாடகை வீடு தொடர்பான வழக்குகளில், வாடகை வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் மத்தியில் பிணக்கு ஏற்பட்டு, வழக்கு தொடர வேண்டிய சூழலில், நீதிமன்றத்தை நாட அவர்களுக்கிடையில் ஒப்பந்தம் செய்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அசோக் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவர் ஒருவர் ரூ.3 லட்சம் வரை வாடகை செலுத்தாமலும், வீட்டின் உரிமையாளர் பலமுறை கோரியும் காலி செய்யாமலும் இருந்ததால், மன உளச்சலுக்கு ஆளான உரிமையாளர் தம்பதியின் வழக்கை விசாரிக்கும்போது, வழக்கை நடத்த வாடகை ஒப்பந்தம் கட்டாயம் இல்லை என நீதிமன்றம் கூறிவிட்டது.
 
வாடகை வீடு தொடர்பான வழக்குகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கை தொடுத்தவர் 60 வயதான இல்லத்தரசி மணிமேகலை.
 
மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஸ்ரீதரன்(67) ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்களது வாடகை வீட்டில் வசிப்பவரிடம் காலி செய்யவேண்டும் என பலமுறை தெரிவித்தும் பலனில்லாததால், உயர்நீதிமன்றத்தை நாடியதாக கூறினார்.
 
''2015ல் இருந்து வீட்டை காலிசெய்து தரவேண்டும் என கேட்டோம். நாங்கள் தற்போது வளசரவாக்கத்தில் வசிக்கிறோம். அசோக் நகரில் உள்ள வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தோம். எங்கள் மகனின் தேவைக்காக அந்த வீடு வேண்டும் என்ற நிலையில் காலி செய்ய பலமுறை சொல்லியும் வசிப்பவர் நகருவதாக இல்லை. வழக்கு தொடர்ந்தும். கீழ் நீதிமன்றத்தில் வாடகை ஒப்பந்தம் இல்லாததால் வழக்கை தொடரமுடியாது என தீர்ப்பு வந்தது. ஆனால் உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருப்பதால் மகிழ்ச்சி,'' என மணிமேகலை தெரிவித்தார்.
 
மணிமேகலையின் வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் பிபி பாலாஜியிடம் பேசியபோது, இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், இது வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் வாடகைவீடு தொடர்பான வழக்குகளில், குடியிருப்பவர்கள் வீட்டை காலி செய்யவேண்டும் என வழக்குத் தொடர ஒப்பந்தம் தேவையில்லை என்று மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார்.
 
''பிணக்கு ஏற்படும்போது, அது வரை ஒப்பந்தம் செய்யாத உரிமையாளர் மற்றும் வாடகை குடியிருப்போர் இருவரும் புதிதாக ஒப்பந்தம் ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஒப்பந்தம் செய்ய முடியாத நிலையில், வீட்டை காலி செய்யக் கோரி, உரிமையாளர் வழக்கு தொடர்வது இனி சாத்தியம். பல வழக்குகளில் உரிமையாளர்கள் பலர் வீட்டை காலி செய்ய நினைக்கும்போது, ஒப்பந்தம் இல்லாத காரணத்தால் வழக்குத் தொடர முடியாமல் இருந்த நிலை இப்போது மாறும்,'' என்றார் பாலாஜி.
 
தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் பொறுப்புகள் சட்டம் 2017 என்ற புதிய சட்டம் பிப்ரவரி 2019 முதல் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள எல்லா வாடகை குடியிருப்புகளும் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறுகிறது. பதிவு செய்யாத பட்சத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்கறிஞர் பாலாஜியிடம் கேட்டோம்.
 
''இந்த புதிய சட்டத்தின்படி பதிவு செய்வது கட்டாயம் என கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பதிவு செய்யாமல்போனால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடவில்லை,'' என்றார். அரசு ஏதாவது அபராதம் விதிக்குமா என்று கேட்டபோது, ''இதுவரை அபராதம் பற்றி எந்த தகவலும் சட்டத்தில் இல்லை,'' என்றார்.
 
ஒப்பந்தம் கட்டாயம் என சட்டம் சொன்னாலும், ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் நீதிமன்றத்திற்கு செல்ல தடையில்லை என்பது உரிமையாளர்களுக்கு சாதகமான சட்டமாக இருக்குமா என பாலாஜியிடம் கேட்டோம்.
 
''ஒப்பந்தம் இல்லாத நேரத்தில் வாடகைக்கு குடியிருப்போர்கூட நீதிமன்றத்தை நாடமுடியும். குடியிருப்போர் பிரச்சனைகளை வழக்காக பதிவு செய்ய எந்த தடையும் இருக்காது,'' என்றார் அவர்.
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் வாடகை வீட்டில் குடியிருக்கும் சங்கீதா போன்றவர்கள் தீர்ப்பை வரவேற்றாலும், சட்டப்படி ஒப்பந்தம் தேவை என்பதோடு, ஒப்பந்தம் இல்லாமால் போனால் அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்.
 
''ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் நீதிமன்றம் போவது என்பது உடனடி தீர்வாகத் தெரியலாம். ஆனால் ஒப்பந்தம் இல்லாத காரணத்தால், உடனடியாக வீட்டை காலி செய்ய உரிமையாளர் வற்புறுத்தினால் பிரச்சனை ஏற்படும். இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். அரசிடம் ஒப்பந்தத்தை பதியாமல், வீட்டை வாடகைக்கு கொடுக்ககூடாது, கொடுத்தால் தண்டனை என்ற நிலை ஏற்படவேண்டும்,'' என்கிறார் சங்கீதா.
 
தமிழக அரசின் வீட்டு வசதித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் சுமார் 23.4 சதவீதம் மக்கள் வாடகை குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், 48.44 சதவீதம் நகரமயத்தை தமிழகம் அடைந்துள்ளது. இந்நிலையில் வாடகை குடியிருப்புகள் தொடர்பான பிரச்சனைகளை கையாள தனி நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என வீட்டுவசதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
சென்னை நகரத்தை எட்டு மண்டலங்களாக பிரித்து, வாடகை வீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என கணக்கீடு செய்யப்பட்டு வருவதாக கூறிய அதிகாரிகள், உரிமையாளர் மற்றும் குடியிருப்போர் மத்தியில் விழிப்புணர்வு போதவில்லை என்று தெரிவித்தனர்.
 
''இந்த புதிய சட்டம் இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் அமலுக்கு வந்தது. பதிவு செய்யப்படாதவர்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். பதிவு செய்வதற்காக இரண்டு முறை கால நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. வாடகை வீடு தொடர்பான ஆணையங்கள் முழுமையாக தற்போது இயங்க தொடங்கியுள்ளன என்பதால், மக்கள் முன்வந்து பதிவு செய்வது அதிகாரிக்கும் என நம்புகிறோம். பதிவிற்காக தனி இணய தளம் தொடங்கியுள்ளோம். விரைவில் மாற்றங்கள் ஏற்படும்,'' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்ல கட்சி, கெட்ட கட்சி: அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு