மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டையை பார்க்க இனி கட்டணம் செலுத்த வேண்டும் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தளங்களில் ஒன்றாக மாமல்லபுரத்தில் சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடைபெற்றது. இவர்களின் சந்திப்பிற்காக மாமல்லபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புது பொலிவை பெற்றது.
ஆனால், இந்த பொலிவு எல்லாம் ஒரு நாள் கூத்தாக முடிந்துவிட்டது. இரு நாட்டு தலைவர்கள் தமிழகத்தில் இருந்து புறப்பட்ட பின்னர் மாமல்லபுரத்தின் புது பொலிவை காண ஒரே நாளில் சுற்றுலாப்பயணிகள் மாமல்லபுரத்திற்கு படையெடுத்தனர். ஆனால், மக்கள் இரவு நேரத்தில் ஒளிராத மின்விளக்குகளால் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதாவது அங்கிருக்கும் வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட இனி இந்தியர்களுக்கு ரூ.40, வெளிநாட்டவர்களுக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிட ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.