Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது நீக்கம் - காரணம் என்ன?

Advertiesment
பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது நீக்கம் - காரணம் என்ன?
, வெள்ளி, 18 அக்டோபர் 2019 (19:02 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த சர்பராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டில் முதல்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்ட சர்பராஸ் அகமது, அண்மைக்காலமாக டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய இரு வடிவங்களிலும் சரிவர விளையாடவில்லை.

கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் அவரது ஃபார்ம் நன்றாக இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் அவரை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், அணியின் கேப்டனாக நீக்கப்பட்ட சர்பராஸ் அகமது, அணியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பிசிபி பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அஸார் அலி தலைமை தாங்குவார் என்றும், அதேவேளையில் டி20 அணிக்கு பாபர் ஆஸாம் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
webdunia
பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த அஸார் அலி, ''பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்குவதைவிட பெரிய அங்கீகாரம் வேறு எதுவும் இல்லை. இது எனக்கு சவாலையும், அதேநேரத்தில் உத்வேகத்தையும் அளிக்கும்'' என்று தெரிவித்தார்.

இதேபோல் டி20 அணியின் புதிய கேப்டன் பாபர் ஆஸாம் கூறுகையில், '' சர்பராஸ் அகமதுவை தொடந்து பாகிஸ்தான் அணியை வலுவான, ஆக்ரோஷமான இளம் மற்றும் அனுபவம் கலந்த வீரர்கள் கொண்ட படையாக மாற்றுவது எனது முக்கிய குறிக்கோள்'' என்று கூறினார்.

முன்னாள் கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் மீது 1992-இல் வைத்திருந்த நம்பிக்கையை, 2019 ஐசிசி உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக இருந்த சர்பராஸ் அகமது மீது, அந்நாட்டு ரசிகர்கள் வெளிப்படுத்தினர். ஆனால் அந்த அணியால் அரையிறுதி போட்டியைக்கூட எட்டமுடியவில்லை.
webdunia

முன்னதாக, 2019 ஜனவரியில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான அன்டிலி பிக்குவாயோ குறித்து இன ரீதியான சொல்லை பயன்படுத்தி வசைபாடியதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமதுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
 
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே டர்பனில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தங்களின் இனவெறி எதிர்ப்பு விதியை சர்பராஸ் அகமது மீறிவிட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) குறிப்பிட்டது.

தனது செயல் குறித்து அப்போது வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட சர்பராஸ் அகமது, குறிப்பாக யாரையும் குறிப்பிட்டு இந்த வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை என்று கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏழுபேர் விடுதலை – ஆளுநர் மறுப்பா ?