Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாடு மின்வெட்டுக்கு மத்திய தொகுப்புதான் பிரச்னையா?

தமிழ்நாடு மின்வெட்டுக்கு மத்திய தொகுப்புதான் பிரச்னையா?
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (14:08 IST)
தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் ஏற்படும் திடீர் மின்வெட்டுகளால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

`மத்திய தொகுப்பில் இருந்து வரவில்லையென்றால் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. இதனை மாநில அரசு ஆராய வேண்டும்' என்கின்றன மின்வாரிய ஊழியர் சங்கங்கள். என்ன நடக்கிறது?
 
அமைச்சர் சொன்ன காரணம்
கோடைகாலத்தில் அளவுக்கு அதிகமான வெயில் சுட்டெரிப்பதால் மின்நுகர்வு என்பது நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. அதற்கேற்ப மின்விநியோகம் உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த 20 ஆம் தேதி இரவில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. இந்தத் திடீர் மின்வெட்டால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதனையடுத்து, மின்வாரியத்தின் செயல்பாடுகள் மீது கடும் விமர்சனங்களும் கிளம்பின.
 
இதுதொடர்பாக, இரவு 11.30 மணியளவில் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் ஒன்றைப் பதிவு செய்தார், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அதில், ` இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.

இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது மின்சார வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என விளக்கம் அளித்தார்.
 
ஆனாலும், பல மணிநேரம் மின்சாரம் தடைபட்டது. இதுதொடர்பாக அமைச்சரின் முகநூல் பக்கத்திலும் மின்தட்டுப்பாட்டால் கடந்த தி.மு.க ஆட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் பதிவிடப்பட்டன.
 
நான்கு கேள்விகள்
'' உண்மையில் என்ன நடந்தது?'' என மத்திய மின் ஊழியர் கூட்டமைப்பின் (சி.ஐ.டி.யு) மாநில தலைவர் ஜெய்சங்கரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` MOD (Merit Order Despatch of Electricity) என்ற ஒன்று உள்ளது. இதன்மூலம் மத்திய தொகுப்பில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மின்சார வாரியங்களும் தனியார் நிறுவனங்களும் எவ்வளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து கிரிட்டில் (Grid) இணைக்க வேண்டும் என்பதற்கான அளவுகோல் இது. அதாவது, ஒவ்வொரு மாநிலங்களின் மின்தேவையை சமாளிப்பதற்கான மத்திய அளவிலான ஏற்பாடாகப் பார்க்கப்படுகிறது.
 
மத்திய தொகுப்பில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும் எவ்வளவு மின்தேவை என்பதை பட்டியலிடுவார்கள். அதற்கும் அதிகமாக மின்நுகர்வு தேவைப்படும்போது சில இடங்களில் போதுமான அளவு மின்சாரம் கிடைக்காது. தனியார் உற்பத்தி நிறுவனங்களிலும், 300 மெகாவாட், 500 மெகாவாட் என உற்பத்தியை செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்படும்.

அப்படி ஒரு பிரச்னைதான், அமைச்சர் கூறும் 750 மெகாவாட் என்பது. இது தொழில்நுட்ப பிரச்னையாக இருந்தாலும் மத்திய தொகுப்பில் இருந்து வராவிட்டாலும் வேறொருவரிடம் இருந்து வாங்கித் தர வேண்டும். உதாரணமாக, மத்திய தொகுப்பில் இருந்து 5000 மெகாவாட் கொடுக்கிறார்கள், அதனை மட்டும் வாங்கினால் சரியாக இருக்காது. 7000 மெகாவாட் வாங்கினால்தான் சரியாக இருக்கும்'' என்கிறார்.
 
''மத்திய தொகுப்பில் இருந்து வராததுதான் காரணம்? என அமைச்சர் கூறுகிறாரே'' என்றோம். ''மத்திய தொகுப்பில் இருந்து வரவில்லையென்றால் ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை விரும்பாத மத்திய அரசு செய்கிறதா எனவும் தெரியவில்லை. இதனை மாநில அரசு ஆராய வேண்டும்'' என்கிறார்.
 
"அனைத்து மாநிலங்களுக்கும் கோடைகாலத்துக்கான மின்தேவை என்பது அதிகமாக உள்ளது. அதற்கேற்ப கணக்கீடு செய்யாமல் இருந்திருக்கலாம். தமிழ்நாட்டில் பத்து நாள்களுக்கு முன்பு 17,100 மெகாவாட் என்பது ஒருமணி நேரத்துக்கான அதிகபட்ச மின் நுகர்வு எனக் கூறப்பட்டது. மே மாதம் இது இன்னும் அதிகமாகும். எதிர்காலத்தின் தேவையை கணக்கீடு செய்து ஒழுங்குபடுத்தாததுதான் பிரச்னைக்குக் காரணம். தொழில்நுட்பரீதியான காரணங்கள் தெரிந்தாலும் அதிகாரிகள் வெளியில் சொல்லப் போவதில்லை'' என்கிறார். ''கோடைகாலத்தை சமாளிக்கும் வகையில் போதிய மின் உற்பத்தி உள்ளதா?'' என்றோம்.
 
''தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய்களைக் கொடுத்து மின்சாரத்தை வாங்கத்தான் போகிறார்கள். அதிகபட்சமாக ஒரு யூனிட்டை 20 ரூபாய்க்குகூட வாங்குகிறார்கள். இது தற்காலிக சமாளிப்பாக இருக்காமல் நிரந்தரமாக இருக்க வேண்டும். நம்மிடம் உள்ள ஆறு அனல் மின் நிலையங்களில் போதிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இங்கு 90 சதவீத அளவுக்கு உற்பத்தி செய்தால் தனியாரிடம் வாங்க வேண்டியதில்லை. தனியார் நிறுவனங்களில் மொட்டை மாடியில் சோலார் எனர்ஜியை தயாரிக்கலாம். அவர்கள் சுயஉற்பத்தியாளர்களாகவும் மாறுவார்கள். இதனால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை.
 
தவிர, சிப்காட், ஐ.டி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் காலியாக உள்ள நிலங்களில் சோலார் பேனல்களை அமைக்கலாம். தமிழ்நாட்டில் கிரீன் எனர்ஜியை கடலுக்கு நடுவிலும் அணைக்கு நடுவிலும் தயாரிக்கும் வகையில் கடந்த செப்டம்பர் மாதம் ஜெர்மன் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போட்டது. இதில் ஒருமுறை முதலீடு செய்தால் ஐந்து வகையான கிரீன் எனர்ஜியை தயாரிக்கலாம் எனவும் கூறப்பட்டது.

இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படப் போவதில்லை. தமிழ்நாட்டில் மிகப் பெரிய கடற்கரைப் பகுதிகள் உள்ளன. இதனை உண்மையிலேயே நடைமுறைப்படுத்தினால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின்தேவையை சுயமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.
 
மேலும், சோலார் பேனல்களை அமைப்பதை ஒரே ஒரு உத்தரவின் மூலம் நடைமுறைப்படுத்தலாம். இதனால் காலப்போக்கில் அனல்மின் நிலையங்களையும் மூடிவிடலாம்; மாசுபாட்டையும் தவிர்க்கலாம். அதற்கு அரசு முன்வர வேண்டும்'' என்கிறார்.
 
மின்வெட்டு தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மான கழகத்தின் தலைவரான ராஜேஷ் லக்கானியை தொடர்பு கொண்டபோது, அவர் அலுவல்ரீதியான கூட்டத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
 
தி.மு.க சொல்வது என்ன?
இதையடுத்து, தி.மு.கவின் செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ்காந்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, ''தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இருந்தாலும் மாநில அரசின் நிர்வாகத் திறமையால் சமாளிக்க முடிந்தது. தொழிற்சாலைகள் நிறைந்துள்ள மாநிலங்களுக்கும் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள வீடுகளுக்கும் போதிய அளவு மின்சாரம் கிடைக்கவில்லை. வரும் நாட்களில் கடும் தட்டுப்பாடை அவர்கள் எதிர்கொள்ள இருக்கிறார்கள். இதற்குக் காரணம், உதய் மின்திட்ட ஒப்பந்தங்களுக்குப் பின்னால் உள்ள குளறுபடிகள்தான்'' என்கிறார்.
 
தொடர்ந்து பேசுகையில், ''கொரோனா காலத்தைப் பயன்படுத்தி 10 ஆண்டுகளுக்கான நிலக்கரியை இருப்பு வைத்துள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால், இன்னும் ஆறேழு நாள்களில் வடமாநிலங்களில் மின்தட்டுப்பாடு வரவுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் அனல்மின் நிலையங்களில் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை.

நெய்வேலியில் இருந்து மத்திய தொகுப்புக்குச் செல்ல வேண்டிய மின்சாரமும் சரியாகச் சென்று கொண்டிருக்கிறது. நேற்று (ஏப்ரல் 20) மின் தடை ஏற்பட்டவுடன் அமைச்சர் சாதுரியமாக கையாண்டு உடனடியாக தனியார் அமைப்புகளிடம் இருந்து மின்சாரத்தை வாங்கி சரிசெய்துள்ளார். நேற்று ஏற்பட்ட தடை என்பது மத்திய அரசின் பாராமுகத்தால் ஏற்பட்டதாகத்தான் '' என்கிறார்.
 
''மாற்று எரிபொருளில் அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்களே?'' என்றோம். ``மாற்றுமுறை மின்சாரத்தை தயாரிப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த எட்டு மாதத்தில் இதனைச் செயல்படுத்த முடியாது. அதற்கான அடித்தளத்தையும் போட்டுள்ளோம். இது செயல்பாட்டுக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகும். மாற்று மின்சாரம் குறித்த போதிய அக்கறை அரசுக்கு உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமலும் இயங்க முடியும். அதேநேரம், மத்திய அரசை நாடாமல் இருக்க முடியாது. அதுதான் கூட்டாட்சி தத்துவம்'' என்கிறார்.
 
பா.ஜ.கவின் விமர்சனம்
தி.மு.க கூறும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது, `` 2014 ஆம் ஆண்டில் இருந்துதான் மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் தடையில்லாமல் வந்து கொண்டிருக்கிறது. திடீர் மின்வெட்டுக்குக் காரணம் மத்திய அரசு என்றால், கடந்த 8 ஆண்டுகளாக மத்திய தொகுப்பின் மூலம் தடையில்லா மின்சாரம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்தது என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்'' என்கிறார்.
 
மேலும், '' தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தனியாரிடம் மின்சாரக் கொள்முதல் செய்வதில் மிகப் பெரும் தவறுகள் நடந்து வருகின்றன. சூரிய ஒளியின் மூலம் நடைபெறும் மின் உற்பத்திக்கு இவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் மத்திய அரசைக் குறைசொல்வது தவறானது. தி.மு.க ஆட்சியின் நிர்வாகக் சீர்கேட்டினால்தான் மின் தடை ஏற்படுகிறது'' என்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இருப்பது ஒரு பூமி… இதுவும் இல்லையென்றால்..? – World Earth Day!