ஒருவரது இருமல் சத்தத்தை மட்டுமே கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறியும் மென்பொருளை அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களிடத்தில் இந்த மென்பொருளை இயக்கி பார்த்தபோது, அது 98.5 சதவீதம் சரியான முடிவுகளையும், கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான இருமல் தவிர்த்த வேறெந்த அறிகுறியும் இல்லாதவர்களை 100 சதவீதமும் சரியாக கண்டறிந்துள்ளது.
இந்த அலாக்ரிதம் எனப்படும் கணிப்பொறி நிரலாக்கத்தை அனைவரும் பயன்படுத்தத்தக்க வகையிலான திறன்பேசி செயலியாக வெளியிட கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதலை ஆராய்ச்சியாளர்கள் பெற வேண்டியுள்ளது.
அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளின் இருமலின் ஒலியின் முக்கியமான வேறுபாட்டை மனித காதுகளால் கேட்க முடியாது என்றும் அதை தங்களது தொழில்நுட்ப கண்டுபிடிப்பு சாத்தியமாக்கி உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறு பயன்படும்?
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இந்த மென்பொருளை அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வுக்கட்டுரை, 'ஐஇஇஇ ஜர்னல் ஆஃப் இன்ஜினியரிங் இன் மெடிசின் அண்ட் பயாலஜி' என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கருத்து தெரிவித்துள்ள இந்த ஆராய்ச்சிக்குழுவை சேர்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான பிரையன் சுபிரானா, "நீங்கள் அறிகுறியற்ற கொரோனா நோயாளியாக இருந்தாலும் கூட, இருமலின்போது வெளிப்படும் சத்தம் இயல்பை விட மாறுபடுகிறது" என்கிறார்.
"உலகமெங்கும் பள்ளிகள் - கல்லூரிகள், பணியிடங்கள், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவை செயல்பாட்டுக்கு வருவதால், மாணவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரை தினமும் பரிசோதனை செய்வதற்கு எங்களது கண்டுப்பிடிப்பு பயன்படும். மேலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொரோனா வைரஸ் பரவலின் நிலையை கண்டறியவும் இது உதவக்கூடும்."
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், கார்னகி மெலன் பல்கலைக்கழகம் மற்றும் ரயர்சன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் இதே போன்ற ஆராய்ச்சி திட்டங்களை முன்னெடுத்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான மாதிரிகள்
கடந்த ஜூலை மாதம், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மூச்சு மற்றும் இருமல் ஆகியவற்றின் சத்தங்களை வைத்து கண்டறியும் ஆய்வுத்திட்டத்தில் 80 சதவீதம் சரியான முடிவுகளை அளிக்கும் அமைப்பை உருவாகியுள்ளதாக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அறிவித்தது.
கடந்த மே மாதத்தில், 378 பேர் அளித்த 459 இருமல் மற்றும் மூச்சு ஆகியவற்றின் மூலம் வெளிப்படும் சத்தத்தின் மாதிரிகளை கொண்டுள்ளதாக தெரிவித்திருந்த கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், தற்போது சுமார் 30,000 மாதிரிகள் தங்களிடம் உள்ளதாக கூறுகிறது.
ஆனால், எம்.ஐ.டி பல்கலைக்கழகமோ வேறுபட்ட சத்தங்களை கொண்ட 70 ஆயிரம் ஒலி மாதிரிகளை சேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில், பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட 2,500 பேரின் மாதிரிகளும் அடக்கம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சிறந்த உதாரணம்
இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வியத்தகு உதாரணங்களில் ஒன்றாகும் என்று அந்த துறையை சேர்ந்த வல்லுநரான பிரிட்டனை சேர்ந்த கலாம் சேஸ் தெரிவித்துள்ளார்.
"பல்வேறு ஊடுகதிர் (X-ray) படமெடுப்பு தரவுகளை கொண்டு புற்றுநோயை கண்டறியும் கணினி அடிப்படையிலான ஒரு தானியங்கி வழிமுறையை உருவாக்கும் அதே முறை இங்கே பின்பற்றப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.
"செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக கிடைக்கவல்ல பலனை இது காட்டுகிறது. நான் இதை ஒரு சிறந்த வழிமுறையாக பார்க்கிறேன்."