Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டோக்யோ ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆணுறை இலவசமாக வழங்கப்படுவது ஏன்?

டோக்யோ ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆணுறை இலவசமாக வழங்கப்படுவது ஏன்?
, புதன், 28 ஜூலை 2021 (15:09 IST)
டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்யோ ஒலிம்பிக்கில் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

41 வெவ்வேறு விளையாட்டுகளில் 339 போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்போருக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. 
 
1988-ஆம் ஆண்டு தென்கொரியாவின் சோல் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில்தான் முதல் முறையாக ஆணுறை வழங்கும் நடைமுறை தொங்கியது. எச்ஐவி, எய்ட்ஸுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.
 
ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் 16 நாட்களில் வீரர்கள் அனைவரும் அருகருகே இருக்க வேண்டிய சூழல் இருப்பதால், பால்வினை நோய்கள் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
 
1980 காலகட்டத்தில் எச்ஐவி எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்ததால், இந்த விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நடைமுறை இன்றுவரை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.
 
கடைசியாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் சுமார் 38 ஆணுறைகள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக 1.1 லட்சம் ஆணுறைகள் அந்தப் போட்டிகளின்போது வழங்கப்பட்டன.
 
2016-ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளின்போதுதான் அதிக எண்ணிக்கையிலான ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டன. மொத்தமாக 11,238 வீரர்கள் பங்கேற்ற இந்த ஒலிம்பிக்கில் 4.5 லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட்டன.
 
பல ஒலிம்பிக் போட்டிகளின்போது ஆணுறைகள் ஆங்காங்கே கிடந்த சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. தற்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. இருந்தபோதும் ஆணுறை வழங்கப்படும் நடைமுறையை நிறுத்த வேண்டாம் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் முடிவெடுத்தனர். இதற்காக 4 நிறுவனங்களிடம் சுமார் 1.6 லட்சம் ஆணுறைகள் தயாரிக்க உடன்பாடு செய்யப்பட்டது.
 
தங்களுக்குத் தரப்படும் ஆணுறைகள் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருக்கும்போது பயன்படுத்தக் கூடாது எனவும், தங்களது வீட்டுக்கு எடுத்துச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
டோக்யோவிலும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடக்கும் இடங்களிலும் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. அதனால் வீரர்கள் தனித்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். தங்குவது, உண்பது, தூங்குவது என அனைத்தும் தனித்தனியேதான்.
 
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்கும் குடியிருப்புகளில் கார்போர்டில் செய்யப்பட்ட படுக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. இதுவும் ஜப்பானிய கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதி என்றும் தகவல் பரவியது.
 
மேலும் இது ஒரேயொரு நபரின் எடையை மட்டுமே தாங்கும் என்றும், இது ஒலிம்பிக் குடியிருப்புகளுக்குள் யாரும் செக்ஸ் வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பதற்காகவே என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் சில வீரர்களே பதவிட்டிருந்தனர்.
 
ஆனால் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர் மெக்லீனகன் வெளியிட்ட ஒரு காணொளியில் இது தவறான தகவல் என்று கூறியிருந்தார். புதுப்பிக்கத் தக்க பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட படுக்கைகள் வலுவானவை என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களும் விளக்கமளித்திருந்தனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருது தொகையை மீண்டும் அரசுக்கே கொடுத்த சங்கரய்யா!