Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு: இந்தியாவில் கருத்தடையின் சுமையை பெண்களே சுமப்பது ஏன்?

Advertiesment
Family Planning
, செவ்வாய், 28 ஜூன் 2022 (14:31 IST)
தான் கருக்கலைப்பு செய்ய நினைப்பதாக ரஞ்சனி ஷர்மா தன் கணவரிடம் கூறியபோது, அதனை ஏற்காமல் அவருக்கு அறிவுரை கூறினார் ரஞ்சனியின் கணவர்.

"கருத்தடை செய்வது என்னுடைய ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும் என என் கணவர் கூறினார்," என்கிறார், வட இந்திய நகரமான லக்னோவில் வசிக்கும், மூன்று குழந்தைகளின் தாய் 27 வயது ரஞ்சனி ஷர்மா.

ஆனால், தான் சோர்வடைந்துவிட்டதாக கூறுகிறார் ரஞ்சனி ஷர்மா. இனியும் குழந்தைகள் வேண்டாம் என முடிவெடுத்துள்ள அத்தம்பதி, கர்ப்பமாவதைத் தடுக்க காண்டம் உபயோகித்துள்ளனர். ஆனால், காண்டம் நம்மை "முற்றிலும் ஏமாற்றாத" ஒரு முறை அல்ல, எனவே ரஞ்சனி மீண்டும் இருமுறை கர்ப்பமானபோது அவர் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொண்டார்.

"ஆனால், இதனால் எனக்கு அதிகமான ரத்தப்போக்கு இருந்தது, தலைசுற்றல், சிறிது நேரத்திற்கு சுயநினைவு இல்லாமல் இருப்பது, சோர்வு ஆகியவை ஏற்பட்டன. அதனால், இந்த மாத்திரைகளை உபயோகிக்காமல் கருத்தடை செய்துகொள்வது சிறந்தது என என் கணவரிடம் தெரிவித்தேன்," என்கிறார் ரஞ்சனி.

ரஞ்சனியின் கணவர் கருத்தடை செய்துகொள்ள வேண்டுமா என்பது குறித்து அந்த தம்பதி யோசித்தனர்.

"ஆனால், நான் அவரிடம் வேண்டாம் என சொல்லிவிட்டேன்," எனக்கூறுகிறார் ரஞ்சனி ஷர்மா. "குடும்பத்திற்கு உள்ள ஒரே சம்பாத்தியம் அவர்தான், கருத்தடை செய்வது அவரை பலவீனமாக்கிவிடும், கனமான பொருட்களை அவரால் தூக்க முடியாது," என அவர் தெரிவித்தார்.

ஆண்களுக்கான கருத்தடை குறித்த தவறான புரிதல்கள்

மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்திற்கான இந்திய சமூக கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் எஸ். சாந்த குமாரி, "ஆண்களுக்கான கருத்தடை அல்லது வாசெக்டமி ஆண்மையை பாதிக்கும் என்பது போன்ற கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் தான், ஆண்களை குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களில் பங்குபெறாமல் தடுக்கிறது, கருத்தடையின் சுமையை பெண்களே முழுவதும் சுமக்க காரணமாகின்றன" என தெரிவித்தார்.

"இந்தியாவில் அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகள் நடத்தும் குடும்ப கட்டுப்பாட்டு பிரசாரங்கள் முழுவதும் பெண்களை மையப்படுத்தியே உள்ளன. இதற்கான பொறுப்பு பெண் - ஆண் என இரு தரப்புக்கும் உள்ளது, இதுகுறித்து முடிவு எடுப்பதில் இருவரும் பங்குவகிக்க வேண்டும். ஆனால், அதற்கான பொறுப்பு எப்போதும் பெண்களுக்கே விடப்படுகிறது," என அவர் தெரிவித்தார்.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை 5இன் வாயிலாக இது தெரியவந்துள்ளது. சுகாதாரம் மற்றும் சமூக காரணங்கள் குறித்து, 2019-2021 வரை இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட மிக விரிவான குடும்ப கணக்கெடுப்பு இதுவாகும்.

இந்த ஆய்வின்படி, 15 முதல் 49 வயதான, திருமணமான 99 சதவீத ஆண்கள் மற்றும் பெண்கள் நவீன கருத்தடை முறை ஒன்றை குறித்தாவது அறிந்திருக்கின்றனர், இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கருத்தடை முறைகளான காண்டம், மாத்திரைகள், ஊசிகள், கருப்பையக சாதனங்கள் என அனைத்தும் அடக்கம். 2015-16 ஆம் ஆண்டில் 47.8 சதவீதமாக இருந்த இந்த கருத்தடை வழிகளின் பயன்பாடு, 2019-21ஆம் ஆண்டில் 56.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஆனால், இதனால் ஏற்படும் நேர்மறை விளைவுகள் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.

கருத்தடையை பெண்களின் வேலையாக நினைக்கும் ஆண்கள்

10ல் ஒரு ஆண் மட்டுமே அதாவது 9.5 சதவீதத்தினர் மட்டுமே காண்டம் பயன்படுத்துகின்றனர். பெண்கள் கருத்தடை முறைகளே பிரபலமானதாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால் பெண்கள் கருத்தடை கடந்த 5 ஆண்டுகளில் 36 சதவீதத்திலிருந்து 37.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஆண்கள் கருத்தடை எளிதான முறையாக இருந்தபோதிலும், எந்தவித மாற்றமும் இன்றி 0.3 சதவீதமாகவே நீடிக்கிறது.

மேலும், உத்தர பிரதேசம், பிகார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 50 சதவீத ஆண்கள், "கருத்தடை என்பது பெண்களின் வேலை, அதுகுறித்து ஆண்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை" என அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மூன்றில் ஒரு ஆண் மற்றும் கர்நாடகாவில் உள்ள 45 சதவீத ஆண்களும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

கருத்தடையில் மாற்றம் வரவேண்டுமென்றால், முதலில் இந்த அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும் என, 2017-2019 வரை உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாட்டு முறைகளில் நிலவும் சமத்துவமற்ற சுமை குறித்த ஆய்வை வழிநடத்திய அபிநவ் பாண்டே தெரிவித்தார்.

"அனைத்து மாநிலங்களிலும் குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களில் ஆண்கள் பங்குகொள்வது மிகவும் குறைவாக இருந்தது, இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணமாக உள்ளது," என்கிறார் பாண்டே.

"கருத்தடை குறித்த தவறான புரிதல்கள் ஏராளமாக உள்ளன. ஆண்கள் கருத்தடை செய்தால் அவர்களின் ஆண்மை போய்விடும், கடினமான வேலைகளில் ஈடுபட முடியாது என நினைக்கின்றனர். காண்டம் உபயோகிப்பது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கிறது. ஆனால், அவை அசௌகரியமாக இருப்பதாகவும், அவை பாலியல் இன்பத்தை குறைப்பதாகவும் எங்களிடம் பெரும்பாலான ஆண்கள் தெரிவித்தனர்" என அவர் கூறினார்.

கிராமங்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளிடத்தில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தின் ஒருபகுதியாகவும், பாலின ரீதியான நோய்களிலிருந்து காத்துக்கொள்வதற்காகவும் அரசு பணியாளர்கள் இலவசமாக காண்டம்களை விநியோகிக்கின்றனர்.

ஊரக வளர்ச்சிக்கான ஜி.பி. பேண்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்டடீஸின் அகான்ஷா யாதவ், கிராமப்புறங்களில் சுகாதார பணியாளர்கள் மற்றும் கிராம வார்டு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகள் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். காண்டம்கள் சரியாக இல்லாததாலோ அல்லது அவற்றை சரியாக பயன்படுத்தாமல் விட்டதாலோ அல்லது மது அருந்திவிட்டு வரும் கணவர்கள் அவற்றை பயன்படுத்த மறுப்பதாலோ பெரும்பாலான பெண்கள் கர்ப்பமடைவதாக அவர் கூறுகிறார்.

அவை பெண்களுக்கு தலைவலியாக மாறுகின்றன. இந்தியாவில் கருக்கலைப்பு சட்ட ரீதியானது என்பது குறித்த அறிதல் குறைவான பெண்களுக்கே உள்ளதால், ரஞ்சனி ஷர்மா செய்தது போலவே பெரும்பாலான பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகள் அல்லது நிரந்தர கருத்தடை போன்றவற்றை நோக்கி செல்வதாக யாதவ் கூறுகிறார்.

கருத்தடை பிரச்சாரங்களில் ஆண்களின் பங்கெடுப்பை அதிகரிக்க...

நிரந்தரமான கருத்தடை முறைகளைவிட, நீண்டகால கருத்தடை முறைகளையே மருத்துவர் சாந்த குமாரி முதன்மையாக பரிந்துரைக்கிறார்.

"ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டவுடன், அவர்களை தற்காலிகமான ஆனால் நீண்ட கால கருத்தடை செய்துகொள்ளுமாறு கூறுவேன், சில ஆண்டுகள் கழித்து நிரந்தரமாக கருத்தடை செய்துகொள்ள வேண்டுமா என்பது குறித்து அவர்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்" என்கிறார் அவர்.

பெண்களுக்கு நீண்ட கால கருத்தடை முறைகள் கருப்பையக சாதனங்கள் அல்லது மாத்திரை வடிவில் உள்ளன, ஆனால் ஆண்களுக்கு அப்படி ஏதும் இல்லை.

"ஆண்களுக்கான நீண்ட கால கருத்தடை முறைகள் குறித்து உலகம் முழுதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் தற்போதைக்கு அப்படி எதுவும் இல்லை" என சாந்த குமாரி தெரிவித்தார்.

அது நனவாகும் வரை, குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் ஆண்களை சென்றடைவதற்கான வழிகளை காண வேண்டும். ஆனால், அதிசயங்களை எதிர்பார்க்கக் கூடாது எனவும், மாற்றங்கள் மெதுவாகத்தான் நடக்கும் எனவும் பாண்டே கூறுகிறார்.

"பொதுவெளியில் பாலியல் உறவு குறித்து பேசுவதை ஆண்கள் சங்கடமாக கருதுகின்றனர். கிராமப்புறங்களில் பெரும்பாலும் அனைவரும் பெண்களாகவே உள்ள அரசு சுகாதார பணியாளர்கள், வீடுகளுக்கே சென்று காண்டம்களை விநியோகிக்கின்றனர், ஆனால், இதுதொடர்பாக ஆண்களை அவர்களால் அணுக முடியவில்லை. எனவே, இதற்காக ஆண் தன்னார்வலர்களை பணியமர்த்த வேண்டும் என அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளோம் இதன்மூலம், குடும்ப கட்டுப்பாடு திட்டங்களில் ஆண்களின் பங்கு அதிகரிக்கும்," என்கிறார் அவர்.

இந்தியா முழுவதிலும் உள்ள 148 மாவட்டங்களில் கடந்த 2016 ஆம் ஆண்டில், மாமியார் மற்றும் மருமகள்கள் குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் குறித்து பேசும் பைலட் திட்டம் ஒன்று நடத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் இத்தகைய கூட்டங்களுக்கு கணவர்களும் அழைக்கப்பட்டனர், ஓராண்டு கழித்து உத்தர பிரதேசத்திலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

"குடும்ப கட்டுப்பாட்டில் ஆண்களின் பங்கெடுப்பை அதிகரிக்க இது ஒருவகையில் உதவியது. இதுதொடர்பான ஆலோசனை அமர்வுகளுக்கு சில ஆண்களும் தங்கள் மனைவியுடன் வந்தனர், ஆனால், கருத்தடை முறைகளை உபயோகிப்பதில் அவர்கள் இன்னும் தயக்கம் காட்டுகின்றனர்" என அவர் தெரிவித்தார்.

இதில் மாற்றத்தை ஏற்படுத்த, வாசெக்டமி முற்றிலும் பாதுகாப்பானது, எளிதானது என இளம் ஆண்களிடம் எடுத்துச் சொல்லும் பிரச்சாரத்தில் அரசாங்கம், மருத்துவர்கள் மற்றும் ஊடகம் கைகோர்க்க வேண்டும். அது நடைபெறும் வரை, குடும்ப கட்டுப்பாட்டு பொறுப்பிலிருந்து ஆண்கள் தப்பித்துக்கொண்டுதான் இருப்பார்கள், பெண்கள் கருத்தடையின் சுமையை சுமக்கும் நிலைதான் இருக்கும்" என, மருத்துவர் சாந்த குமாரி தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே மாதத்தில் ரூ.1.14 லட்சம் கோடி பரிவர்த்தனை: கிரெடிட் கார்டு சாதனை