Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 28 April 2025
webdunia

உடல் அறிவியல்: காதல், காமம் - உங்களுக்கு வந்திருப்பது என்ன? பிரேக்-அப் ஏன் நடக்கிறது? அறிவியல் ரீதியில் எளிய விளக்கம்

Advertiesment
BBC Tamil
, ஞாயிறு, 26 ஜூன் 2022 (13:27 IST)
வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும், தலைக்கு மேலை ஒளிவட்டம் தெரியும், கால்கள் தரையில் நிற்காது என காதலின் அறிகுறிகளாகப் பலவற்றைக் கூறலாம். ஆனாலும் காதல் இருக்கிறதா இல்லையா என்பதைப் புரிந்து கொள்வதில் மனித குலத்துக்கு என்றுமே குழப்பம்தான்.

இதில் அதிகம் புரிந்து கொள்ளப்படாத இன்னொரு அம்சம் காமம். காதலும் காமமும் ஒன்றா, இல்லை வெவ்வேறா, இல்லை ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பவையா என்றெல்லாம் கேள்விகள் உண்டு. இலக்கியங்களும் சிந்தாந்தங்களும் சொல்லும் பதில்களை பலரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் அறிவியல் இதற்கு விடை வைத்திருக்கிறது.

இனி நாம் பார்க்கப் போவது அறிவியல் ரீதியாக காதல் என்றால் என்ன, காதலுக்கும் காமத்துக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி. நரம்பியல் வாயிலாக அறிவியலாளர்கள் இதை விளக்க முற்படுகிறார்கள்.

ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹெலன் ஈ ஃபிஷரின் கூற்றுப்படி, காதல் என்பது மூன்று அம்சங்களைக் கொண்டது. காமம்தான் முதலில் வருகிறது என்கிறார் அவர். அது பெரும்பாலும்தான். எப்போதும் என்று கூற முடியாது. ஏனென்றால் பாலுறவு நிலை அற்ற ASEXUAL பண்பு கொண்டோருக்கு காமம் என்பது அறவே இல்லை.

காமத்தை அனுபவிப்பவர்கள், அது ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களால் இயக்கப்படுகிறார்கள். அவையே நமது பாலியல் ஆசையை, வேட்கையைத் தூண்டுகின்றன. இது முற்றிலும் உடலைச் சார்ந்ததாக நீங்கள் கருதலாம். அல்லது உணரலாம். உண்மையில் இது உங்கள் மரபணுவை சந்ததியினர் வழியாக பரப்புவதற்கான தூண்டுதலைப் பற்றியது.

காமம் இல்லாமல், மனித இனம் இல்லை; நீடித்திருக்காது என்று சொல்வது உண்மையானது.

காதலின் இரண்டாவது அம்சம் ஈர்ப்பு. டோபமைன் எனப்படும் நரம்பியக்கடத்தியால் இது நடக்கிறது. இது நம் மூளையில் வெளியிடப்படும் ஒரு நல்ல பொருள். இது ஒரு வெகுமதியைப் பெறுவதற்காக நம்மை உந்தித் தள்ளும் சக்தி கொண்டது இது.

அதாவது ஏதாவது ஒன்றைச் செய்யும்போது டோபமைன் வெளிப்பட்டு நம்மை நல்லபடியாக உணரச் செய்யும். அதனால் அதே செயலை நாம் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டப்படுகிறோம். இது நமது நடத்தைக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. ஒருவரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவதும், ஒருவரால் தீவிரமாகக் கவரப்படுவதும் இதனால்தான்.

பலர் இந்த 'ரிப்பீட்' சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள். புதிது புதிதாக உறவுகளைத் தேடியே அலைந்து கொண்டிருப்பார்கள். அல்லது புதிதாக முயற்சி செய்வார்கள். அவர்களுக்கு எப்போதும் டோபமைன் உற்சாகம் தேவைப்படுகிறது என்றுதான் பொருள். சம்பந்தப்பட்டவரைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் இவர்கள் ஏதோ ஒன்றுக்கு அடிமையாகிவிட்டதைப் போலத் தோன்றும். உண்மையில் நீங்கள் காதலுக்கு அடிமையாகிவிட்டீர்கள்.

விமர்சன சிந்தனை மற்றும் பகுத்தறிவு நடத்தையை ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதியை டோபமைன் குறைக்கிறது. இது அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடியதுதான். காதலில் விழுந்த மக்கள் பெரும்பாலும் சற்றே பகுத்தறிவு குறைந்து காணப்படுவார்கள் என்று அறிவியல் கூறுகிறது. இந்தத் தேனிலவுக் காலம் 18 மாதங்கள் வரை இருக்கும்.
webdunia

அட்ராக்ஷன் எனப்படும் ஈர்ப்பில் பங்கு வகிக்கும் மற்றொரு ஹார்மோன் நோர்பைன்ப்ரைன். இது நமது உடல் ரீதியிலான எதிர்வினைகளுக்குப் பொறுப்பாகிறது. உள்ளங்கை வியர்த்துப் போகும், இதயம் படபடப்பாகும், சுவாசம் வேகமாகும். வியர்வை உள்ளங்கைகள், இதயம் படபடப்பு, வேகமாக சுவாசம் இவையெல்லாவற்றுக்கும் இதுதான் காரணம்.

இந்த அறிகுறிகள் எல்லாம் மன அழுத்தத்துடன் தொடர்புடையவை. ஆனால் இது நல்ல வகையான மன அழுத்தம். ஆனந்தக் கண்ணீர் என்போமே, அதைப்போல. ஏனென்றால் காதலரின் பார்வையோ, குரலோ, வாசனையோ நமக்கு நல்லவிதமான அனுபவத்தைக் கொடுக்கிறது.

காதலின் மூன்றாவது அம்சம் பிணைப்பு. ஆக்ஸிடாஸின் மற்றும் வாசோபிரசின் ஆகிய இரண்டு ஹார்மோன்கள் இதற்காக வேலை செய்கின்றன. தழுவும் ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஆக்ஸிடாஸின், உடலுறவு மற்றும் தோலும் தோலும் உரசிக் கொள்ளும்போது வெளியிடப்படுகிறது. இது பாதுகாப்பாகவும் மன நிறைவாகவும் உணரவைக்கிறது. தனது இணையுடன் ஆழமான பிணைப்பையும் நெருக்கத்தையும் உருவாக்க உதவுகிறது.

சிலருக்கு, குழந்தை பருவத்தில் ஏற்படும் எதிர்மறையான அனுபவங்கள் ஆக்ஸிடாஸின் அமைப்பைப் பாதிக்கலாம். அதனால் பெரியவர்களான பிறகும் அவர்களால் பிணைப்பை உருவாக்குவது கடினமாகிறது. அதற்காகக் கவலைப்பட வேண்டாம். வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை. சரியான சிகிச்சையின் மூலம், ஆரோக்கியமான உறவுகளை உருவாக்கும்படியாக நமது மூளையை மாற்றியமைக்க முடியும்.

வாசோபிரசினைப் பொறுத்தவரை, இது உடலுறவுக்குப் பிறகு நேரடியாக வெளியிடப்படுகிறது. மேலும் இது மனநிறைவு உணர்வுகளை உருவாக்குகிறது. நீங்கள் விரும்பும் நபருடன் நீடித்து இருக்கும்படியான நரம்பியல் அமைப்புகளை இது தூண்டி விடுகிறது. அனைத்தும் நன்றாக இருப்பதால், காலப்போக்கில், காதல் நிலையான, நிறைவான ஒன்றாக மாறும்.

இதில் கருணையும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அறிவியல் ஆய்வு ஆராய்ச்சி காட்டுகிறது. ஒரு நீண்ட கால பந்தம் என்பது கருணை அல்லது இரக்கத்தின் தொடர்ச்சியான விளைவு என்றே கூற முடியும்.
webdunia

காதலில் எல்லாமே நல்லது என்றில்லை. நிச்சயமாக, ஓர் இருண்ட பக்கமும் இருக்கலாம். இப்படிக் கூறுவதும் அறிவியல்தான்.

மனதைச் சமநிலையில் வைத்திருக்க உதவும் ஹார்மோனான செரோடோனின் அளவு குறையும்போது வெறித்தனமான, பொறாமை நடத்தைகள் தீவிரமடையலாம். காதல் எப்போதும் நிலைக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது இல்லாதபோது வலிக்கிறது. மனமுடைந்துபோவது உண்மை. இதயமுடைந்த நோய்க்குறியீடு என்று அறியப்படுகிறது. சில நேரங்களில் மாரடைப்பு என்று கூட தவறாக நினைக்கலாம்.

காதலின்போது மட்டுமல்ல, காதல் போனாலும் உடலில் மாற்றங்கள் நடக்கின்றன. காதல் போகும்போது வரும் பிரேக்-அப்களுடன் கூடிய மன அழுத்தம் பொதுவாக உடல் வலியைக் குறிக்கும் ரசாயனங்களை வெளியிடுகிறது. எனவே நமது மூளை இந்தக் காதல் முறிவை மிகவும் வேதனையானது என்று நமக்கு உணர்த்துகிறது.

ஆனாலும் மக்கள் காதலித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மனமுடைந்தாலும், உள்ளங்கை வியர்த்தாலும், பகுத்தறிவு குறைந்த நடத்தை இருந்தாலும் மக்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் காதலித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஏனெனில் அந்த மூளையின் டோபமைன் சுரப்பு இன்பமாக இருக்கும். அறிவியலின்படி காதலும் காமும் அங்குதான் இருக்கின்றன. இதயம்தான் காதலின் அடையாளமாக இருந்தாலும்கூட.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனாதனமும் மதமும் வேறு வேறு: தமிழக ஆளுநர் ரவி