இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் இந்திய அரசின் தேவை, தொழிலதிபர்களின் கோரிக்கை, மாநில அரசுகளின் வேண்டுகோள், பொருளாதார நிலை பொறுத்து பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.
இதில் ஜிஎஸ்டி தொடர்பான விதிமுறைகள் மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கான அதிகாரங்கள், பொறுப்புகளும் மாற்றப்பட்டு வருகின்றன.
வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இந்தியாவின் மறைமுக வரியான ஜிஎஸ்டி சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிகரிக்க உள்ளது. அதை கீழ்வருமாறு தொகுத்துள்ளோம்.
-
ஜவுளி ஆடைகள் (பருத்தி பொருட்கள் தவிர) மற்றும் காலணிகளுக்கு 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி, 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் 12 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
-
ஓலா, உபர், மேரு கேப்ஸ், ஃபாஸ்ட் டிராக், மெகா கேப்ஸ் போன்ற இணைய செயலி வழி மேற்கொள்ளும் பயணங்களுக்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 5% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட உள்ளது. இணைய செயலிகளின்றி சாலையில் ஆட்டோ பிடித்துச் செல்வது போன்ற பயணங்களுக்கு இதுவரை ஜிஎஸ்டி வசூலிக்கப்படவில்லை, இனியும் அப்படியே தொடரும் என்று பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
-
இதுவரை ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற செயலிகள் மூலம் உணவகங்களில் ஆர்டர் செய்யும் உணவுக்கு வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி தொகையை (5 %), உணவகங்களே வசூலித்து ஜிஎஸ்டி ஆணையம் அல்லது அரசு அமைப்புகளுக்குச் செலுத்தி வந்தது.
-
ஆனால் இனி 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல், ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி தொகையை, டெலிவரி சேவை வழங்கும் நிறுவனங்கள் வசூலித்து, ஜிஎஸ்டி ஆணையத்திடம் செலுத்த வேண்டும்.
-
எனவே உணவு டெலிவரி நிறுவனங்கள் மற்றும் உணவகங்களுக்கு இடையிலான இந்த பொறுப்பு மாற்றத்தால், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்காது என பிடிஐ முகமையில் கூறப்பட்டுள்ளது.
-
ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையைப் பெற இனி ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது.
-
2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அதிகாரிகள், சரக்கு மற்றும் சேவை வரி பாக்கிகளை வசூலிக்க எந்த வித முன்னறிவிப்பு நோட்டிஸின்றி (Show-cause Notice) எந்த ஒரு இடத்திலும் பரிசோதிக்கலாம் என்கிற நடைமுறை அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டி-3பி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை அளவு, ஜிஎஸ்டிஆர்-1-ல் குரிப்பிடப்பட்டிருக்கும் அளவை விட குறைவாக இருந்தால் மேலே குறிப்பிட்டது போல அதிகாரிகள் பரிசோதிக்கலாம்.