Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: கொரோனா வைரஸ் ஊரடங்கால் வடமாநிலங்கள் சென்றவர்கள் தமிழகம் திரும்புவார்களா?

Advertiesment
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: கொரோனா வைரஸ் ஊரடங்கால் வடமாநிலங்கள் சென்றவர்கள் தமிழகம் திரும்புவார்களா?
, வியாழன், 11 ஜூன் 2020 (15:30 IST)
பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தின் சிறு நகரங்களில், நிரந்தரமாகக் குடியேறிய வட இந்தியர் ஒருவரைப் பார்ப்பது சற்று அரிதான ஒன்றுதான்.

ஆனால், சமீப ஆண்டுகளில் சில குக்கிராமங்களில் கூட வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் குடியேறியுள்ளனர். அவர்களில் ஆகப்பெரும்பான்மையானவர்கள்உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

ஆரம்பக் காலங்களில் தொழிற்சாலைகளில் பணிபுரிய வந்த அவர்கள் தற்போது, தமிழ்நாட்டிலும் பிற தென்னிந்திய மாநிலங்களிலும் தொழிற்துறைகளில் மட்டுமல்லாது உணவகம், விடுதி, முடி திருத்தகங்கள் என சேவைத் துறைகளிலும், கட்டுமானத் துறையிலும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மனித வளமாக உருவாகிவிட்டனர்.

பெரும் அளவில் இல்லாவிட்டாலும் தென்னகத்தின் வயல்களிலும், தோப்புகளும் அவர்கள் வேளாண்மைத் தொழிலாளர்களாக இருப்பதையும் காண முடிகிறது.

அவர்கள் தமிழநாட்டுக்குள் வரத்தொடங்கிய காலகட்டத்தில், தமிழகத்தின் வாய்ப்புகள் பறிபோகும் என்று ஒரு சாரார் கவலை தெரிவித்தனர். ஆனால், கொரோனாமுடக்கநிலை காரணமாக வடமாநிலத் தொழிலார்களில் கணிசமானவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்கள் இல்லாமல் தொழில்கள் இயங்குவதுபாதிக்கும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.

வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியா நோக்கி

இந்தப் புத்தாயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலும் தமிழகத்திலும் பல அரசியல் - பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்தன.
webdunia

2000மாவது ஆண்டுகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நல்ல நிலையில் இருந்த காலகட்டம்; இணையதள வசதிகள் பரவலாகத் தொடங்கிய காலகட்டம்; மைய நீரோட்ட ஊடகங்களைப் போல சமூக ஊடகங்களும் தனி மனித சிந்தனை மற்றும் சமூக இயக்கம் ஆகியவற்றில் வேரூன்றத் தொடங்கிய காலகட்டம்.

பொருளாதார வளர்ச்சி, அதைத் தொடர்ந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்துக்குப் புலம் பெயரத் தொடங்கியது ஆகியவை நடந்த அதேகாலகட்டத்தில் இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதி ஆண்டுகள் மற்றும் போருக்கு பிந்தைய ஆரம்ப ஆண்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

தமிழக மைய நீரோட்ட ஊடகங்களில் மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் மொழி ரீதியான இனவுணர்வு, விவாதப் பொருளாக இருந்தது.

மொழி ரீதியான இனவாதம் பேசும் ஒரு குறிப்பிட்ட சாரார் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தமிழ் மீதான பற்றை மட்டுமல்லாது பிற மொழிகள் மீதானவெறுப்பையும் வெளிப்படுத்தத் தொடங்கினர்.

கடந்த தசாப்தத்தில் நீங்கள் சமூக ஊடங்கங்களை தொடர்ச்சியாகப் பயன்படுத்துபவராக இருந்தால், தினக்கூலித் தொழிலாளர்களாக வெளிமாநிலங்களில் இருந்துதமிழகம் வருவோர் தமிழர்களின் வேலைவாய்ப்புகளை பறிப்பதாகக் கூறி விமர்சிக்கப்பட்ட பதிவு ஒன்றையேனும் கடந்து வந்திருப்பீர்கள்.

தொழிலாளர்கள் - முதலாளிகள்

போர் மாதிரியான சூழல், சமூக ஊடகங்களின் பரவல் போன்றவை இல்லாவிட்டாலும் இந்த மாதிரியான உணர்வுகள் இருந்துகொண்டேதான் இருக்கும் என்கிறார்திருவனந்தபுரத்தில் உள்ள சென்டர் பாஃர் டெவெலப்மென்ட் ஸ்டடீஸ் எனும் சமூக ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியராக உள்ள எஸ். இருதய ராஜன்.
webdunia

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இந்திய அரசு அமலாக்கிய ஊரடங்கைத் தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய வெளிமாநிலத் தொழிலாளர்கள்மீண்டும் திரும்ப வராவிட்டால், தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று பிபிசியிடம் பேசிய தொழிற்துறையினர் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

"புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதும், திரும்பி வருவதும் வழக்கமான ஒன்றுதான். திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்குத்திரும்புவதைப் போல, கொரோனா ஊரடங்கால், அவர்கள் இப்போது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். அதுவும் அனைவரும் சொந்த ஊர் செல்லவில்லை. ஊரடங்குதளர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளன."

"இந்த சூழலிலும் இன்னும் போக்குவரத்து வசதிகள் சீரடையவில்லை. நீங்கள் நல்ல முதலாளியாக இருந்தால் தொழிலாளர்கள் திரும்பி வருவார்களா என கவலைப்பட வேண்டியதில்லை. தொழிலாளர்களுக்கு கெட்ட முதலாளிகளாக இருந்தவர்கள்தான் கவலைப்பட வேண்டும்," என்கிறார் மக்கள்தொகை மற்றும் வளர்ச்சி, சர்வதேச குடிபெயர்வு உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்ற இருதய ராஜன்.

"திருவனந்தபுரத்தில், நான் வழக்கமாகச் செல்லும் உணவகம் ஒன்றின் உரிமையாளர், ஊரடங்கு காலத்திலும் தனது ஊழியர்கள் சுமார் 20 பேருக்கு உணவு, உறைவிடம், ஊதியம் ஆகியவற்றைக் கொடுத்துப் பார்த்துக்கொண்டார். அதனால் வெளிமாநில ஊழியர்கள் யாரும் சொந்த ஊருக்குக் கிளம்பவில்லை. முடக்கநிலைதளர்த்தப்பட்டபின் இப்போது அவரால் முழுவீச்சில் தொழிலைத் தொடங்க முடிகிறது," என்கிறார் அவர்.

தொழிற்துறை உற்பத்தி

தற்போது சந்தைத் தேவை குறைவாக உள்ளதால் தொழிற்துறை உற்பத்திகளும் அதற்கேற்ப குறைந்துள்ளன. இனி வரும் மாதங்களில் சந்தை பழைய நிலைக்குவரும்போது உற்பத்தியும் மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்கிறார்கள் பிபிசியிடம் பேசிய தொழிற்துறையினர்.
webdunia

அவர்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் வடமாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கு வந்தவர்கள். அவர்களில் கணிசமானவர்கள், இப்போதுஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். மீண்டும் தொழில் நடவடிக்கைகள் தொடங்கும்போது வடமாநிலங்களுக்கு சென்றவர்கள்தென்னிந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர்கள் தங்கள் விழைவை வெளிப்படுத்தினர்.

தங்கள் நிறுவனங்களின் முதலாளிகளால் நன்றாக நடத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதிகள் சீரானதும் திரும்பி வந்து விடுவார்கள். ஆனால், மோசமாக நடத்தப்பட்டவர்கள் உடனடியாகத் திரும்ப யோசிப்பார்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியான அழுத்தங்கள் கடுமையானபின்பே அவர்கள் வரவாய்ப்புண்டு. ஆக மொத்தம் தொழில் செய்பவர்களில் கெட்டவர்கள் யார் என்பதைக் கொரோனா கட்டிக்கொடுத்துவிட்டது, என்கிறார் இருதயராஜன்.

எல்லா தொழில் உரிமையாளர்களையும் அவ்வாறு பொதுமைப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தொழிலாளர்கள் வேறு காரணிகளால்கூட ஒருவேளைதிரும்பாமல் இருக்க முடிவு செய்யலாம். ஆனால், தங்கள் தொழிலாளிகள் திரும்பவில்லை என்று நிறுவனங்களை நடத்துபவர்கள் நினைத்தால், அதற்கு தாங்களும்காரணம் என்று புரிந்துகொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.

மேற்கு வங்கத்தில் இருந்து கோவைக்கு வந்து தொழில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 26 வயதாகும் மிதுனுக்கு தான் பணியாற்றுவது எந்த இடம் என்று சொல்லத்தெரியவில்லை.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு கிராமத்தில் இருக்கும் நிறுவனத்தில் இவர் தங்கிப் பணியாற்றுகிறார். இரண்டு மாத காலம் தங்கள் நிறுவனம் உணவு, உறைவிடம் வழங்கியதுடன், பகுதியளவு ஊதியமும் வழங்கியது என்று பிபிசி தமிழிடம் அவர் கூறினார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் ஒன்றில் அவர் கடந்த வாரம் சொந்த மாநிலம் திரும்பிவிட்டார்.

தனது நிறுவனம், சுற்றியிருந்தவர்கள் என யார் மீதும் அவருக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால், எல்லோரும் அப்படியில்லை.

இருக்க இடமும், உண்ண உணவும் இல்லாமல் நடந்தே ஊர் திரும்ப முடிவெடுத்தவர்களும் உண்டு. பிற மாநிலங்களை விடவும், தமிழகத்தில் இருந்து அவ்வாறு செல்லமுற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும், தமிழ்நாட்டிலும் அது நடந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களில் கணிசமானவர்கள் முறைசாரா தொழில்களில் இருப்பவர்கள். அவர்களுக்கு நிறுவனங்கள் மூலம் உணவு, உறைவிடம், ஊதியம் எனஎதையும் பெற இயலாது.

அப்படிப்பட்டவர்கள்தான், உதவ ஆளின்றி, கடுமையான இன்னலுக்கு உள்ளாகினர். அவர்களில் ஒரு பகுதியினர் தனிநபர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம்உதவிபெற்றனர்.
'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்று பெயர் பெற்ற தமிழ்நாடு இந்த ஊரடங்கு சமயத்தில் அந்தப் பெயரைக் காப்பாற்றியதா என்பது, நிலைமை சீரடைத்ததும்வடமாநிலங்கள் சென்ற தொழிலாளர்கள் எவ்வளவு விரைவாகத் திரும்புகிறார்கள் என்பதன்மூலம் தெரியவரும்.

(பிபிசி தமிழுக்காக கோவையில் இருந்து கு. மதன் பிரசாத் அளித்த உள்ளீடுகளுடன் எழுதப்பட்ட கட்டுரை.)

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரத்தில் 3 நாட்கள் கடைகளை மூட முடிவு: வணிகர்கள் முடிவால் அதிர்ச்சி