வாரத்தில் 3 நாட்கள் கடைகளை மூட முடிவு
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்த போதிலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தில் உள்ள வணிகர்கள் திடீரென வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கடைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தில் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமை கடைகளை மூட வணிகர்கள் முடிவு செய்திருப்பதாகவும், செங்குன்றத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து வாரத்தில் 3 நாட்கள் கடைகள் மூட முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது
இதேபோன்ற அறிவிப்பு சென்னையைச் சுற்றியுள்ள மற்ற நகரங்களிலும் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போதுதான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பி கொண்டிருந்த போது திடீரென செங்குன்றம் வணிகர்கள் எடுத்துள்ள இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது