Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லோகேஷ் கனகராஜ்: திரையரங்க அனுபவத்தை மீட்டெடுத்தவர்

Advertiesment
Loki
, செவ்வாய், 14 மார்ச் 2023 (14:08 IST)
மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்திய விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு, தற்போது லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மிகக் குறைவான திரைப்படங்களையே இயக்கியிருந்தாலும் அவர் லோகேஷ் கனகராஜ் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது.

2017ஆம் ஆண்டில் சந்தீப் கிஷனும் ஸ்ரீயும் நடித்து மாநகரம் என்ற படம் வெளியானபோது, முதல் சில நாட்களுக்கு அந்தப் படத்தை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை. ஆனால், அந்த வார இறுதியில், அந்த வருடம் வெளியான முக்கியமான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் எனத் தெரிந்துவிட்டது. ரஜினிகாந்த், சூர்யா போன்றவர்கள், அந்தப் படத்தைப் பாராட்டினார்கள்.

அடுத்த வாரம் துவங்கியபோது, அந்தப் படம் ஓடும் திரையரங்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டது. அப்போதுதான் கோலிவுட், 'யாரு இந்த லோகேஷ் கனகராஜ்?' என்று பேச ஆரம்பித்தது.

இந்தப் படம் ஒட்டுமொத்தமாக பெருந்தொகையை வசூலித்தது. இந்தப் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என யாருக்கும் துல்லியமாகத் தெரியாது என்றாலும், படத்தின் தயாரிப்புச் செலவைவிட, பல மடங்கு அதிகமாக இந்தப் படம் வசூல் செய்தது. இந்தப் படம் இந்தியிலும் மும்பைக்கர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

ஒரு புதுமுக இயக்குநர், இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறுவது கோலிவுட்டில் அவ்வப்போது நடக்கக்கூடிய நிகழ்வுதான். ஆனால், லோகேஷ் அடுத்தடுத்தும் சரித்திர சாதனைகளை நடத்திக்காட்டினார் என்பதுதான் இதில் ஆச்சரியம்.

மாநகரம் வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, கார்த்தி நடித்த கைதி 2019-ஆம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியானது. அதுவும் விஜய் நடித்த பிகில் திரைப்படத்துடன் வெளியானது. அடுத்த ஒன்றிரண்டு நாட்களிலேயே, சமூக வலைதளங்களில் பிகில் பற்றிய பேச்சுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கைதி படத்தைப் பற்றிய பாராட்டுரைகள் நிறைய ஆரம்பித்தன.

பிகில் படத்துடன் வெளியானதால், முதலில் இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் வெறும் 250 திரையரங்குகளே கிடைத்தன. ஆனால், படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து, இந்தப் படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அடுத்த வாரமே 350ஆக உயர்த்தப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
webdunia

படம் வெளியான ஒரு மாதத்திலேயே ஓடிடியில் வெளியானதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல திரையரங்குகள் இந்தப் படத்தை ஓட்டுவதை நிறுத்திக்கொண்டன என்றாலும், 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது கைதி. இந்தப் படத்தின் மொத்த வசூல் 100 கோடி ரூபாயைத் தாண்டியது. கார்த்தி நடித்து, நூறு கோடி ரூபாயைத் தாண்டிய முதல் படம் என்ற பெயரையும் பெற்றது.

பிகில் படத்திற்குப் பிறகு, மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கவிருந்த விஜய், கைதி படத்தின் வெற்றியைப் பார்த்து, லோகேஷ் கனகராஜுடன் கரம் கோர்த்தார். அந்தப் படம் மாஸ்டர். 2020ஆம் ஆண்டில் வெளியாக வேண்டிய அந்தப் படம் கொரோனா பரவல் காரணமாக, 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு 1,000 திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக இந்தப் படம் குறித்து கலவையான கருத்துகள் எழுந்தாலும்கூட, இந்தப் படம் சுமார் 250- 280 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கும் என நம்பப்படுகிறது.

இதற்கடுத்ததாக, கமல்ஹாசனுடன் விக்ரம் படத்திற்காக கரம் கோர்த்தார் லோகேஷ். 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான விக்ரம் பல அசுர சாதனைகளைப் படைத்தது.

உலகம் முழுக்க 5,000 திரையரங்குகளிலும் தமிழ்நாட்டில் 700-750 திரையரங்குகளிலும் விக்ரம் வெளியானது. படம் வெளியாகி நான்கைந்து காட்சிகள் கடந்த நிலையிலேயே, இந்தப் படம் மிகப் பெரிய வசூல் சாதனைகளைப் படைக்கப் போகிறது என்பது உறுதியானது. அதற்கேற்ற வகையில், சுமார் 450 - 500 கோடி ரூபாய் வரை வசூலித்து, தமிழில் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் வரிசையில் இடம்பிடித்தது.

தற்போது, விஜய்யின் அடுத்த படமான லியோவை இயக்கிக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் இயக்கி இதுவரை நான்கு படங்களே வெளியாகியிருக்கும் நிலையில், தமிழின் மிக முக்கியமான இயக்குநர் என அவர் கருதப்படுவதற்கு, அவர் படங்கள் வசூல் சாதனை படைப்பது மட்டும் காரணமல்ல.

மாறாக, லோகேஷின் படங்கள் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. ஓடிடிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்ட இந்த காலகட்டத்திலும் திரையரங்களைத் தேடிவரும் ரசிகர்களை அவர் ஏமாற்றுவதில்லை. திரையரங்கில் பார்த்தால் மட்டுமே கிடைக்கக்கூடிய சிறப்பான அனுபவத்தை இவரது படங்கள் வழங்குகின்றன. உதாரணமாக, கைதி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியையும் விக்ரம் படத்தின் இடைவேளைக் காட்சியையும் சொல்லலாம்.

பல இயக்குநர்கள் தங்கள் படங்கள் சில வெற்றிகளைப் பெற்ற பிறகு, தங்கள் பாணியை மாற்றிக்கொள்வதைப் போல, லோகேஷ் மாற்றிக்கொள்ளக்கூடாது என்பதுதான் அவரது ரசிகர்களின் ஒரே விருப்பம்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டிங்ல இருந்து ஃபிட்டிங் வரை பண்ணும்..! – Chat GPT அடுத்த வெர்ஷன் GPT-4!