Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: பாகுபாடு காரணமாக குறைவாக சம்பாதிக்கும் இந்திய பெண்கள், முஸ்லிம்கள்

ஆக்ஸ்ஃபாம் அறிக்கை: பாகுபாடு காரணமாக குறைவாக சம்பாதிக்கும் இந்திய பெண்கள், முஸ்லிம்கள்
, வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (16:26 IST)
வேலைவாய்ப்பு சந்தையில் இந்திய பெண்கள் பாகுபாட்டை சந்திப்பதாகவும் ஆண்களுக்கு நிகரான தகுதிகள், பணி அனுபவம் இருந்தாலும் ஆண்களைவிட பெண்கள் குறைவான வருமானத்தையே பெறுவதாகவும், சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

பெண்கள் குறைவான ஊதியம் பெறுவதற்கு "பெண்கள் குறித்த சமூகம் மற்றும் வேலையளிப்பவர்களின் முன்முடிவுகள்" காரணமாக இருப்பதாக, ஆக்ஸ்ஃபாம் இந்தியா வெளியிட்டுள்ள பாகுபாடு அறிக்கை 2022 குற்றம்சுமத்துகிறது.

வேலைவாய்ப்பு சந்தையில் விளிம்புநிலையில் உள்ள மற்ற சமூகத்தினரும் பாகுபாடுகளால் பாதிக்கப்படுவதாக, அந்த அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.
சாதிய கட்டமைப்பில் கீழ்நிலையில் உள்ளவர்கள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம் மதத்தினர் உள்ளிட்டோரும் இவர்களுள் அடங்குவர்.

"தொழிலாளர் சந்தையில் பாகுபாடு என்பது ஒரே மாதிரியான திறன்களை கொண்டவர்கள் தங்களின் அடையாளம் அல்லது சமூக பின்னணிக்காக வித்தியாசமாக நடத்தப்படுவது ஆகும்," என, ஆக்ஸ்ஃபாம் இந்தியா முதன்மை செயல் அதிகாரி அமிதாப் பேஹர் தெரிவிக்கிறார்.

"பெண்கள் மற்றும் மற்ற சமூகப் பிரிவினரிடையே வேலைவாய்ப்பில் சமத்துவமின்மை நிலவுவதற்கு கல்வி அல்லது பணி அனுபவத்திற்கான அணுகலில் குறைபாடுகள் இருப்பது மட்டும் காரணம் அல்ல, பாகுபாடு காட்டுவதும் காரணம்" என அவர் தெரிவித்தார்.

ஆக்ஸ்ஃபாமில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், வெவ்வேறு சமூகப் பிரிவினரிடையே 2004 முதல் 2020 வரையில், வேலைகள், ஊதியம், உடல் ஆரோக்கியம் மற்றும் விவசாயக் கடனை அணுகுதல் உள்ளிட்டவை குறித்த அரசாங்க தரவுகளை ஆய்வு செய்து, பின் அதன் அடிப்படையில் பாகுபாட்டை கணக்கிட புள்ளிவிவர மாதிரிகளை பயன்படுத்தினர்.
webdunia

அதன்மூலம், ஆண்கள் ஒவ்வொரு மாதமும் பெண்களைவிட சராசரியாக 4,000 ரூபாயும், முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதோர் 7,000 ரூபாயும் அதிக வருமானம் ஈட்டுகின்றனர் என்பதையும் சாதிய கட்டமைப்பில் கீழ் நிலையில் உள்ளோர் மற்றும் பழங்குடி மக்கள் மற்ற பிரிவினரைவிட 5,000 ரூபாய் குறைவாக வருமானம் ஈட்டுவதையும் கண்டறிந்தனர்.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கிலான பெண் சிசுக்கள் கருக்கலைப்பு செய்யப்படுவதால், பாலின விகிதத்தில் எதிர்மறையான நிலைக்கு வழிவகுத்துள்ள நிலையில், பெண்களை தவறாக நடத்துவதாக இந்தியாவில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. பிறந்ததிலிருந்து பெரும்பான்மையான பெண்கள் பாகுபாடு, முன்முடிவுகள், வன்கொடுமை மற்றும் புறக்கணிப்புகள் ஆகியவற்றை தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர் சந்தையில் மிக குறைவான பெண்களே உள்ள நிலையில், அதிலும் பாலின சமத்துவமின்மை நிலவுவது அனைவரும் அறிந்ததே.

இந்தியாவில் உழைக்கும் பெண்கள் விகிதத்தில் கடும் சரிவு: காரணம் என்ன?

இந்திய அரசாங்கத் தரவுகளின்படி 2020-21ஆம் ஆண்டில் தொழிலாளர் சக்தியில் பெண்கள் 25.1 சதவீதம் மட்டுமே. இது பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மட்டும் குறைவானது அல்ல, 2004-05ஆம் ஆண்டில் 42.7% ஆக இருந்து தற்போது இந்தியாவுக்குள்ளேயே இந்த விகிதம் குறைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் நிலையில், பெண்கள் தொழிலாளர் சக்தியிலிருந்து வெளியேறுவது கவலைக்குரிய ஒன்று என, ஆக்ஸ்ஃபாம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஊரடங்கால் வேலைகளில் பற்றாக்குறை ஏற்பட்டபோது பெண்கள் தொழிலாளர் சந்தையிலிருந்து வெளியே தள்ளப்பட்டதால் இந்த போக்கு அதிகரித்திருக்கலாம்.

வீட்டு பொறுப்புகள் அல்லது சமூக அந்தஸ்து காரணமாக தொழிலாளர் சந்தையில் இணைய "விரும்பாத" மிகவும் திறன்வாய்ந்த பெரும்பகுதி பெண்கள் இருப்பது, பாலின பாகுபாட்டின் அளவை விளக்குவதாக உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது.

"ஆண்களுக்கு நிகராக அல்லது அவர்களை விட அதிகமான திறன் கொண்ட பெரும்பகுதி பெண்கள் வேலையிலிருந்து விலகி இருப்பதற்கு ஆணாதிக்கப் போக்கு காரணமாக இருக்கிறது. இதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை," என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை தவிர்த்து, "வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினரும்" வேலைகள், வாழ்வாதாரம், விவசாயக் கடன் உள்ளிட்டவற்றை அணுகுவதில் பாகுபாடுகளை சந்திப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

"கொரோனா பெருந்தொற்று காலத்தின் ஆரம்ப மாதங்களில், முஸ்லிம்களிடையே வேலைவாய்ப்பின்மை 17% என்ற அளவில் உயர்ந்ததாக," அந்த அறிக்கை கூறுகிறது.

"இந்திய சமூகத்தில் பாகுபாடு, சமூகரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதாரத்திலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்," எனக்கூறும் பேஹர், அரசாங்கம், அரசியல் கட்சிகள், கொள்கை வகுப்பாளர்கள், மக்கள் அமைப்புகள் இணைந்து பாகுபாடு அற்ற இந்தியாவை உருவாக்க பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்- மாநகராட்சி அறிவிப்பு