Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் ஹாசன் பிறந்தநாள்: ஓடிடி குறித்து கமல் கொடுத்த விளக்கம் முதல் அடுத்த பட அறிவிப்பு வரை

கமல் ஹாசன் பிறந்தநாள்: ஓடிடி குறித்து கமல் கொடுத்த விளக்கம் முதல் அடுத்த பட அறிவிப்பு வரை
, திங்கள், 7 நவம்பர் 2022 (13:58 IST)
ஒருபுறம் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு. இன்னொருபுறம் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸின் சார்பில் அடுத்தடுத்து நான்கு படங்களின் தயாரிப்புப் பணிகள். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் 'தலைவன் இருக்கிறான்' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பதிவு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணி, விக்ரம்-2 படத்தின் நூறாவது நாள் விழா ஏற்பாடுகள் இது அனைத்தும் தற்போது கமல் ஹாசன் மேற்கொண்டிருக்கும் பணிகள்.
 
நவம்பர் ஏழாம் தேதியான இன்று, தனது அறுபதெட்டாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் கமல் ஹாசன்.
 
1954 நவம்பர் 7ஆம் தேதியன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த கமல்ஹாசன், அப்பா சீனிவாசனின் கண்டிப்புக்கும் அண்ணன்கள் மற்றும் அக்காவின் பாசத்திற்குமிடையில் வளர்ந்த கடைக்குட்டி செல்லம்.
 
ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடியவர் கமல் ஹாசன். சினிமா துறையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்தாலும் தவறாமல் புத்தங்களை படித்துவிடுவார் என்கிறார் அவரது நீண்டகால நண்பரும் இயக்குநருமான சந்தான பாரதி.
 
"அப்படி படித்த புத்தகங்களை பரண் மீது போட்டுவிடும் பழக்கம் அவருக்கு எப்போதும் இருந்ததே இல்லை. படித்த விஷயங்களை தன் மூளையில் பதிவு செய்து விட்டு, அந்தப் புத்தங்களை தன் நண்பர்களுக்குப் பரிசளித்து படிக்கச் சொல்வது அவரது வழக்கம்" என்கிறார் சந்தானபாரதி.
 
சினிமாவிற்குத் தேவையான இசை, நாட்டியம் இரண்டையும் முறைப்படி கற்றுக் கொண்டவர் கமல். நடிக்க வருமுன் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தவர்.
 
கமல் ஹாசனை தன் முதல் படமான உணர்ச்சிகள் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய ஆர். சி. சக்தியும், திரைக்கதாசிரியர் அனந்துவும்தான் தனக்கு சினிமாவைக் கற்றுக் கொடுத்தவர்கள் என்று அடிக்கடி குறிப்பிட்டு தன் நன்றியை வெளிப்படுத்துவார் கமல் ஹாசன்.
 
இருபத்தைந்தாவது வயதிலேயே தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் உருமாற்றிக் கொண்டு ராஜபார்வை படத்தைத் தயாரித்தார் கமல் என்கிறார் இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.ரவிகுமார்.
 
தெனாலி படத்தின் மூலம் தன்னை தயாரிப்பாளர் ஆக்கியதும் கமல்தான் என்கிறார் இவர்.
 
"கட்சிக் கூட்டங்கள் நடக்கும்போது ஒரு நகரச் செயலாளரைப் பற்றி நான் சொல்வேன். அவரைப் பற்றி மேலும் பத்து விஷயங்களை அவர் திருப்பிச் சொல்லுவார். எப்படி எங்கே அந்த தகவல்களை சேகரிக்கிறார் என்பதே வியப்பாக இருக்கும். அதேபோல அவரது ஞாபகசக்தியும் மிகவும் அபாரமானது. புத்தகமோ படமோ அதை படிக்கும் போதும் பார்க்கும் போதும் அதில் மிகவும் ஈடுபட்டு அதை மனதில் ஆழமாக இறக்கி வைத்துக் கொள்வார். " என்கிறார் கமல் நடத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ்.
 
பத்து வருடங்களுக்கு முன்னர் கமல் ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை ஓடிடியில் வெளியிட எடுத்த முயற்சிகளுக்கு இங்கே தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கமல் அப்போது ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.
 
" நான் நாத்திகன்தான். இருந்தாலும் ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். திருப்பதி காலண்டர்கள் எல்லாமே ஒரிஜனல் திருப்பதி கோயிலுக்குச் சமமாகாது. திருப்பதிக்கு இருக்கும் மதிப்பைப் போலத்தான் தியேட்டர்களுக்கு என்றைக்கும் மரியாதை இருந்து கொண்டே இருக்கும். அதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.
 
கடவுள் நம்பிக்கை இல்லாதபோதும் கமலை தங்கள் படங்களின் ஆடியோ, டிரைலர் ரிலீஸ்களில் கலந்து கொண்டால், செண்டிமெண்டாக அந்தப் படம் வெற்றிபெறும் என்று கோடம்பாக்கத்தில் பலரும் நம்புகிறார்கள்.
 
அதில் முக்கியமானவர் இயக்குனர் பிரபு சாலமன். அவரது கொக்கி, மைனா, கும்கியைத் தொடர்ந்து கமலின் தேதிக்காக நீண்ட நாட்கள் காத்திருந்து சமீபத்தில் தனது செம்பி என்ற படத்தின் ஆடியோவை வெளியிட்டார் பிரபு சாலமன். கோவை சரளா கதையின் நாயகியாக நடித்திருக்கும் செம்பி விழாவில் கமல் பேசும்போது ஒன்றைக் குறிப்பிட்டுப் பேசினார்:
 
" கோடிக்கணக்கில் தயாரிக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் நன்றாக இல்லையென்றாலும் நிராகரித்து விடுங்கள். நல்ல படங்கள் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் அதைக் கொண்டாடுங்கள். நான் நடித்த படங்களிலேயே பதினாறு வயதினிலே படம் அப்படி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல படம். ஆனால் அதை வாங்கி வெளியிட யாருமில்லை. அந்தப் படத்தின் ஸ்டில்ஸ்களை எடுத்துக் கொண்டு ஒரு மீடியேட்டர் மாதிரி சிலபேரிடம் நானே போய் பேசியிருக்கிறேன். 'பெல்பாட்டம் போட்டுக் கொண்டு, ஸ்டைலா டான்ஸெல்லாம் பண்ணி இப்போதான் முன்னுக்கு வந்திட்டிருக்கீங்க, நீங்க எதுக்கு தம்பி இப்படி கோவணமெல்லாம் கட்டிக்கிட்டு நடிக்கிறீங்க'ன்னு எங்கிட்டயே சிலபேரு கேட்டிருக்காங்க. ஆனா அது நல்ல படம் என்பதால் வெள்ளிவிழா கண்டது " என்றார்.
 
கமல் ஹாசனின் பிறந்தநாளை ஒட்டி, கமல்-234 என்று அவரின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத கமலின் 234வது படத்தில், இந்த படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 ஆயிரம் கோடி ரூபாய் பரிசு அறிவித்து அசர வைத்த லாட்டரி: 37 முறை யாரும் வெல்ல முடியாதது ஏன்?