Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஞ்சிநாதனின் குறிக்கோள் இந்திய சுதந்திரமா? இந்து மதமா?

Vanjinathan
, வெள்ளி, 17 ஜூன் 2022 (15:45 IST)
(சுதந்திரப்போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவு தினம் இன்று. இதையொட்டி 2011ல் பிபிசி தமிழ் எடுத்த பேட்டியின் வரிவடிவத்தை பிரசுரிக்கிறோம்.)

ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதனின் தியாகம் குறித்து பேசப்படும்போதெல்லாம் அவர் சுதந்திர இந்தியாவை விட இந்து இந்தியாவையே அதிகம் விரும்பினார் என்ற வாதங்கள் பேசுபொருளாவது வழக்கம்.

சுதந்திரப் போராட்டத் தியாகியாக அவர் சித்தரிக்கப்பட்டாலும், 'அவர் உண்மையில் மதவாதி, சுயஜாதி சார்புடையவர்' போன்ற விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வாஞ்சிநாதனின் சித்தாந்தங்கள் குறித்தும் இறந்தபோது கிடைத்த கடிதத்தில் இருந்த தகவல்களின் பின்னணி குறித்தும் ஆய்வாளர் ஆ.ரா.வேங்கடாசலபதி பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலின் உரை வடிவம் இது.

1905ஆம் ஆண்டு வாக்கில் வங்காளத்தில் தோன்றிய சுதேசி இயக்கத்தின் விளைவாக தமிழகத்திலும் சுதேசி இயக்கங்கள் தோன்றின. அவை மிகத்தீவிரமாக இயங்கிய பகுதிகளில திருநெல்வேலியும் ஒன்று. இங்குதான் வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோர் சுதேசி இயக்கத்தை நடத்தி வந்தனர்.

இதன் விளைவாக வ.உ.சி, சுப்ரமணிய சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டு மிக நீண்ட கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் கூட்டம் ஒரு புரட்சிகர குழுவாக உருவாகி, அவர்களுக்கு வங்காளத்தை சேர்ந்த அபிநவ பாரத சமிதி என்ற குழுவுடன் தொடர்பும் ஏற்பட்டது.

இந்தக்குழு, ஆங்கிலேயர்களைக் கொன்று அதன் மூலம் இந்திய சுதந்திரத்தை அடைவது என்ற கொள்கையைக் கொண்டது. இந்தப் பின்னணியில்தான் வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக் கொன்றார்.

அந்தச் சமயத்தில் தேசிய இயக்கம் என்பதே இந்து சமயம் சார்ந்ததாகவும் மேல்சாதியினர் ஆதிக்கம் நிறைந்ததாகவும் இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிற்காலத்தில் நேரு, காந்தி ஆகியோரெல்லாம் கூறியது போல, தேசிய இயக்கம் இந்து மத சார்பானதாகவே இருந்தது என்பதை நீக்கிவிட்டு நாம் இந்த வரலாற்றைப் பார்க்க முடியாது. இந்தப்போக்கை அப்போதே தாகூர் கண்டித்துள்ளார்.

எனவே தேசிய இயக்கம் தன் தொடக்க காலத்தில் இந்து மதம் சார்ந்ததாகவே இருந்தது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 

வாஞ்சிநாதன் சாவர்க்கரின் சீடரான .வே.சு ஐயரிடம் ஆயுதப்பயிற்சி பெற்றார் என்று சொல்லப்படுகிறதே?

வ.வே.சு. ஐயர் சாவர்க்கரின் நண்பர் என்பது நாம் அறிந்ததே. ஆனால், சாவர்க்கரின் இந்துத்துவ செயல்பாடுகள் 1920க்கும் பிறகுதான் வலிமை பெறுகின்றன. எனவே வ.வே.சு ஐயர்தான் துப்பாக்கி பயிற்சி அளித்தார் என்ற கூற்றுக்கு பெரிதாக ஆதாரங்கள் ஏதுமில்லை. அவை உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே இருக்கிறது. அதுபோக, புரட்சிகர இயக்கங்களில் நடந்தவை பெரும்பாலும் ரகசியமாகவே இருக்கும்.

வாஞ்சி நாதன் இறந்தபோது சட்டைப்பையிலிருந்து எடுக்கப்பட்ட தற்கொலை கடிதத்தில் கோ மாமிசம் உண்ணும் ஒரு மிலேச்சன் ஆள்வதா என்று இருந்ததா?

சட்டப்பையில் இருந்த தற்கொலை கடிதத்தில், "அர்ஜுனன் போன்ற பெரும் வீரர்கள் ஆண்ட இந்த தேசத்தை கேவலம் கோ மாமிசம் உண்ணும் ஜார்ஜ் என்ற ஒரு மிலேச்சன் ஆள்வதா?" என்று இருந்தது. தொடக்கத்தில் இந்து சமய சார்புள்ளதாகவே இந்திய தேசிய இயக்கம் இருந்த நிலையில், இந்த சொல்லாடல்களும் அதையே உறுதி செய்கின்றன. அது உண்மைதான்.

குற்றாலத்தில் எல்லோரும் குளிக்கலாம் என்று அனுமதித்ததும் அக்ரஹாரம் வழியாக ஒரு தலித் பெண்ணை நடக்க வைத்ததும்தான் ஆஷ் துரையை சுட்டுக்கொல்லக் காரணம் என்று சொல்லப்படுகிறதே?

சொல்லப்போனால், ஆஷ்துரையை கொல்வது என்பது வாஞ்சிக்கோ அவரது குழுவுக்கோ இலக்கு அல்ல.

என் ஆய்வின்படி நான் கண்டறிந்ததில், வ உ சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியும், அப்போதைய 1908ஆம் ஆண்டுவாக்கில் திருநெல்வேலி ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் வின்ச்சும் தான். ஆனால், 1911ஆம் ஆண்டு அந்த நீதிபதி பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து சென்றுவிட்டார். ஆட்சியர் வின்ச் ஓராண்டு விடுப்பில் சென்றுவிட்டார்.
webdunia

இந்த சமயத்தில் மீண்டும் திருநெல்வேலி ஆட்சியராக நியமிக்கப்பட்டவர்தான் ஆஷ். வாஞ்சிநாதனின் செயல்திட்டத்தின்படி ஒரு ஆங்கிலேய பிரதிநிதி கொல்லப்பட்டார் அவ்வவளவுதான். மற்றபடி ஆஷ் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு ஆதரவாக நடந்துகொண்டார் என்று சொல்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை.

இப்படியான தனி நபர் கொலை மூலமாக வாஞ்சி சாதித்தது என்ன? ஏதாவது புரட்சி நடந்ததா?

இதற்கு நாம், வங்காள சம்பவங்கள் சிலவற்றை பொருத்திப் பார்க்க வேண்டும். வங்காளத்தில் இதுபோன்ற அரசியல் கொலைகள் ஏராளமாக புரட்சிகர இயக்கங்களால் நடத்தப்பட்டன. ஆனால், தமிழகத்தில் பெரிதாக ஏதுமில்லை. வாஞ்சிநாதன் மட்டும்தான். தமிழ்நாட்டில் இந்த கொலைகளுக்குப் பிறகு தேசிய இயக்கங்கள், சுதேசி இயக்கங்களுக்கு பின்னடைவுதான் ஏற்பட்டது. இதற்குப்பின் பிரிட்டிஷ் அரசாங்கம் தேசிய இயக்கங்களை கடுமையாக ஒடுக்கியது.

பலர்மீது சதி வழக்குகள் தொடுக்கப்பட்டன. பலர் ஓடி ஒளிந்தனர். நீலகண்ட பிரம்மச்சாரி, சுவாமி ஓம்காரனந்தாவாக மாறிப்போனார். மரத்துக்கடை சுப்ரமணிய பிள்ளையின் தம்பி டி.எஸ்.சொக்கலிங்கம் பத்திரிகையாளராக மாறினார். அதன்பின்னர் பெரிதாக யாரும் தேசிய இயக்க செயல்பாடுகளில் பங்குபெறவில்லை. பின்னர் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கும் வரை இந்த செயல்பாடுகள் சுணக்கமாகவே இருந்தன.

வாஞ்சியின் கூட்டாளியான மாடசாமி குறித்து எந்த தகவல்களும் இல்லையே அவர் என்னதான் ஆனார்?

மாடசாமி குறித்து கிடைக்கும் தகவல்கள் குறைவாகவே உள்ளன. அவர் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்தவர் என்றும் வ.உ.சியைப் பின்பற்றி தேசிய இயக்கத்தில் இணைந்த அவர், வ.உ.சி. மிகத்தீவிரமாக இயங்கிய 1906-1908 காலகட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் என்றும் தெரியவருகிறது. ஆஷ் துரையை வாஞ்சி சுட்டபோது உடன் ஒருவர் இருந்ததாக காவல்துறையும் பத்திரிகை செய்திகளும் தெரிவிக்கின்றன. அந்த இரண்டாவது நபர் ஓடிவிடுகிறார். அவர்தான் மாடசாமிப்பிள்ளை என்று காவல்துரை தரப்பு சொல்லிவருகிறது.

மேலும் அவர் புதுவைக்கு தப்பிச் சென்றதாக சில ரகசிய காவல்துறை குறிப்புகள் தெரிவிக்கின்றன. பிற்காலத்தில் பாரதிதாசன் குடும்ப விளக்கு எழுதியபோது மாடசாமிபிள்ளை குறித்து குறிப்புகள் சொல்கிறார். ஆனால், அவையும் உறுதியாகவோ நம்பத்தகுந்ததாகவோ இல்லை. ஆகவே மாடசாமிப்பிள்ளை தொடர்ந்து ஒரு புதிராகவே உள்ளார். பகத்சிங், குபிராம் போஸ் போல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசிய புரட்சிகர இயக்கத்தின் நாயகர்களாக யாரும் பெரிதாக இல்லை. அந்த வரிசையில் வாஞ்சிக்கு இதில் இடமுண்டு.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிக்கெட் எடுக்காமல் வித் அவுட் பயணம்! – ஒரு ரயிலில் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் வசூல்!