Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"எல்லை மீறக் கூடாது" - குர்பத்வந்த் சிங் வழக்கில் இந்தியா பற்றி அமெரிக்க தூதர் என்ன கூறினார்?

sinoj

, திங்கள், 1 ஏப்ரல் 2024 (23:02 IST)
இந்தியாவுக்கான அமெரிக்க தூதரான எரிக் கர்சிட்டி ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த ஒரு பேட்டிக்கு இந்திய அரசு பதில் அளித்துள்ளது.
 
இந்தியாவால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங் பன்னூன்-ஐ அமெரிக்காவில் படுகொலை செய்ய சதி முயற்சி நடந்ததாக கூறப்படும் வழக்கை அமெரிக்கா விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, யாரும் எல்லை மீறி நடக்க கூடாது என்று இந்தியாவை குறிப்பிட்டு கூறினார்.
 
இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த வழக்கில் இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
 
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கர்சிட்டி ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அண்மையில் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டியில் குர்பத்வந்த் சிங் பன்னூன், இந்தியா - அமெரிக்கா உறவு, இந்தியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார்.
 
இந்திய- அமெரிக்க உறவு குறித்து பேசிய அவர், `பல விஷயங்களில் எங்களின் பார்வை வெவ்வேறு விதமாக உள்ளன, கருத்து ஒற்றுமை கிடையாது. ஆனால், அவற்றை நாங்கள் சிறப்பாக கையாள்கிறோம். ஒரு வெற்றிகரமான திருமண பந்தத்தைப் போல் இந்த உறவு உள்ளது என்றார்.
 
குர்பந்த் சிங் பன்னூன் விவகாரம் குறித்து பேசும்போது, `விசாரணையில் என்ன நடைபெறுகிறது என்பதை பொதுவில் வெளிப்படையாக கூற முடியாது. மறுபுறம், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இந்தியாவை இணைத்துக்கொண்டு செயல்படுகிறோம். அவர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு என்று எல்லைக் கோடு உள்ளது. அதை மீறக் கூடாது. உங்களது சொந்த குடிமகனை படுகொலை செய்வது தொடர்பான குற்றச்சாட்டில் எந்த அரசாங்கத்துக்கும் அரசாங்க ஊழியருக்கும் தொடர்பு இருக்கக் கூடாது. அது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு சிவப்புக் கோடு’ என்று தெரிவித்திருந்தார்.
 
டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ”அமெரிக்க தூதர் ஒரு தூதராக தனது நாட்டின் நிலை குறித்து பேசியிருக்கிறார். எனது நாட்டின் நிலை என்பது குறித்து நான் கூறுகிறேன். இந்த குறிப்பிட்ட வழக்கில் சில தகவல்கள் எங்களிடம் வழங்கப்பட்டுள்ளன. அது குறித்து விசாரித்து வருகிறோம் . நமது நாட்டின் பாதுகாப்பு நலன்கள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக கருதுகிறோம், அது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.
 
அமெரிக்காவைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவர் 'ஜஸ்டிஸ் ஃபார் சிக்ஸ்' அமைப்பின் நிறுவனர் மற்றும் வழக்கறிஞர்.
 
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக மாற்றவும், காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கவும், பஞ்சாபியர்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்கவும் இந்த அமைப்பை பன்னூன் நிறுவி, தமது கோரிக்கைகளுக்கான ‘பொது வாக்கெடுப்பு-2020’ பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
 
இதன் கீழ், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மற்றும் உலகெங்கிலும் வசிக்கும் சீக்கியர்கள் ஆன்லைனில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் வாக்களிப்பதற்கு முன்பே, இந்த அமைப்பு மற்றும் காலிஸ்தானுக்கு ஆதரவான 40 இணையதளங்களை இந்திய அரசு தடை செய்தது.
 
இந்த அமைப்பு தன்னை ஒரு மனித உரிமை அமைப்பு என்று அடையாளப்படுத்திக் கொள்கிறது, ஆனால் இந்தியா அதை 'பயங்கரவாத' அமைப்பாக அறிவித்துள்ளது.
 
1980களில் பஞ்சாபில் காலிஸ்தான் இயக்கம் உச்சத்தில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் இந்த முழக்கத்துக்கான ஆதரவு குறைந்துபோனது. தற்போது, பஞ்சாப் அரசியல் காலிஸ்தான் விவகாரத்தில் இருந்து விலகி நெடுஞ்தூரம் வந்துவிட்டது. எனினும், வெளிநாடுகளில் வாழும் சீக்கிய வம்சாவளி ஆதரவாளர்களிடம் தனி நாடு கோரிக்கை இன்னும் உள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்த சென்னை மெட்ரோ நிர்வாகம்