Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கையில் எம்ஜிஆர் பிறந்த வீடு இன்று எப்படி இருக்கிறது? - பிபிசி தமிழ் கள ஆய்வு

mg ramachandran
, திங்கள், 5 ஜூன் 2023 (22:51 IST)
தென்னிந்திய திரைத்துறையில் என்றுமே அசைக்க முடியாத நட்சத்திரமாக பிரகாசித்தவர், தமிழக அரசியலில் எவராலும் மறக்க முடியாத 'புரட்சி தலைவராக' விளங்கும் எம்.ஜி.ஆர் என அன்பாக அழைக்கப்படும் எம்.ஜி.ராமசந்திரன் இலங்கையிலேயே பிறந்தார்.
 
இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலபிட்டி என்ற பிரதேசத்திலேயே, 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தார்.
 
நாவலபிட்டி நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராமமே கல்லாறு (இன்று கல்லோய என சிங்கள பெயரைக் கொண்டு அழைக்கப்படுகின்றது).
 
தேயிலை தொழிலைச் செய்யும் மக்களுக்காக ஆங்கிலேயர்களால் கல்லாறு பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்ட லயின் அறையொன்றிலேயே அவர் பிறந்துள்ளார்.
 
குழந்தைப்பருவத்தை எம்.ஜி.ஆர் நாவலபிட்டி பகுதியில் செலவிட்டதுடன், அதன் பின்னரான காலத்தில் கண்டி நகரில் வாழ்ந்துள்ளார்.
 
 
எம்.ஜி.ஆர் கல்லாறு பகுதியில் பிறந்தார் என்பதற்கு அவர் பிறந்ததாகக் கூறப்படும் வீடே தற்போது சாட்சியாக விளங்குகின்றது.
 
தமது முன்னோர்களின் தகவலை அடிப்படையாக் கொண்டே, எம்.ஜி.ஆர் இந்தப் பகுதியில் வாழ்ந்ததை அந்தப் பிரதேச மக்கள் உறுதி செய்கின்றனர்.
 
தனது தந்தையின் இறப்பு, அதைத் தொடர்ந்து, தனது சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோரின் இறப்புக்கள், எம்.ஜி.ஆர் மீண்டும் தமிழகம் செல்வதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
 
எம்.ஜி.ஆர் பிறந்ததாகக் கூறப்படும் வீட்டைத் தேடி, பிபிசி தமிழ் நாவலபிட்டி பகுதியை நோக்கிப் பயணித்தது.
 
நாவலபிட்டி பகுதியிலிருந்து தலவாகலை செல்லும் பிரதான வீதியில் சுமார் 5 கிமீ தூரம் வரை பயணித்தபோது, ஓர் இந்து ஆலயம் மற்றும் பாலமொன்றுடன் அமைந்துள்ள கல்லாறு பகுதியை நாம் சென்றடைந்தோம்.
 
பிரதான வீதியிலேயே சுமார் 200 வருடங்கள் பழைமையான லயின் அறைகள் அமைக்கப்பட்டிருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது.
 
அந்த லயின் அறைகளில் இறுதியாக உள்ள வீடே, எம்.ஜி.ஆர் பிறந்த வீடாக நம்பப்படுகின்றது. வீட்டிற்கு அருகில் மிகவும் பழைமையான பலா மரமொன்றும், வீட்டின் பின்புறம் நீரோடை ஒன்றும் காணப்படுகின்றது.
 
வீட்டின் முன்புறம் திருத்த அமைக்கப்பட்டிருந்தாலும், வீட்டின் பின்புறம் அந்த வீடுகளின் பழைமையைக் கூறும் வகையில் உள்ளன.
 
வீட்டின் பின்புறத்தில் ஓடும் நீரோடையில், மழைக் காலத்தில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், அந்த வீட்டின் பின்புறம் முழுமையாகத் தாழிறங்கியுள்ளதைக் காண முடிந்தது. மிகவும் சிதைவடைந்து காணப்படும் இந்த வீட்டில் தற்போது முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகின்றார்.
 
 
தமிழக அரசியலில் இன்றளவும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் எம்.ஜி.ஆர் பிறந்த வீடு மற்றும் அவர் பிறந்த ஊர் இன்றும் எந்தவித அபிவிருத்திகளும் இன்றிக் காணப்படுகின்றன.
 
எம்ஜிஆர் சிறு வயதில் வணங்கிய ஆலயம் புனரமைக்கப்பட்டு வருவதைக் காண முடிந்தது.
 
அதேபோன்று, எம்ஜிஆர் விளையாடியதாகக் கூறப்படும் மைதானத்தில், இன்று சிறுவர் இல்லமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 
இந்த சிறுவர் இல்ல வளாகத்தில் அந்தப் பிரதேசத்திலுள்ள சிறுவர்களுக்கு மேலதிக நேர வகுப்புகள் எடுக்கப்படுவதுடன், விளையாடுவதற்காகவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
 
அதேபோன்று, எம்ஜிஆர் பிறந்ததாகக் கூறப்படும் கல்லாறு பகுதியிலுள்ள சில வீடுகளில் எம்ஜிஆரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.
 
 
எம்ஜிஆர் தொடர்பில் அந்த ஊரில் பிறந்த ரட்ணசபாபதி, பிபிசி தமிழிடம் பேசினார்.
 
''எம்ஜிஆர் இங்கு பிறந்தார் என்பது பெரிய விடயம். இந்த மண்ணிற்குப் பெருமை. அவர் இங்கிருந்து கண்டிக்கு போய், கண்டியிலிருந்து இந்தியாவிற்கு போன பிறகு, அந்த நாட்டிற்குப் போனதால்தான் பெரிய புகழைப் பெற்றார்.
 
இங்கிருந்திருந்தால்கூட அந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. எம்ஜிஆர் பிறந்ததைப் பற்றி சொல்லப் போனால், அவரின் நிறைய படங்களைப் பார்த்திருக்கின்றோம்.
 
அவருடைய அனுபவங்கள், அவர் இருந்த காலகட்டத்தில் என்னென்ன செய்தார் என்பதை பாடல்கள், படங்கள் மூலமாக அறிந்திருக்கின்றோம். அவர் ஒரு சகாப்தம் என்று சொல்லலாம். அவர் கல்லாறு பகுதியில் பிறந்தார் என்பது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது," என அவர் கூறுகின்றார்.
 
எம்ஜிஆர் வாழ்ந்த வீடு, அன்று எப்படி இருந்ததோ, அதே போன்றுதான் இன்றும் இருக்கின்றது என ரட்ணசபாபதி கவலை தெரிவித்தார்.
 
 
''அவர் வாழ்ந்த இந்த வீடு, அன்றைக்கு எப்படி இருந்ததோ, அந்தப் பழைமையைப் பராமரிக்கக்கூடிய அளவில் யாரும் இல்லை. இந்த லயின்கள் இடிந்து, உடைந்து மிக மோசமாக இருக்கின்றன.
 
அவர் ஞாபகமாக கட்டிக்கொடுப்பதற்குக்கூட யாரும் இல்லை. அவரின் பெயரை வைத்து இந்த ஊருக்கு எதாவது செய்யுங்கள். அவருக்காக நன்கொடை கொடுப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.
 
கல்லோயா பிரவை, எம்ஜிஆர் காலணி எனப் பெயரை வைப்பதற்குக்கூட நாங்கள் தயார் நிலையில் இருக்கின்றோம். அவரது உருவச் சிலையை அமைப்பதாகச் சொன்னார்கள். அதோடு சேர்ந்து, மக்களின் வீடுகளைப் பராமரித்து, சரியான நிலையில் செய்துகொடுப்பார்கள் என்றால் பெரிய ஒரு உதவியாக இருக்கும்," என அவர் கேட்டுக்கொள்கின்றார்.
 
லயின் அறைகளிலேயே எம்ஜிஆர் வசித்த வீடு மிகவும் மோசமாக இருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
''இந்த வீடுகள் 200 வருடங்கள் பழைமையானவை. வீடுகளின் பின்னால் அடியில் ஊற்றுகள் உள்ளன. காலம் செல்லச் செல்ல மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆரின் வீடு அதைவிட மோசமாக உள்ளது.
 
அந்த வீட்டிற்கு அருகில் ஆறொன்று வருகின்றது. மழைக் காலத்தில் சரியாக தண்ணீர் வருகின்றது. வெள்ள நீர் வருகின்றமையினால், அந்த வீடுதான் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றது.
 
நீர் அந்தக் கட்டடங்களில் பாய்வதால், சரிவுகள் ஏற்படுகின்றன. எம்ஜிஆர் இருந்த வீட்டில், அவர் மூலமாக ஏதாவது நடந்தால் மகிழ்ச்சி. அதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்," என அவர் கூறுகின்றார்.
 
 
இலங்கையில் எம்ஜிஆர் கண்டி நகரிலுள்ள வீடொன்றில் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்ற போதிலும், அது உறுதி இல்லை என அந்த வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
கண்டி நகரிலுள்ள இந்த வீடானது, இலங்கையிலேயே மிகவும் பழைமையான வீடு எனக் கூறப்படுகின்றது. அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தேவகோட்டை நாச்சியப்ப செட்டியார் என்பவரால் கட்டப்பட்ட வீடு என வரலாறு கூறுகின்றது. அவரது பரம்பரையினர் தொடர்ந்து 6வது பரம்பரையாக இந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றார்கள்.
 
கண்டி நகரில் இரண்டு மாடிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட முதலாவது வீடு இதுவென சில தரப்பினர் கூறி வருகின்றார்கள்.
 
மிக பிரமாண்டமான சுவர்கள், பர்மா தேக்கில் அமைக்கப்பட்ட தளபாடங்கள் என மிகப் பெறுமதி வாய்ந்த வீடாக இந்த வீடு அமைந்துள்ளது.
 
இந்த வீட்டில்தான் எம்ஜிஆர் சிறிது காலம் வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது.
 
எம்ஜிஆர் இந்த வீட்டில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் தமது முன்னோர்கள்கூட தம்மிடம் அது தொடர்பில் கூறவில்லை எனக் குறிப்பிடுகின்றார் அந்த வீட்டின் உரிமையாளர் சத்திவேல் பிள்ளை ஜோதிமதி மகாதேவ.
 
''வெளியில் உள்ளவர்கள் அவ்வாறு சொல்கின்றார்கள். வந்து வீட்டைப் பார்த்து விட்டுப் போறார்கள். ஆனால், அவர் இருந்தார் என்பதற்கு எங்களிடம் எந்தவோர் அத்தாட்சியும் இல்லை.
 
இங்கிருந்துதான் பள்ளிக்குச் சென்றார் என வெளியிலிருந்து வருபவர்கள் சொல்கின்றார்கள். நிறைய பேர் பார்ப்பதற்கு வருகின்றார்கள். அவருடைய ரசிகர்கள் எல்லாம் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
 
இந்தியாவிலிருந்தும் வருவார்கள். கேரளாவிலிருந்து வந்த அவருடைய உறவுக்காரர்கள், இரண்டு செங்கல்களைக்கூட அடிக்கல் நாட்டுவதற்காக வாங்கிக் கொண்டு போனார்கள்.
 
நிறைய பெண்கள், இந்த வீட்டு மண்ணை தொட்டுக் கும்பிட்டு, முத்தம் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். காரணம் என்னவென்றால், எம்ஜிஆர் தான் எங்களுக்கு தாலி செய்துகொடுத்தார் என்று சொல்கிறார்கள்.
 
நிறைய கண்ணீர் விட்டு விட்டுப் போகிறார்கள். அவர் நடந்த இடத்தில் நாங்கள் இருந்து விட்டுப் போகிறோம் என்று இருந்து விட்டுப் போகிறார்கள். ஆனால், அவர் இருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது. இது வெளியில் உள்ளவர்கள் சொல்வதுதான்," என சத்திவேல் பிள்ளை ஜோதிமதி மகாதேவ தெரிவிக்கின்றார்.
 
இலங்கையில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.
 
இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர்மட்ட குழு, எம்ஜிஆர் பிறந்த வாழ்ந்ததாகக் கூறப்படும் இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
 
இதன்போது, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தால் நினைவிடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டதாகப் பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
 
அத்துடன், எம்ஜிஆரின் பெயரில் வீட்டுத் திட்டம், மணி மண்டபம் உள்ளிட்ட திட்டங்களும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
 
அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்களின் இலங்கை விஜயம்
 
இலங்கையில் எம்ஜிஆருக்கு நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.
 
இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உயர்மட்ட குழு, எம்ஜிஆர் பிறந்த வாழ்ந்த இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
 
இதன்போது, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினால் நினைவிடம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டதாக பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
 
அத்துடன், எம்ஜிஆரின் பெயரில் வீட்டுத் திட்டம், மணி மண்டபம் உள்ளிட்ட திட்டங்களும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவை நேரில் சந்தித்த அண்ணாமலை....