Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்திற்கு முன் தீடீரென ஜிம்முக்கு போவது சரியா? - இளைஞர்களுக்கு உடல்நலம் பற்றி எச்சரிக்கை!

Advertiesment
திருமணத்திற்கு முன் தீடீரென ஜிம்முக்கு போவது சரியா? - இளைஞர்களுக்கு உடல்நலம் பற்றி எச்சரிக்கை!
, ஞாயிறு, 13 நவம்பர் 2022 (16:10 IST)
திருமணத்திற்கு முன் தீடீரென ஜிம்முக்கு செல்வதால் எலும்பு மூட்டுகளுக்கு அதிர்வு ஏற்படுவதாகவும், உடலையும், மூளையையும் குழப்பத்தில் தள்ளுவதாகவும் கூறுகிறார் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் அஸ்வின் விஜய்.
 
இளைஞர்கள் பலர் திருமணம் நாளில் அழகாக தெரியவேண்டும், உடல் இளைத்து உடலமைப்புக்கு ஏற்ற உடை அணியவேண்டும் என்பதற்காக திருமண நாளுக்கு முந்தைய ஆறு வாரங்கள், எட்டு வாரங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஆபத்தாக முடியும் என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய்.
webdunia
திருமணத்திற்கு முன்னதாக ஜிம்முக்கு செல்லும் இளைஞர்களின் உடல்நலன் குறித்து பேசிய அவர், ''பல ஆண்டுகள் உங்கள் உடல் ஒரு விதத்தில் இயங்கி இருக்கும். திடீரென அதிகபட்ச எடையை நீங்கள் குறைக்க தீவிரமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்தால், முதுகெலும்பு மற்றும் மூட்டுகளில் அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலைகூட சிலருக்கு ஏற்படும். வேகமாக ஓடுவது, குறிப்பிட்ட பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்வது ஆகியவற்றால், உடலில் உள்ள எலும்பு மூட்டுகளில் அதிர்வு ஏற்படும். கழுத்து பகுதி, முதுகு தண்டுவடம், கால் மூட்டு பகுதிகளில் அழுத்தம் அதிகமாக கொடுக்கப்பட்டதால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை உயர்வதை நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பார்க்கிறோம்,''என்கிறார்.
 
உணவு எடுத்துக்கொள்வதிலும், மாவு சத்து, கொழுப்பு சத்து உள்ள உணவுகளை தீடீரென குறைத்து உண்பதும் கேடாக மாறும் என்கிறார்.
 
''ஒரு சிலர் திருமணத்திற்காக எடை குறைப்பதை குறிக்கோளாக வைத்திருந்தால், உணவு பழக்கத்தை உடனே மாற்றுவதை ஒரு தீர்வாக வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்தில் உணவை குறைத்து, எடையை குறைத்தால், நீங்கள் மீண்டும் பழைய உணவு பழக்கத்திற்கு வரும்போது, அதே எடையை அடைவீர்கள், ஒரு சில சமயம் அந்த எடை இரட்டிப்பாகவும் மாறும். தினமும் பின்பற்றமுடியாத எந்த டயட் உணவு பழக்கமும் பலன் தராது,''என்கிறார் மருத்துவர் அஸ்வின் விஜய்.
 
''திருமணத்திற்கு பிறகு விருந்து கொடுக்கும் நிகழ்வுகள் தொடங்கும். பல நாளாக செய்த உடற்பயிற்சிகளை நீங்கள் நிறுத்தியிருப்பீர்கள். அளவுக்கு அதிகமான உணவையும் எடுத்துக்கொள்வீர்கள். அதிலும் மூன்று வேளையும் விருந்து உணவு சாப்பிட்டு, உடற்பயிற்சியும் இல்லாமல் போவதால் அதிக உடல்சோர்வு, மனக்குழப்பமும் ஏற்படும்.
 
அதிகளவிலான இனிப்புகளை விருந்துகளில் கொடுப்பார்கள், அதிக சக்கரை, சில மாதங்களாக செய்த உடற்பயிற்சிகள் ஏதுமில்லை என்றால், உடல் தள்ளாடும், குழம்பும்,'' என்பது மருத்துவரின் எச்சரிக்கை.
 
ஒரு நாளில் சுமார் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி ஏன் அவசியம் என்று விளக்கும் அவர், ''உடற்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புக்கள் சீராகும். உடலுக்கு இயக்கத்தை கொடுத்தால், உடலில் சுரப்பிகள் முறையாக வேலைசெய்யும், உங்களுள் ஒரு உத்வேகம் பிறக்கும். அது உங்களை நாள் முழுவதும் புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
 
அதுவே உங்கள் வாழ்நாள் பழக்கமானால், நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழமுடியும். உடலை அசைக்கவேண்டும்,நீண்ட நேரம் அமர்ந்து வேலைசெய்வது, நின்றபடியே வேலைசெய்வது உள்ளிட்ட நிலையில் உடலை வைத்திருந்தால்,மூட்டுகள் அசையாமல், ஓய்வு நிலையில் இருக்கும், அது பிற்காலத்தில் உங்களை நோயாளியாகிவிடும்,'' என்கிறார்.
 
''திருமணத்திற்கு முன் ஜிம்முக்கு செல்பவர்கள், குறைந்தபட்சம் திருமண சமயத்தில் தங்களது உடல் மீது அக்கறை கொள்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உடல் எடையை குறைப்பதைவிட, ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதைதான் குறிக்கோளாக வைத்திருக்கவேண்டும். அதுதான் உங்கள் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும், அது உங்களை உடற்பயிற்சி, முறையான உணவு பழக்கத்தை பின்பற்றுவதை ஊக்குவிக்கும்,'' என்கிறார் அஸ்வின் விஜய்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புகாரளிக்க சென்ற சிறுமி போலீஸால் வன்கொடுமை? – கேரளாவில் அதிர்ச்சி!